Wednesday, March 5, 2025

மாதரார் தொழுதேத்தும் அருந்ததி விண்மீன்

      "தீது இலா வடமீனின் திறம் இவள் திறம்" என்றும்,

      "வானத்துச் சாலி ஒருமீன் தகையாள்" என்றும்,

      "அங்கண் உலகின் அருந்ததி அன்னாள்" என்றும்,

சிலப்பதிகாரத்தில் இளங்கோ கற்பில்  சிறந்த கண்ணகியை அருந்ததிக்கு ஒப்பிடுகிறார்.

      "கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன்" (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம்  14. எழுச்சிப் படலம்)

என்று கம்பரும் கற்புடைய அருந்ததியின் கணவன் என்று வசிட்டரைக் குறிப்பிடுகையில் கூறுகிறார். 

"'வடமீன்' போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்"  (கலித்தொகை 2—21)

என்று கலித்தொகையில் 'அருந்ததி' பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது.  தொன்மக் கதைகள்  அருந்ததியைக் கற்பில் சிறந்தவள் என்றும், அவள் வசிட்ட முனிவரின் மனைவி என்றும் குறிப்பிடுகின்றன. ஏழு சகோதரிகளில் ஒருத்தியான அருந்ததி தனது சிறந்த கற்பின் காரணமாக சப்தரிஷிகளில் ஒருவரான தன் கணவர் வசிட்டருடன் தங்கிவிட்டவள் என்று புராணம் கூறுகிறது (அந்த ஏழு சகோதரிகளில் கற்பில் குறைபாடு கொண்ட மற்ற ஆறு பெண்கள் தங்கள் கணவர்களுடன் வாழ வழியின்றிப் பிரிந்து சென்று, கார்த்திகைப் பெண்களாக மாறி (Pleiades star cluster) ஆறுமுகனின் வளர்ப்புத் தாயானார்கள் என்பது தொடர்புள்ள மற்றொரு கதை). 

அருந்ததி என்னும் விண்மீனிற்கு இலக்கியத்தில் பல பெயர்கள் உண்டு.

1. வடமீனவள், 2. வடமீன், 3. வடக்குமீன், 4. உத்தரமீன், 5. தெய்வம், 6. அணங்கு, 7. கடவுள், 8. கடவுண்மீன், 9. சிறுமீன், 10. அந்திமீன், 11. செம்மீன், 12. சாலினி, 13. சாலி என்ற பெயர்களில் தமிழ் இலக்கியங்களில் அருந்ததி குறிப்பிடப்படுகிறாள். (கலித்தொகை - நச்சினார்க்கினியர் உரை, பக்கம் 18-19).  கீழே ஒரு சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம்:

      'அருந்ததி' அனைய கற்பின்“ (ஐங்குறுநூறு 442)

      'வடமீன்' புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)

      "கடவுள் ஒருமீன் 'சாலினி'" (பரிபாடல் 5)

      "பெருநல் வானத்து வடவயின் விளங்கும் 'சிறுமீன்' புரையின் கற்பின் நறுநுதல்" (பெரும்பாணாற்றுப்படை 302—303)

      "விசும்பு வழங்கும் மகளிருள்ளும் சிறந்த 'செம்மீன்' அனையள்" (பதிற்றுப்பத்து 31—27/28)

பொதுவாக வடமீன் என்பது வானில் வடதிசையில் திசையறிய உதவும் 'போலாரிஸ்' (polaris/துருவ நட்சத்திரம்) விண்மீன் என்று அறியப்படுகிறது.  ஒரு பெயர்; ஒரு குறிப்பிட்ட பொருள்/கருத்தை மட்டும்தான் குறிப்பிடும் என்பது அறிவியலின் அடிப்படை விதி.  ஆனால், இலக்கியத்திற்கு அந்த விதிகள் பொருந்தாது.  இடம் சுட்டிப் பொருள் கொள்கையில்;

'வடமீன்' போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்' என்று கலித்தொகை பாடல் வரி சொன்னால் அங்கு அதை அருந்ததி என்று பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.  அவ்வாறே;

‘விசும்பு வழங்கும் மகளிருள்ளும் சிறந்த 'செம்மீன்' அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28) பாடல் வரி குறிப்பிட்டால், அதையும் அருந்ததி என்றுதான் என்று பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. செம்மீன் என்றால் அது செவ்வாய்க் கோளை ஏன் குறிக்கவில்லை என்று கேள்வி எழுப்ப வாய்ப்பில்லை

'வடதிசைக்கண் துருவ எழு முனிவர் குழுவினிடையே கொழுநனொடு கெழுமி ஒரு சிறு விண்மீன்' என்று கூறினால் வானின் வடக்கு திசையில் 'துருவ விண்மீன்' 'போலாரிஸ்' அருகில் உள்ள; 'எழுமீன்' (சப்தரிஷி மண்டலம்/Big Dipper) விண்மீன்கள் கூட்டத்தின் 'மிசார்' விண்மீனுடன் மிக நெருக்கமாக இருக்கும் 'அல்கோர்' (Mizar and Alcor stars) விண்மீன் என்பது இவ்வரியின் பொருள். 

வைதீக முறைப்படி நடக்கும் திருமணங்களில் ஒரு சடங்காக; 'இந்த அருந்ததி போல நீ கற்பில் சிறந்தவளாக, பதிவிரதையாக இருக்க வேண்டும்' என்று மணநாளில் மணமகன் தன் மனைவிக்கு அருந்ததியைக் காட்டும் சடங்கு அமையும். இந்நாட்களில், காலத்தின் மாற்றத்தால் இந்த விண்மீன் இணையர் போல நாம் இணைபிரியாது இருக்க வேண்டும் என்று கூறுவதாக மாற்று விளக்கம் தருகிறார்கள். வாழ்வில் எந்தச் சூழலிலும் வசிட்டன்  போல மனைவியை இணைபிரியாது இருக்கக் கடவாய்  என்று ஆண்களை முன்னிறுத்தி எந்த இலக்கியக் கூற்றும் இல்லாததன் மூலம், இது தற்காலக் கற்பிதம் என்பதை எவரும் புரிந்து கொள்ள இயலும். கற்புடைய பெண்ணாக இருப்பாயாக என்று பெண்களுக்கு மட்டுமே  நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ வலியுறுத்தப் பட்டதுதான் இதுவரை இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. 

பெருங்கரடி (Ursa Major) விண்மீன் குழாமின் ஒரு பகுதி, பெருங்கலப்பை /பெருங்கரண்டி (Big Dipper) என்னும் விண்மீன் கூட்டம்.  ஆண்டு முழுவதும் வானில் தென்படும் இந்த ஏழு விண்மீன்கள் கூட்டம் தமிழில் 'எழுமீன்' என்று அறியப்படுகிறது. இந்த விண்மீன் கூட்டம் வானின் வடக்குப் பகுதியில் போலாரிஸ் என்ற துருவ மீனின் அருகில் உள்ளது. கரண்டியின் அகப்பை பகுதியில் உள்ள இருவிண்மீன்களிலிருந்து ஒரு நேர்க்கோடு வரைந்து நீட்டித்தால், அது போலாரிஸ் விண்மீனைக் காட்டும். பயணத்தில் திசையறிய  போலாரிஸ் விண்மீன் இன்றியமையாதது. ஆகவே, அந்த விண்மீனை அடையாளம் காண இது ஒரு வழியாக உள்ளது.  பெருங்கரண்டி கூட்டத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்கள் அல்கைட், மிசார், அலியோத், மெக்ரெஸ், ஃபெக்டா, மெராக் மற்றும் துபே (Alkaid, Mizar, Alioth, Megrez, Phecda, Merak, and Dubh) ஆகும். இவை புராணக் கதையில் சப்தரிஷி எனப்படும் ஏழு முனிவர்கள்  (விசுவாமித்திரர், ஜமதக்னி, கௌதமர், வசிட்டர், காசியபர், பாரத்துவாசர், அத்திரி) எனக் குறிப்பிடப்படுகிறது. அவற்றுள் ஒன்று வசிட்டர் என்ற மிசார் விண்மீன். இந்த விண்மீன் பெருங்கரண்டியின் நுனியிலிருந்து இரண்டாவது விண்மீன்.  கூர்த்த கண்பார்வை கொண்டவர்களால் அதிக ஒளி கொண்ட மிசார் விண்மீன் அருகில், ஒளி குறைந்த மற்றுமொரு சிறு விண்மீனைக் காண இயலும். இதுவே அருந்ததி  என்னும் அல்கோர் விண்மீன். அரபு, பாரசீக நாடுகளில் ஒருவரால் இந்த விண்மீனைக் காண இயலுமா என்பது கண்பார்வைக்கான ஒரு சோதனை முறையாக இருந்துள்ளது.

இந்த இரு விண்மீன்களும் ஒன்றையொன்று ஈர்ப்புவிசையால் இணைக்கப்பட்டவை, 1.2 ஒளி ஆண்டுகள் இடைவெளி கொண்டவை.  தட்டாமாலை போல ஒன்றையொன்று  சுற்றிச் சுழல்பவை.  இந்த இரு விண்மீன்களும் புவியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலத்தில், மிசார் விண்மீன் என்பது இரண்டிரண்டு  விண்மீன்கள் கொண்ட இணையாக, மொத்தம் நான்கு  விண்மீன்களைக் கொண்ட விண்மீன்களின்  தொகுதி என்பதும்; அல்கோர் விண்மீனும் இணையான இரண்டு விண்மீன்கள்  கொண்ட ஒரு தொகுதி என்பது தெரிய வந்துள்ளது.  ஆக, மிசார்-அல்கோர் இணை விண்மீன்கள்  உண்மையில் ஆறு விண்மீன்களின் தொகுதியாகும்.

(குறிப்பு:  வடமீன் என்பது பெருங்கரண்டி, அருந்ததி, துருவ விண்மீன் என அனைத்தையும் குறிப்பிடும் வகையில் இருப்பதால், 'பன்னாட்டு வானியல் ஒன்றியம்' (The International Astronomical Union - IAU) தரப்படுத்தி அளித்துள்ள விண்மீன் பெயர்கள் கட்டுரையில் பயன் கொள்ளப்பட்டது)


 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 274

3/5/2025      மாதரார் தொழுதேத்தும் அருந்ததி விண்மீன் 


#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi