Tuesday, September 2, 2025

குறளின் ஈற்றடிகள்

குறளின் ஈற்றடிகள்

திருக்குறளின் வெண்பாக்கள் ஏழு சீர்களைக் கொண்டு இரண்டே அடிகளில் அமைந்த குறள் வெண்பாக்கள். ஈற்றடி அல்லது இறுதி அடி முச்சீராலும் ஏனையடி நாற்சீராலும் வெண்பா இலக்கணப்படி அமைந்தவை வள்ளுவரின் குறட்பாக்கள்.   “ஈற்றடி முச்சீராகவும், மற்றையடி நாற்சீராகவும் பெற்று, காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர்களும் இருவகை வெண்டளைகளுங் கொண்டு, மற்றைச் சீரும் தளையும் பெறாமல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றைப் பெற்று வருவதே வெண்பாவின் பொது இலக்கணமாம்” என்று வரையறுக்கிறது இலக்கண நூல். 

ஈற்றடி ஒன்று கொடுக்கப்பட்டு அதற்கு வெண்பாக்கள் எழுதுவது மரபுப்பாக்கள் புனைவோர் இடையே நடக்கும் ஓர் அறிவார்ந்த போட்டி. 'பாரதி சின்னப்பயல்' என்று கொடுக்கப்பட்ட ஈற்றடிக்குத் தன் பதினைந்தாம் வயதிலேயே வெண்பா புனைந்து அவையோரை வியக்கவைத்தவர் மகாகவி சுப்ரமணிய பாரதி.  

"மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற சொற்றொடர், மனம் போனபடி புனைகதைகள் பல கதைக்கப்படும் இன்றைய இணைய உலகில் இன்று பலருக்கும் அறிவுறுத்தப் படும் சொற்றொடர். இது குறளின் புகழ் பெற்ற ஈற்றடி.  இது போலக் குறளின் பல ஈற்றடிகளே தனித்து நின்று பழமொழி போல ஒரு வாழ்வியல் நெறியையோ,  மாறாத உலக உண்மையையோ உணர்த்திச் செல்லும்.  யாவரும் அறிந்த பல ஈற்றடிகள் இருப்பினும் 'கனி இருப்பக் காய்கவர்ந் தற்று',  'அறனல்ல செய்யாமை நன்று',  'பயனில சொல்லாமை நன்று' போன்ற ஈற்றடிகள் தனித்து நின்றே நன்னெறியைக் குறிப்பிடுவன. 

சில குறட்பாக்களின் ஈற்றடிகளைச் சொன்னாலே குறள் முழுமையையும் சொல்லத் தேவையின்றி நினைவிற்கு வரும் வகையில் புகழ்பெற்ற ஈற்றடிகளும் உள்ளன.  எடுத்துக் காட்டாக,  'நிற்க அதற்குத் தக', 'நாவினால் சுட்ட வடு', 'சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' போன்ற ஈற்றடிகள் அத்தகைய சிறப்பு கொண்ட ஈற்றடிகள்.  

தான் எழுதிய 1330 குறட்பாக்களில் வள்ளுவர் சில ஈற்றடிகளை மீண்டும் மீண்டும் பயன் கொண்டுள்ளார். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 26 குறட்பாக்களின் ஈற்றடிகள் மற்றொரு குறளின்  இறுதி அடியாகவும்  உள்ளது. இணைக்கப்பட்டுள்ள குறள் அட்டவணை அவ்வாறு ஒரே ஈற்றடிகளைக் கொண்டவற்றைப் பட்டியலிட்டுள்ளது.



'ஏதம் பலவுந் தரும்' என்ற ஈற்றடி மூன்று முறை திருக்குறளில் இடம் பெறக் காணலாம்.  இவை தவிர்த்த மற்றவை இரண்டிரண்டு முறைகள் வள்ளுவரால் எடுத்தாளப்பட்டுள்ளன.  ஒரே ஈற்றடிகள் ஒரே அதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளன. உட்பகை அதிகாரத்தின் 'உட்பகை உற்ற குடி' என்ற ஈற்றடியும்; காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் 'ஏதிலர் என்னும்இவ் வூர்' என்ற ஈற்றடியும்; நடுவு நிலைமை அதிகாரத்தின் 'கோடாமை சான்றோர்க் கணி' என்ற ஈற்றடி போன்றவை ஒரே அதிகாரத்தில் இடம்பிடிக்கும் ஈற்றடிகள். இவ்வாறு ஒரே அதிகாரத்தில் அமையாத ஈற்றடிகளும் உள்ளன.  

சொல்லுக்குச் சொல் மாற்றமின்றி  அமையும் இத்தகைய ஈற்றடிகள் தவிர்த்து,  சற்றேறக் குறைய ஒத்திருக்கும் ஈற்றடிகளைக் கொண்டவையாக மேலும் 9 குறட்பாக்களும் உள்ளன. அவற்றுள் சில: 
'தாழாது உஞற்று பவர்' (620 ) - 'தாழாது உஞற்று பவர்க்கு' (1024); 
'நல்குரவு என்னும் நசை' (1043) -'நல்குவர் என்னும் நசை' (1156); 
'மாசறு காட்சி யவர்'(199) - 'மாசறு காட்சி யவர்க்கு'(352) போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் 

இவ்வாறு அமையும் ஈற்றடியைக் கொண்ட குறட்பாக்களை ஒப்பிட்டுக் கொடுக்கப்பட்ட ஈற்றடி மூலம் வள்ளுவர் சொல்ல வரும் கருத்து என்ன?  அவர் என்ன வலியுறுத்த விரும்புகிறார்? என்ன நோக்கத்தில் கையாண்டுள்ளார் என்று ஆராய்வது  மேலும் பயனுள்ளவகையில் அமையும்.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 300   -  3.09.2025]




#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi