யாமறிந்தவரையில் . . .
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்
என்று தமிழின் சிறப்பின் மீது பெருமிதம் கொண்டு பாடும் பாரதியார், அடுத்த பாடலில்;
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை, உண்மை
வெறும் புகழ்ச்சியில்லை.
தமிழ்ப் புலவர்கள் பற்றியும் பெருமிதம் கொள்கிறார்.
இவ்வாறு பாரதி போலவே வள்ளுவரும் 'நான் அறிந்தவரையில்', 'எனக்குத் தெரிந்தவற்றில்', என்று 'தான் அறிந்தவரையில்' தன் கருத்துகளாகக் கூறும் குறள்களும் சில உள்ளன. குறள் கூறும் 1330 கருத்துகளும் வள்ளுவரின் கருத்துக்களே என்றாலும், வள்ளுவர் இதுபோல தன் கருத்து என்ற கோணத்தில் என்ன கருத்துக்களைக் கூறுகிறார் என்று அறியும் ஆவலும் தோன்றுகிறது. இது போன்ற ஆய்வுகளுக்கு முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவு (Concordance for Tamil Literature - http://tamilconcordance.in/index.html) தளம் மிக உதவியாக இருக்கும். திருக்குறளில் 'யாம்' என்ற சொல் 13 குறள்களில் 14 முறை (1140ஆம் குறளில் இருமுறை) வருகிறது. 'யாமும்' என்ற சொல் காதலியின் கூற்றாக உள்ள காமத்துப் பாலின் இரு குறள்களில் வருகிறது.
வள்ளுவர் அறிந்த வரையில்:
குறிப்பு: அடைப்புக் குறிக்குள் குறள் எண்ணும், குறளுக்கு மு. வரதராசனார் வழங்கிய விளக்க உரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. (61)
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. (300)
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். (1071)
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
நான் அறிந்தவற்றில் அறிவுள்ள நன்மக்களைப் பெறுவதே சிறந்த பேறு; நான் அறிந்தவற்றில் வாய்மையே பண்புகளில் சிறந்த பண்பு; நான் அறிந்தவற்றில் கயவர்களும் மக்களைப்போலவே இருக்கும் ஒப்புமை வியக்கத்தக்கது என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவர் என்னும் காதலர்:
கூகுள் இணையத் தேடலின் முடிவாகக் கிடைக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் (Google search results: About 'N' results, in 'T' seconds) மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற, பெரும்பாலோர் அறிந்த குறளாக தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற வள்ளுவத்தின் முதல் குறள். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது, இல்வாழ்க்கையின் சிறப்பை வலியுறுத்தும் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறள். வாழ்க்கை நெறிகளை வகுத்தளிக்க முடிவெடுத்த வள்ளுவர் அறம், பொருள் ஆகியவற்றுடன் இல்லறத்திற்கு வழிகாட்டும் இன்பம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முப்பாலின் மூன்றாம் பாலான காமத்துப் பாலில் 250 குறட்பாக்களை அருளியுள்ளார்.
இவற்றுள் 'யாம்' என்று திருவள்ளுவர் தன்னையே ஒரு காதலராகாக் குறிப்பிட்டு எழுதிய பாடல்களும் உள்ளன. அவ்வாறு, 'யாம்' என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் கீழ்க்காணும் குறள்கள் மூலம் அறிய முடிகிறது.
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். (1111)
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். (1123)
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. (1329)
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. (1140)
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. (1171)
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
(குறிப்பு: மேலே இறுதியாகக் கொடுக்கப்பட்ட இரு குறள்களும் [1140, 1171] காதலியின் கூற்றாகப் பெரும்பாலும் பொருள் கூறப்படுகிறது.)
இவை தவிர்த்து; 1150, 1245, 1312 'யாம்' என்று காதலி கூற்றாகவும்; 790, 844 'தான் என்ற எண்ணம்', 'தான் என்னும் செருக்கு' போன்ற பொருள்களிலும் "யாம்" என்ற சொல் திருக்குறளில் இடம் பெறுகிறது.
[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 291-02.07.2025 & இதழ்: 292 - 09.07.2025]
#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi