Wednesday, March 12, 2025

எண்நாள் திங்கள் அனைய தெண்ணீர்ச் சிறுகுளம்

      அறையும் பொறையும் மணந்த தலைய

      ‘எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்

      தெண்ணீர்ச் சிறுகுளம்’ கீள்வது மாதோ

      கூர்வேல் குவைஇய மொய்ம்பின்

      தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!

            [புறநானூறு 118 - கபிலர்]         

தேர் வண்மையால் சிறந்தவன் வள்ளல் பாரி! மூவேந்தரின் சூழ்ச்சியான படையெடுப்பால் அவன் நாடு வெல்லப்பட்டது, அவனும் கொல்லப்பட்டான். அச்சூழ்நிலையில்; எட்டாம் நாளின் பிறை நிலவு போல (சற்றொப்ப அறைவட்ட வடிவில்) வளைந்த கரையையும், தெளிந்த நீரையும் கொண்ட சிறு குளம் அழிவது போல, பாரியின் நாடும் இனி அவனுடைய மேலாண்மை இன்றி அழிந்துவிடுமோ எனப் பாரியின் மறைவிற்குப் பிறகு பறம்பு நாட்டின் நிலையைக் கண்டு இரங்கிக் கையறு நிலையில் கலக்கமுடன் பாடுகிறார் கபிலர்.

ஆற்றின் நீரோட்டப் பாதை நிலையானது அல்ல,  தொடர்ந்து ஆறு தன் பாதையைப் பற்பலக் காரணங்களால் மாற்றிக் கொண்டேதான் இருக்கும்.  ஆற்று நீரின் பாதை மாறுவதால் தனித்து விடப்படும்  வளைவான நன்னீர் ஏரி (அல்லது குளம்) தமிழில் 'குதிரைக் குளம்பு' ஏரி (Oxbow lake) அல்லது குளம் என அழைக்கப்படும். ஆங்கிலத்தில் நுகத்தடியில் (yoke) பூட்டப்படும் மாட்டின் கழுத்து வளைவான 'ஆக்ஸ்பவ்' (Oxbow) போன்ற வடிவத்தைக் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் ஆக்ஸ்பவ் ஏரி எனப் பெயர் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் குதிரையின் லாடம் (Horseshoe) போன்ற அமைப்பில் இருப்பதால் 'குதிரைக் குளம்பு' ஏரி அல்லது குளம் என்று அழைக்கப்படுகிறது.  'குருட்டு ஆறு' என்றும் குறிக்கப்படுவதுண்டு. கபிலர் எட்டாம் நாள் பிறை நிலா வடிவம் எனக் குறிப்பிட்டது போல,  இந்த நீர்நிலைகள் வடிவத்தில் பிறை நிலா போன்றவை, வளைந்த கரையைக் கொண்டவை.  

 

 

ஆற்றுநீர் மலைச்சரிவில் இறங்கி சமவெளியில் ஓடத் தொடங்கிய பின்னரே பற்பல காரணங்களால், ஆற்றின் வெளிப்பக்கக் கரையின் வளைவின் வேகமான நீரோட்டத்தால்  "அரிப்பு"(erosion) ஏற்படுவதாலும், உட்குழிந்த வளைவுப் பகுதியில் நீரின் வேகம் குறைந்து வண்டல் “படிவதாலும்" (sediment) ஆற்றின் வளைவுகள் (Meanders) மாறிக் கொண்டே இருக்கின்றன.  அவ்வாறு வளைந்த "U" வளைவின் இரு நுனிகள் வண்டல் படிவதால் அவற்றின் இடையே உள்ள இடைவெளி குறைந்து, அவை ஒன்றை ஒன்று நெருங்கும் பொழுது, நீரோட்டம் வளைவான வழியைக் கைவிட்டு  நேராக ஓடிவிடுகிறது. கைவிடப்பட்ட வளைந்த ஆற்றுப் பாதை காலப்போக்கில் மறைந்துவிடுகிறது (பார்க்க விளக்கப் படம், காணொளி: https://www.youtube.com/watch?v=wi0fT3TCIGs).  இது உயர்நிலைப்பள்ளியில் புவியியல்/சமூகவியலில் வகுப்பில் நாம் அறிந்து கொண்ட அறிவியல் பாடம்தான். 

   

இந்தக் குதிரைக் குளம்பு நீர் நிலைகள் மனித முயற்சியால் தோன்றுவன அல்ல; ஆற்றின் போக்கால் இயற்கையாக உருவாவது.  அது போலவே,  நீர் நிலைக்கான நீர்வரத்தும்  மனித முயற்சியின்றி  இயற்கையால் நிறுத்தப்பட்டக் காரணத்தால், காலப்போக்கில், நீர்நிலையில் வண்டல் போன்றவை படிந்து இயற்கையாகவே நீர் அளவு வற்றி சதுப்பு நிலமாகவும், நாளடைவில்  நீர்நிலை வறண்டு மறைந்தும் விடும் (https://eros.usgs.gov/earthshots/oxbow-lake).  இவ்வாறு பிறை வடிவ நீர்நிலைகள், அவை இருக்கும் இடத்தைப் பொருத்து சில பத்தாண்டுகளிலிருந்து சில நூறாண்டுகளில் மறைந்துவிடும்.  கோடையில் நீர்வரத்து இல்லாத தமிழ்நாடு போன்ற இடங்களில் இந்த நீர்நிலைகள் மறைந்துவிடச் சில பத்தாண்டுகளே போதுமானதாக இருக்கும்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகம் பாடல் ஒன்றும் நீர்வரத்து நின்று போனால்  குளம் அழியும் என்பதைக் குறிப்பிடுவதைக் காணலாம்; 

      வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்

      தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்

      கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்

      நல்குரவு சேரப்பட் டார்.

             [திரிகடுகம் 84 – நல்லாதனார்]

நீர் வரும்வழி நன்றாக அமைந்திராத குளமும்; தன் வயிறு நிரம்பும்படி தாய்ப்பாலை உண்ணாத குழந்தையும்; நன்முறையில் கல்வி கற்காதவரும் ஆகிய இம்மூவரும் வறுமையில் வாடுபவராகவே கொள்ளத்தக்கவர் என்பது நல்லாதனார் இயற்றிய இத்திரிகடுகப் பாடலின் பொருள். 

இவ்வாறு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்ட நீர்நிலைகளின் எதிர்காலம் அழிவுதான் என்பதை கபிலர் நேரிடையாகக் கவனித்து அறிந்திருக்கக் கூடும். அதனால் "எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத் தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ" என்று கலங்கி இருக்கலாம்.


 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 275

3/12/2025      எண்நாள் திங்கள் அனைய தெண்ணீர்ச் சிறுகுளம்

#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi