'ஏழு சகோதரிகள்' என அழைக்கப்படும் அழகிய நீலமலர்க்கொத்து போன்ற தோற்றம் கொண்ட ஏழு விண்மீன்களின் கூட்டமான 'ப்ளீயட்ஸ்' (Pleiades) குளிர் காலத் தொடக்கத்திலிருந்து இளவேனில் காலத்தின் தொடக்கம் வரை (அக்டோபர் 17 - மார்ச் 10) உலகின் அனைத்துப் பகுதியில் வாழும் மக்களும் எளிதில் காணக்கூடிய விண்மீன் கூட்டம். சிந்துவெளி நாகரீக முத்திரை ஒன்றிலும் ஏழு பெண்கள் குறிப்பு உள்ளது, இன்றுவரை பல இடங்களில் ஏழு சகோதரிகள் என்ற நிலை ஏழு கன்னிமார் என்ற சப்த கன்னியர்/மாதர் வழிபாடாகவும் தொடர்கிறது. அதே நேரத்தில், மற்றொரு வகையில் பிற்காலத்தில் ஆறு கார்த்திகைப் பெண்கள் என்பதும் வழக்கில் உள்ளது. இந்த ஏழு விண்மீன் கூட்டத்தில் ஒன்றான 'பிளியோன்' (Pleione) ஒளியில் மாறுபடும் விண்மீன் என்பதாலும், அதே கூட்டத்தின் அட்லாஸ் (Atlas) விண்மீனுக்கு மிக நெருக்கத்தில் இருப்பதாலும் வெறும் கண்ணால் பார்ப்போருக்கு விண்மீனின் ஒளி குறையும் காலங்களில் காண இயலாமல் போகிறது. இவ்வாறு ஒளியில் மாறுபடும் விண்மீன்கள் 'ஷெல் ஸ்டார்' (Shell star) எனப்படும். இந்த மாற்றத்தால் ஏழு சகோதரிகள் ஆறு கார்த்திகைப் பெண்களாகக் கூறப்படுகிறார்கள். சகோதரிகள் என்பதற்கு ஏற்ப கார்த்திகை விண்மீன் கூட்டத்தில் உள்ள விண்மீன்கள் அனைத்தும் ஒன்றாக உருவானவையே.
ப்ளீயட்ஸ் விண்மீன்களின் தோற்றம் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எனக் கணிக்கப்படுகிறது. எனவே இந்த விண்மீன்கள் இளமையானவை. ப்ளீயட்ஸ் விண்மீன்கள் புவியிலிருந்து 444 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளவை என்பதால் புவிக்கு வெகு அருகில் உள்ளது. இவற்றின் விண்மீன்கள் சூரியனை விட அளவில் பெரியவையாகவும், சூரியனைவிட மிக வெப்பம் கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வெறும் கண்களுக்கு ஆறு அல்லது ஏழு விண்மீன்கள் மட்டுமே தெரிந்தாலும் 1,000க்கும் மேற்பட்ட விண்மீன்களைக் கொண்டது ப்ளீயட்ஸ் விண்மீன் கூட்டம். சூரியனின் விண்வெளிப்பாதையில் (ecliptic), காளை ஓரையின் (ரிஷப ராசி/Taurus constellation) தொடக்கத்தில் கார்த்திகை விண்மீன்கூட்டம் உள்ளது. காளை ஓரையை 'ஏற்றியல்' (ஏறு+இயல்) என்றும் தமிழ் இலக்கியம் குறிப்பிடுவதைக் காண முடிகிறது. பல கோள்களும் சூரியனும் இப்பாதை வழியே இப்பகுதியைக் கடந்து செல்வதால் பொன் நுழைவாயில் பகுதியில் இந்த விண்மீன்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் மேஷ ராசியின் தொடக்கமாக முன்னர் வழக்கத்தில் இருந்தது. வராகமிகிரர் (கி.பி. 505 – 587) காலத்தில் அவரால் புவியின் அச்சுத்திசை மாறுமியக்கம் ஏற்படுத்திய வானியல் மாற்றம் கணக்கில் கொள்ளப்பட்டு, அசுவினியில் தொடங்கும் புதியமுறை நடைமுறைக்கு வந்தது.
காலத்தால்
முற்பட்டதாக பனியூழிக் காலத்தில் ப்ளீயட்ஸ் விண்மீன்களின் வரைபடம்
கிடைக்கிறது. பிரான்ஸ் நாட்டின் 'லாஸ்காக்ஸ் குகை' (Lascaux cave, France) பகுதியில்
காளை ஓரையைக் குறிக்கும் வகையில் ஒரு காளையின் படத்தின் வலது தோள்புறமாக ப்ளீயட்ஸ் விண்மீன்கள் வரையப்பட்டுள்ளது. இப்படம் கி.மு.16,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இந்த விண்மீன் கூட்டத்தைத் தங்கள் காலத்தைக் கணிக்க ஜெர்மனியின் நெப்ரா பகுதியில் வாழ்ந்த பண்டைய மக்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்கு கி.மு.1,600 ஆண்டில் பயன்பட்ட நெப்ரா வான வட்டு (Nebra sky disk) என்னும் வெண்கல வான் வரைபடம் கிடைத்துள்ளது. சிந்துவெளி முத்திரை போன்றே சுமேரிய, பாபிலோனியச் சான்றுகளும் ப்ளீயட்ஸ் விண்மீன்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன.
கி.பி.1600களில் அறிவியலின், குறிப்பாக வானியலின் திருப்புமுனையாகத் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டபொழுது கலிலியோ அதன் வழியே நோக்கி இக்கூட்டத்தில் வெறும் ஆறோ, ஏழோ மட்டும் அல்ல 36 விண்மீன்களைக் காணமுடிகிறது என்று வரைபடத்தில் பதிவு செய்தார். இந்த வரைபடம் பண்டைய தமிழர் எதனால் பாடல்களில் கார்த்திகை விண்மீன்களை மலர்ச்சரத்துடன் ஒப்பிட்டார்கள் என்பதற்கு விளக்கம் தருவது போல அமைந்துள்ளது. கார்த்திகையில் வரிசையாக ஒளிவிளக்குகள் வைக்கும் ஆர்வமும் மக்களுக்கு இந்த விண்மீன்களின் வரிசையைக் கண்டுகூட எழுந்திருக்க வாய்ப்புண்டு என்று கணிக்கலாம். ஆஸ்திரேலியா பகுதியின் தொன்மத்தை மதிக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா அரசும் ஒரு சிறப்பு நாணயம் வெளியிட்டுப் போற்றியுள்ளது.
ப்ளீயட்ஸ்
விண்மீன்கள் என்பது கிரேக்கத் தொன்மத்தின்
அடிப்படையில் கொடுக்கப்பட்ட பெயர். கடல்தேவதை
'பிளியோன்' (இவ்விண்மீன் தோன்றும் காலம்
கடற்பயணத்திற்கேற்ற காலத்தின் தொடக்கம்), டைட்டன் அட்லாஸ்
ஆகியோருக்குப் பிறந்த ஏழு பெண்களான மியா, எலக்ட்ரா, டெய்கெட், செலேனோ, அல்சியோன்,
ஸ்டெரோப், மெரோப் ஆகியோரே இந்த விண்மீன்கள். தன்னை எதிர்த்த அட்லாஸை தண்டிக்கக் கடவுள்
அவரிடம் வானைச் சுமக்கும் பொறுப்பைத் தந்திருந்தார். தந்தையின் துன்பம் கண்டு
துயருற்ற மகள்களின் வேதனையைக் கண்டு இரங்கி அவர்களையும் கடவுள் விண்மீன்களாக்கி
வானிற்கு அனுப்பிவிட்டார் என்பதும் ஒரு புனைவு.
மற்றொன்று
அப்பெண்களைத் துரத்திய ஓரியான் (Orion) என்ற வில்லாளியிடம்
இருந்து காப்பாற்ற அப்பெண்களை விண்மீன்களாக்கினார். பின்னர், ஓரியானும்
விண்மீன் உருக்கொண்டு வானில் துரத்தத் தொடங்கினான் என்பது மற்றொரு கதை. இப்பெண்களில் மெரோப் (Merope) என்பவள் ஒரு மனிதனை மணந்தாள்,
மற்றவர்கள் கடவுளரை மணந்தனர் ஆகவே வானத்தில் இருந்தனர். மெரோப் தன்
கணவனுடன் மண்ணுலகில் தங்கிவிட்டாள் அதனால் இவள் தவிர்த்து, மற்றவர்
தனித்து ஆறு பெண்களாக மாறினர். கிரேக்கப் புனைவின்படி அவள் கணவனுடன் தங்கியதால்
வானில் மறைந்தாள் என்பது ஆறு விண்மீன்களாக மாறிய கதையின் தோற்றம், ஒரு சில கதைவடிவில் அவள் மனிதனை மணந்ததால் வெட்கப்பட்டு மறைந்தாள் என்ற
மாறுபாடும் உண்டு.
நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 270
2/5/2025 ப்ளீயட்ஸ் விண்மீன்கூட்டம்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi