திருக்குறள் அந்தாதி
ஒரு பாடலில் முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி [அந்தம்(முடிவு)+ஆதி(தொடக்கம்)] ஆகும். அந்தாதி வகை இலக்கியங்களின் இலக்கணம்; ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையுமாறு பாடல்களைப் புனைவதைக் குறிக்கும். இவ்வகைப் பாடல்கள் அகரவரிசையில் உள்ள ஆத்திசூடி பாடல்களைப் போல கற்பவருக்கு உதவும் வகையில் எளிதில் நினைவில் தங்கும் பண்பு கொண்டவை.
சங்க நூலான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து தொகுப்பில் உள்ள பத்து பாடல்களில் அந்தாதி அமைப்பைக் காணமுடிகிறது. முழுவதும் அந்தாதி அமைப்பில் அமைந்த முதல் நூலாகக் கிடைப்பது காரைக்கால் அம்மையாரின் 'அற்புதத் திருவந்தாதி' ஆகும். ஆத்திசூடி பாடல் முறைக்கு எவ்வாறு ஔவை தொடக்கமோ அவ்வாறு அந்தாதி இலக்கியத்திற்கும் மற்றொரு அம்மையே தொடக்கம். பின்னர் புகழ்பெற்ற பல அந்தாதி நூல்கள் தோன்றின.
குறளுக்குக் கிடைத்த பழைய உரைநூல்களை ஒப்பிட்டு ஆராய்ந்தோர் வள்ளுவத்தில் அதிகார வரிசைமுறை, குறள் வரிசைமுறை, அதிகாரப் பெயர்கள் ஆகிய அமைப்புமுறை ஒவ்வொரு உரையாசிரியருக்கும் வேறுபடுகிறது என்பதனால் இன்று நாம் அறியும் திருக்குறள் அமைப்பு முறை திருவள்ளுவர் வடிவமைத்ததல்ல என்று கருதுகின்றனர். உரையாசிரியர்கள் பலரும் அதிகாரங்களை இயல் மாற்றி வகைப்படுத்தியும் அதிகாரத்திற்குள் வரும் குறட்பாக்களை இடம் மாற்றியும் அமைத்து உரை வகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நம் வழக்கத்தில் உள்ள திருக்குறளின் அதிகாரங்கள், அவற்றில் குறள் வரிசை வைப்பு முறை பரிமேலழகர் அமைத்தது. இவ்வாறான பரிமேலழகர் வைப்புமுறையில் வள்ளுவர் யாத்த குறள்களுள் ஒரு சிலவும் அந்தாதி முறையில் தானே அமைந்துள்ளன.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு (20)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு (21)
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் (52)
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (53)
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு (358)
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண் (574)
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும் (575)
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று (587)
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் (588)
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706)
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும் (707)
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (788)
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை (789)
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (801)
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன் (802)
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி (1022)
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் (1023)
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல் (696)
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் (697)
இவை குறள் வரிசை வைப்பு முறையில் அமைந்தவை. இருப்பினும் நாமும் கூட அந்தாதி முறையில் குறள்களை மேலே காண்பது போல இரண்டிரண்டு குறள்களாகவோ அல்லது கீழுள்ளது போல ஒரு நீண்ட அந்தாதித் தொடராகவோ அமைக்கலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (1)
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு (425)
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர் (430)
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் ( 1040)
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு (784)
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர் (914)
இதுபோன்றே; ஆர்.கே. அரங்கசாமி அவர்களால் அந்தாதியாகத் தொகுக்கப்பட்ட "திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் அந்தாதி : மூலமும் உரையும் (1946)" நூலில் 151 குறட்பாக்கள் அந்தாதி முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு குறள்தேனீ வினாடி வினா போட்டிகள் போல, காலிறுதி அரையிறுதி ஆண்டு நீண்ட விடுமுறை நாட்களில் அவர்களால் இயன்றவரை ஒரு நீண்ட திருக்குறள் அந்தாதி உருவாக்குவதை வீட்டுப்பாடமாகக் கொடுத்தால் விளையாட்டு போல அவர்கள் குறள் கற்கும் வாய்ப்பு உண்டு.
-----------------------------------
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi