Tuesday, December 2, 2025

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

      பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
      திண்மை உண்டாகப் பெறின் (54)
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதி நிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? என்று இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தருகிறார் மு.வரதராசன்.

கற்பென்பது ஒருத்திக்கு  ஒருவன் என்று வாழும் இல்லற வாழ்வைக் குறிப்பதாகப் பொருள் கூறப்படும்.  ஆனால் ஆணுக்குக் கற்பு  என்ற கட்டுப்பாடு இல்லை என்பது இன்றுவரை நடைமுறை வழக்கு. கைம்பெண் ஆனவள் வேறு ஆணுடன் இல்லறம் தொடரும்  நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அவளை இறந்த கணவனுடன் சேர்த்து உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் முறை முன்னர்  இருந்தது.  ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான சட்டத்தை அவர்கள் இயற்றும் வரை இந்தியாவின் பல பகுதிகளில்  'சதி' என்ற இந்தக் காட்டுமிராண்டி சடங்கு வழக்கமாகவே இருந்தது.

சென்ற நூற்றாண்டில் பெண்ணுரிமைக்குக்  குரல் கொடுத்த புரட்சியாளர்களான பெரியார், பாரதியார் போன்றோர் பெண்களுக்கு  மட்டும் கற்பை  வலியுறுத்துவதை ஏற்றவர்கள்  இல்லை. கற்பை இருபாலருக்கும் பொதுமைப்  படுத்தினார்கள்.  
      "கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
      கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"
என்று  முழங்கினார் பாரதி. "சந்திரிகையின் கதை" என்று அவர் எழுதிய புனைகதை மூலம்  விசாலாட்சி என்ற இளம் கைம்பெண் ஒருத்திக்கு மறுமணம் குறித்தும் எழுதி இருப்பார்.

அதற்கும் முன்னர் ஆரியப் பண்பாட்டின் தாக்கமாகப் பெண்கள் கற்பு என்பது குறித்து மூளைச் சலவை செய்யப் பட்டார்கள் என்பதை  இக்கால 'இசட் தலைமுறை' (Generation Z) அறிந்திருக்க மாட்டார்கள். கற்பு என்பதை 'பதிவ்ரதாத்வம்' அல்லது பதிவிரதம்  என்று சாத்திரங்களில் விளக்கினார்கள்.  "பதிவ்ரதாத்வம் - நாரீணாம் - ஏதத் -ஏவ - ஸநாதனம்" என்று மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 249ஆவது அத்தியாயம் 12ஆவது சுலோகம் கூறுகிறதாம்.

ஆண்கள் மேலோகம் செல்ல வேண்டுமானால் (உத்தம கதி அடைதல்) அவர்களுடைய ஊனக்கண்ணுக்குத் தெரியாத கடவுளை சாத்திரங்கள் கூறுவது படி  மனதில் உருவகித்துக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை வணங்க வேண்டும்.  ஆண்கள் கவுளை வழிபடுதல், வேள்வி செய்தல், யக்ஞம், தானம்  என்ற பல செய்தே கடவுள் அருளைப் பெற வேண்டி இருக்கிறது.
 
ஆனால் பெண்களுக்கு இத்தகைய கவலையே இல்லை.  அவர்கள் தங்கள் கண்ணெதிரே காட்சி தரும் கணவனையே தெய்வம் என வழிபாடு செய்து சொர்க்கம் போகலாம்  என  கடவுளின் ஆணையான சாத்திரங்கள் கூறுகின்றனவாம். கணவனைத்  தெய்வமாக மதித்து அவனுக்குப் பணிவிடை செய்தாலே எளிதாகச் சொர்க்கம் போகலாம். அக்கணவன் கேடு கெட்டவனாக இருந்தாலும் கூட கடவுள் அவன் வழியே மனைவிக்கு அருள் தந்து அவளைக்  கடவுள் கடைத்தேற்றுவாராம். அதாவது மற்றவர்களைவிட பதிவ்ரதாஸ்தரீகளே எளிதில்  கடைத்தேறும் பாக்கியம் பெற்றவராகி யிருக்கிறவர்கள் என்று சாத்திரம் பெண்களுக்கு வழி காட்டுவதாகக் கூறப்படுகிறது.

"பெண்டிர்க்குப் பதியே தெய்வம்; வேறு புகலிடம் இல்லை" என மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 250ஆவது அத்தியாயம் 25ஆவது சுலோகம் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.  உடலை வருத்தி மிகுந்த துன்பங்களுடன் ஓர் ஆண் அல்லது கணவன் அடையும் பயனை,  கணவனை  வணங்கி பூஜை செய்வதினாலேயே பெண்ணானவள் எளிதில் அடைந்துவிடுவாள்  என்று  அதற்கு அடுத்து வரும் மகாபாரத அனுசாஸனிகபர்வம் பர்வம் 250ஆவது அத்தியாயம் 26ஆவது சுலோகமும் கூறுகிறதாம்!!!

பெண்களுக்கு ஏதோ சிறப்புச் சலுகை அளிப்பது போல ஆசை வார்த்தைகள் எல்லாம் காட்டி,  மனைவியைக் கணவனுக்குக் குற்றேவல்  செய்ய வைத்து ஆண்கள்  எவ்வாறு சுகமாக வாழ்ந்திருக்கிறார்கள், அதற்குச் சாத்திரங்கள் எவ்வாறு உதவுகின்றன என்று சிந்தித்தால் பெண்கள் ஏமாற்றப் பட்ட நிலை கண்டு நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது என்று புரியவில்லை.  



மணமான பெண்கள் கணவனையே தெய்வமாகத் தொழ வேண்டும் பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான் பதிவிரதம் அல்லது  கற்பு. இந்நிலை மேன்மை அடையும் பொழுது மனதில் முதிர்ச்சி ஏற்படுகிறது மனம் ஒருமைப் படுகிறது. அப்போது கடவுளின் அருளால்  பெய் என்றால் மழை பெய்யக் கூடிய சக்தி கிடைக்குமாம்.  அதாவது, பெய்யெனப் பெய்யும் மழை. பெரிய யோகிக்கும் கூட பெரிய முயற்சி மூலம்தான் கிட்டும் இந்தச் சக்தி பதிவிரதைக்கு எளிதில் கிட்டிவிடுகிறதாம். அடேயப்பா ?? என்ற வியப்புதான் வருகிறது. ஏமாற்றுவதற்கும் ஓர் எல்லை இல்லையா ?  மனம் கூசாமல்  இதை எல்லாம் சாத்திரம் என்று கூறுபவர்கள் மீது மோசடி  வழக்குதான் போட வேண்டும்.

மாதம் மும்மாரிப் பெய்கிறதா என அக்காலத்துத் தெருக்கூத்து,  நாடகங்களில் அரசர் அமைச்சரைக் கேட்பதாகக் காட்சிகள் வரும். பராசக்தி படத்தில் அது ஓர் எள்ளல் காட்சியாக "மந்திரி நமது- மாநகர் தன்னில்- மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்ற வசனம்  இடம் பெறுவதை நினைவு கூரலாம்.
     "வேதமோதிய வேதியர்க்கோர்மழை,
     நீதிதவறா நெறியினர்க் கோர்மழை,
     காதல்கற்புடை மங்கையர்க்கோர் மழை,
     மாதம் மும்மழை பெய்யெனப் பெய்யுமே"
         (விவேகசிந்தாமணி பாடல்)
என மூன்று மழைகளில் ஒரு மழை பெண்களின் கற்புடன் தொடர்பு படுத்தி இருப்பதைக் காணலாம்.  நாட்டில் வறட்சி என்றால் பெண்களிடம் கற்பில்லை என்று பழி போடக்கூடிய இக்கட்டும் இதனால்  உள்ளது அல்லவா?

மழைபொழிதல் குறித்து சுற்றுச்சூழலியல், அறிவியல் பாடங்களில் அறிந்ததைப் பெண்கள் வாழ்வில்  தொடர்புப்படுத்தி தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
--


கட்டுரைக்கு உதவிய நூல்: ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த திவ்ய ஸ்ரீமுகத்துடன் கூடிய "திருக்குறள் நூற்றெட்டு" என்ற தலைப்புடன் 1950ஆம் ஆண்டு ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்ட நூல்.

நன்றி :
பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .
- முனைவர் தேமொழி  
சக்தி இதழ் [டிசம்பர் 2025]
https://archive.org/details/sakthi-202512
பக்கம்: 76-78