'நமது கல்வி முறை'
"நியாயமான தேர்வு முறை என்பதற்காக எல்லோரும் ஒரே தேர்வை எழுத வேண்டும்: அனைவரும் தயவுசெய்து அந்த மரத்தில் ஏறுங்கள்" என்று கூறும் இந்தக் கருத்துப்படத்தை நாம் நன்கு அறிவோம். இது நமது கல்வி முறையை, அதில் உள்ள குறைபாட்டை விமர்சிக்கும் ஒரு கருத்துப்படம். இப்படத்தில் உள்ள கருத்து அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதாக அறியப்படும், "எல்லோரும் ஒரு மேதைதான். ஆனால், ஒரு மீனை அதன் மரத்தில் ஏறும் திறனை வைத்து நீங்கள் மதிப்பிட்டால், அது தனது வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு முட்டாள் என்று நம்பியே வாழும்" என்ற கருத்தைத் தெளிவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கருத்துப்படம். உண்மையில் இந்தச் சொற்றொடர் தவறாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியதாகப் பரவலாக அறியப்படும் ஒரு கூற்று. பல பத்தாண்டுகளாகவே கல்வித்துறை சார்ந்த அறிஞர்கள் பலர் சொல்லிவரும் கருத்துதான் இது என்று இப்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் 'பொதுவான கல்வி' ஒன்றைக் கற்கக் கிடைக்கும் வாய்ப்பும், கற்கும் சூழ்நிலையும், அதில் அவர் காட்டும் திறமையும், பெறும் தகுதியும் வேறு வேறு என்பது மறுக்க இயலாத உண்மை. பல பின்புலத்திலிருந்து வருபவர்கள் மாணவர்கள். அவர்கள் பெறும் தேர்ச்சி மதிப்பெண்களை மட்டும் பயன்படுத்தி ஒரு வேலைக்கான அல்லது உயர்படிப்பிற்கான தகுதியை நிர்ணயித்தால், பல நூறாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவே பின்தங்கிவிடக் கூடிய நிலை தொடரும் என்பது மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் வைக்கும் வாதம். குறிப்பிடப்படும் இந்த நிலை இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ உரிய சூழல் மட்டும் அல்ல. அமெரிக்கக் கல்விப்புலத்திலும் இந்த வாதம் பல ஆண்டுகளாக உள்ளது என்பதைத்தான் அங்குப் பரவலாக விவாதத்தில் உள்ள இக்கருத்தை விளக்கும் இப்படம் காண்பிக்கிறது. கல்வித் துறையில் இந்த உருவகம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இணையத்தேடலில் மேலும் பல செய்திகள் இது குறித்துக் கிடைக்கும்.
தமிழ்நாட்டிலும் வகுப்புரிமை குறித்த கருத்து தொடங்கப்பட்டு ஒரு நூற்றாண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டதும் வகுப்புரிமையை நிலை நாட்டவே என்பதுதான் இந்திய வரலாறு. தமிழகத்தில் தொடங்கிய போராட்டத்தால் ஒன்றிய அரசு அதைக் கவனத்தில் கொண்டு, ஒன்றிய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கரும் அறத்தை நிலை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுத்தார்கள்.
அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, அரசமைப்பு விதி 15(4) உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவின்படிதான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு நாடு முழுவதும், பணியில் கல்வியில் இட ஒதுக்கீடு ஒன்றிய மாநில அரசுகளால் அளிக்கப்படுகிறது. மருத்துவக் கல்வி போன்ற தொழிற் கல்வி நுழைவுத் தேர்வுகள், கல்லூரியில் மாணவர் சேர்ப்பு நடக்கும் காலங்களில் பொதுவான ஒரு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் தேர்வு குறித்த சர்ச்சைகள் எழும்புவது காலங்காலமாகத் தொடரும் ஒரு வழக்கம்.
இந்தச் சர்ச்சைக்கான தீர்வை, அன்றே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவர் ஒரு குறளில் உணர்த்தியுள்ளார் என்பது பரவலாகப் பேசப்பட்டதில்லை.
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
[அறத்துப்பால், நடுவு நிலைமை, குறள் - 111]
இக்குறளை நாம் இக்காலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது இன்றியமையாதது. இக்குறளுக்குத் தமிழ் அறிஞர்கள் வழங்கிய உரைகள் பின்வருமாறு:
மணக்குடவர்: நடுவு நிலைமை என்று சொல்லப்படுகின்ற ஒன்று நல்லதே: அவரவர் நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.
பரிமேலழகர் : தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின்.
மு.வரதராசன்: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
வ.சுப.மாணிக்கம் : இடந்தோறும் முறையோடு ஒழுக முடியின் நடுவு நிலைமை மிகச் சிறந்த அறமாம்.
"அவரவர் நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்" என்று மணக்குடவர் தெளிவுபடுத்துவதன் அடிப்படையில் படித்தோம் என்றால் இக்குறளின் பொருளை; பகுதியால் பாற்பட்டு நடந்து கொள்வார் எனின் நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஒன்று நல்லதே என்பதை இப்பாடலின் பொருளாகக் கொள்ள முடிகிறது. 'பகுதியால் பாற்பட்டு' என்பது பல வேறு பின்புலம் கொண்ட மக்களைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளலாம். பகுதியான் என்பது பகுதிதோறும் எனப் பொருள்படும் என விளக்குவார் பரிமேலழகர். மக்கட்பகுதி, அவரவர் நிலைமைப் பகுதி, அறப்பகுதி எனவும் உரைகாரர்கள் இதற்குப் பொருள் கூறுவர்.
ஆக, பலபிரிவு மக்களின் தேவை உணர்ந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் நலன் விளையும் வகையில் நீதி வழங்கப்படும் முறையை 'எந்தப் பகுதியினரிடத்தும் நேர்மையாக நடந்து கொள்ளும் அறம் சார்ந்த நடுவு நிலைமை' என்கிறார் வள்ளுவர். 'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்று கூறிய வள்ளுவர் அறம் எது என்பதில் கொண்ட நிலைப்பாட்டை இக்குறளும் விளக்குகிறது.
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 313 - 03.12.2025]
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi
