ரஷ்யாவின் வோல்கா ஆற்றங்கரையிலிருந்து இந்தியாவின் கங்கை ஆற்றங்கரை வரை பரவிய இந்தோ-ஐரோப்பிய இனக்குழு பண்பாட்டுப் பரவலைச் சிறுகதைகள் அடங்கிய ஒரு வரலாற்றுப் புனைவாக 'வோல்கா சே கங்கா' என இந்திமொழியில் எழுதி 1943ஆம் ஆண்டு வெளியிட்டார் ராகுல் சாங்கிருத்யாயன். இந்நூலை 1949ல் 'வோல்காவில் இருந்து கங்கைவரை' என கண. முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார்.
இந்தியாவின் மிகப்பழைய மொழிகளுள் ஒன்றாகவும் செம்மொழி வரிசையில் வைக்கப்படும் சமஸ்கிருதம் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. பிரித்தானிய இந்தியாவின் கல்கத்தாவில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய சர் வில்லியம் ஜோன்ஸ், 1786 ஆம் ஆண்டில், சமஸ்கிருதம், கிரீக், லத்தீன் போன்ற ஐரோப்பிய மொழிகளின் சில சொற்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கவனித்தார். இம்மொழிகள் பேசுவோரிடையே ஆயிரக்கணக்கான மைல் இடைவெளி இருந்தாலும்கூட ஐரோப்பிய மொழிகளும் சமஸ்கிருதம் மொழியும் ஏதோ ஒரு பொதுவான மூலமொழியிலிருந்து கிளைத்திருக்க வேண்டும் என்று கருதினார். இதன் பிறகு இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்ற கோட்பாடு மொழியியலாளர்களால் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி போன்று அதிக அளவில் பேசப்படும் மொழிகள் உட்பட; இன்று உலக மக்கள்தொகையில் சுமார் 40% மக்கள் பேசும் 400க்கும் மேற்பட்ட மொழிகள் இந்த மொழிக் குடும்பத்தில் அடங்கும்.
சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக ஆதி இந்தோ-ஐரோப்பிய மொழியின் (PIE- Proto Indo European language) தோற்றம், பேசியவர்கள் இருப்பிடம் குறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது. இம்மொழி பேசியவர்கள் ஸ்டெப்பி புல்வெளியில் வாழ்ந்தவர்கள் என்று "ஸ்டெப்பி" கருதுகோள் வைக்கப்பட்டது. பண்டைய மரபணுக்களில் மேற்கொண்ட ஆய்வுகள் இம்மொழி பேசியவர்களான ‘யம்னயா’ (Yamnaya) மக்கள், 6500 ஆண்டுகளுக்கு முன்னர் செம்பு காலத்தில் வாழ்ந்த இடம் ரஷ்யாவின் வோல்கா ஆற்றின் இறுதிப் பகுதி என்பதாக "நேச்சர்" இதழில் வெளியான அண்மைய இரு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன (Iosif Lazaridis et al., "The Genetic Origin of the Indo-Europeans", Nature 2025). இந்த ஆய்வறிக்கையில் 93 ஆய்வாளர்கள் பங்கேற்று உள்ளார்கள். பல ஆண்டுகளாகப் பல நாடுகளைச் சேர்ந்த மானுடவியல், மொழியியல், தொல்லியல், மரபியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அண்மையில் பல துறையினரும் இணைந்து பங்காற்றியுள்ளார்கள். இந்த ஆய்வின் முடிவை இதுவரை இந்தோ-ஐரோப்பிய மொழியின் தோற்றம் குறித்த மொழியியல் புதிரின் விடுபட்ட துண்டு கிடைத்தாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
யூரேசியா முழுவதும் கிமு 6400-2000க்கு இடைப்பட்ட காலத்துத் தொல்பொருள் தளங்களிலிருந்து தோண்டிய 435 மனித எலும்பு படிமங்களில் மரபணு ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின்படி, இந்தோ-ஐரோப்பிய மொழியானது; 'காகசஸ்-லோயர் வோல்கா மக்கள்' (Caucasus-Lower Volga people, or CLV) என அழைக்கப்படும் யம்னயா என்ற வேட்டையாடியும் சேகரித்தும் உண்ட (Hunter-gatherer) இனக்குழுவின் மூதாதையர்களுடன் தொடங்கியது. அறிவியல்படி மரபியல் பகுப்பாய்வால் மக்கள் பேசிய மொழியைக் கண்டறிய இயலாது. ஆனால், தொல்லியல் சான்றுகள் வழங்கிய மரபணுவியல் தரவுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட மொழிக் குடும்பம் பேசியவர்களின் மரபணு எங்கிருந்து எக்காலத்தில் எங்கெல்லாம் பரவியது என்ற சான்றுகளைத் தரும் முறையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒரு குறிப்பிட்ட மரபணுவின் தொடர்ச்சியைத் தொடர்தலை 'தடய சாயம்' (tracer dye) கொண்டு அறிவது போல என ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மரபியல் பேராசிரியர் டேவிட் ரீச் கூறியுள்ளார். இந்த மொழிகள் சென்ற எல்லா இடங்களிலும் யம்னயா மரபணுக்களின் தொடர்ச்சியைக் காணமுடிவதாகவும் டேவிட் ரீச் கூறுகிறார். அனைத்து இந்தோ-ஐரோப்பிய மொழிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு மரபணு படம் போல ஓர் ஆய்வு அமைவது இதுவே முதல் முறை எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வோல்கா பகுதியில் ஸ்டெப்பி புல்வெளியில் வேட்டையாடி வாழ்ந்த ஆரியர்களின் மூதாதையர்களான யம்னயா இனக்குழுப் பரவலுக்கு பால்பொருட்களின் பயன்பாடு முதன்மைக் காரணமாக அமைந்தது. சக்கரங்கள் கொண்ட மாட்டு வண்டிகளும், குதிரைச் சவாரியும், பால்பொருட்கள் உணவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியும் மேய்ப்பாளர்களை உருவாக்கியது. இத்தகைய மாற்றம் மனிதயினப் பரவலுக்கு அடிப்படையாக அமைந்தது. அதாவது, பால் என்ற ஒரு புதிய உணவு வகை, அது உருவாக்கிய புதிய பொருளாதாரம், அதனால் ஒரு புதிய வாழ்க்கைமுறை என வரலாற்றில் மனிதர்களின் பரவலுக்கு ‘பால்’ காரணமாக அமைந்தது என நேச்சர் இதழில் முன்னர் வெளியான ஆய்வு ஒன்று அறிவித்திருந்தது (Shevan Wilkinet al., "Dairying enabled Early Bronze Age Yamnaya steppe expansions", Nature 2021). புதிய மேய்ச்சல் நிலம் தேடவேண்டிய தேவையால் புலம்பெயர்ந்து ஐரோப்பாவின் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதியிலும், தெற்கில் மத்திய ஆசியா பகுதியிலும் அவர்கள் பரவி, அவர்கள் சென்ற இடங்களில் வாழ்ந்தவர்களுடன் இனக்கலப்புடன் மொழி மற்றும் பண்பாட்டுக் கலப்பும் நிகழ்ந்தது.
சென்ற
இடங்களின் பண்பாடுகளைத் தழுவி தங்களைத் தகவமைத்துக் கொண்ட வாழ்க்கைமுறை
இப்பரவலுக்கு வெற்றிகரமாக உதவியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆக, சமஸ்கிருதம்
இந்தியாவில் ஊடுருவிய மொழியாக இருந்தாலும், தற்போது பெரும்பாலும் பொது
பேச்சு வழக்கில் இல்லாத மொழியாக மாறினாலும்; அதன் வழித்தோன்றல் இந்தி மொழி
வழியாகத் தொடர்வதை இதற்கான
எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
2/19/2025 வோல்காவில் இருந்து கங்கைவரை மரபணு பரவல்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi