இயற்கையில் நிகழும் வானியல் நிகழ்வுகளான கதிர், நிலவு மறைப்புகள் (Solar and lunar eclipses) இன்றைய பொதுவழக்கில் சூரிய, சந்திர கிரகணங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. சூரியகிரகணச் செய்திகள் குறைந்த அளவிலும் சந்திரகிரகணச் செய்திகள் அதிக அளவிலும் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
சங்க
இலக்கியத்தில் சூரியகிரகணச் செய்திக்கு எடுத்துக்காட்டாக மாறோக்கத்து நப்பசலையார் பாடிய பாடல் ஒன்றைக்
காணலாம். போரில் சோழவேந்தர்கட்குத் துணை
நின்று வெற்றி ஈட்டித் தந்தமையால் “மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்” என்ற
பட்டம் பெற்றவன் மலையமான் திருமுடிக்காரியின் வழித்தோன்றல். இவனைப் பாராட்டிப் பாடும் பாடலில்
(புறநானூறு-174), சோழநாடு கதிரவனை இழந்த உலகம் போல்
தன் அரசனை இழந்து வருந்தியது. அப்பொழுது கதிரவனாகிய சோழனை மீட்டு ஒளி பெறச்
செய்தவனே எனக் குறிப்பிடுகிறார் புலவர்.
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு
பாரதப் போரில் அசுரர்கள் மறைத்த சூரியனை (சூரியகிரகணம்) மீட்டு வந்த கண்ணன் என்ற தொன்மக்கதையின் கருத்து இப்பாடலில் ஒப்பிடப்படுகிறது.
சந்திரகிரகணச்
செய்திக்கு எடுத்துக்காட்டாக நற்றிணைப் பாடல் ஒன்றையும் காணலாம்;
"பாம்பு
ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்" (நற்றிணை 128)
என்ற பாடல் பாம்பு கவர்ந்த மதியைப் போல நெற்றியின் ஒளி மறைபடவும் என்று சந்திர கிரகணத்தைக் குறிப்பிடுகிறது.
சற்றும் அறிவுக்குப் பொருந்தா வகையில் கூறப்படும் 'சந்திரனையும் சூரியனையும் பாம்பு விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது' என்ற தொன்மப் புரட்டுகளைக் குறித்து கேள்வி எழுப்புகையில்; கிரகணங்களைப் பாமர மக்கள் புரிந்து கொள்வதற்காகப் பாம்பு விழுங்கியது, ராகு விழுங்கியது என்று உருவகப் படுத்தப்பட்டது என்ற விளக்கம் கிடைப்பதும் இன்றுவரை வழக்கம்.
சந்திரனின்
சுற்றுப்பாதையானது சூரியனைச் சுற்றி வரும் புவியின் சுற்றுப்பாதையில் சுமார் 5°
சாய்ந்துள்ளது. சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகள் வான மண்டலத்தில் (celestial
sphere) வெட்டும் புள்ளிகளுக்கு நம் பண்டைய வானியலாளர்கள் ராகு, கேது என்று பெயரிட்டுள்ளனர். அவை வடக்கு மற்றும்
தெற்கு சந்திர முனைகள் (lunar nodes) என்றும்
அழைக்கப்படுகின்றன. இவை நிழல் கிரகங்கள் என்று கூறப்பட்டு நவக்கிரகத் தொகுப்பில்
வைத்து வழிபடப்பட்டாலும் இவை கோள்கள் அல்ல. கிரகணங்கள் ஏற்படுவதன் காரணம் அறியாத முன்னோர்கள், ராகு கேது நகர்வு, அதனால் ஏற்படும் கிரகணங்களால்
கெடுதல் நேரும் என்று அஞ்சியது போல இன்றைய அறிவியல் அறிவொளி வெளிச்சம் பெற்றோர்
அஞ்சுவதில்லை. பார்வை பாதுகாப்புக்குத்
தக்க முன்னேற்பாடு செய்து கொண்டு சூரியகிரகண வானியல் நிகழ்வுகளைப் பார்த்து மகிழ்வது இன்றைய நாளில்
வழக்கமாகிவிட்டது.
கதிரவன், நிலவு, புவி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையும் பொழுது “கிரகணம்” (ஒளி மறைப்பு) ஏற்படும் என்பது இன்றைய நாளில் பள்ளி மாணவரும் நன்கு அறிந்துள்ள அறிவியல் விளக்கம். புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது, அப்பொழுது புவியின் பகுதியில் நிலவின் நிழல் விழுந்து இருள்கிறது. முழு நிலவு காலகட்டத்தில் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் புவி நேர்க்கோட்டில் நகர்கையில், புவியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது, அதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஒரு முழுச் சந்திரகிரகணம் ஒரு மணிநேரத்திற்கு மேலும் நீடிக்கக் கூடும். ஆனால் ஒரு சூரியகிரகணத்தின் அதிக அளவுக் காலம் 71/2 நிமிடங்கள் மட்டுமே. நிழல் மறைக்கும் அளவைக் கொண்டு சூரியகிரகணங்களை முழுக்கிரகணம், வளைய கிரகணம் அல்லது பகுதி கிரகணம் (total, annular, partial) என்று வகைப்படுத்துவது வழக்கம்.
இந்தக் கிரகணங்கள் சுழற்சியாக மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்படுவதையும், இக்காரணத்தால் எதிர்காலத்தில் வரவிருக்கும் கிரகணங்களைக் கணிக்க முடிவதையும் பண்டைய காலத்திலேயே மக்கள் நன்கு அறிந்திருந்தனர். சந்திர, சூரிய கிரகணங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் கிரகணங்கள் சுழற்சி காலகட்டம் 'சரோஸ் சுழற்சி' (Saros cycle) என அழைக்கப்படுகிறது. இப்பெயர் பிற்காலத்தில் எட்மண்ட் ஹேலியால் 17 ஆம் நூற்றாண்டில் (Edmond Halley in 1686) சூட்டப்பட்ட ஒன்று. ஆனால், பண்டைய மக்கள் இந்தச் சுழற்சியின் கால அளவை அறிந்திருந்தனர், எதிர்காலத்தில் நிகழவிருக்கும் கிரகணங்களைக் கணித்திருந்தனர் என்பதற்குத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்னர் பண்டைய சுமேரியர்கள் அறிந்திருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கிரேக்கர்கள் கிரகணங்களைக் கணிப்பதற்கு "ஆன்டிகிதெரா வானியல் கணிப்பொறி" (Antikythera Mechanism)என்ற கணிப்பொறியை கி.மு.150இல் பயன்படுத்தினர்.
ஒரு சரோஸ்
சுழற்சியின் போது, பூமி, சூரியன்
மற்றும் சந்திரன் ஏறக்குறைய ஒரே மாதிரியான நிலைக்குத் திரும்புகின்றன, அப்பொழுது
ஒரே மாதிரியான கிரகணம் ஏற்படும். தோராயமாக
ஒரே போன்ற நிலைக்குப் புவி, சூரியன், சந்திரன்
திரும்பி, ஒரே போன்ற கிரகணம் ஏற்படும் சரோஸ் சுழற்சியின்
இடைவெளியின் காலம் சுமார் 6,585.3 நாட்கள்
(அல்லது 18 ஆண்டுகள், 11 நாட்கள் மற்றும் 8 மணிநேரம் ஆகும்).
எடுத்துக் காட்டாக; ஜூன் 30, 1973
அன்று நிகழ்ந்த சூரியகிரகணம் போலவே ஜூலை 11, 1991 அன்று
நிகழ்ந்த சூரியகிரகணமும் அமைந்தது. ஒரு
சரோஸ் சுழற்சியின் கால இடைவெளி 70 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகணங்களைக்
கொண்டிருக்கும். பெரும்பாலான ஆண்டுகளில் இரு சந்திரகிரகணங்கள் ஏற்படும்; மற்றும் சில ஆண்டுகளில் ஒன்று அல்லது மூன்று அல்லது கிரகணங்கள் எதுவும்
நிகழாமலும் போகலாம். நிலையாக ஒரே
இடத்தில் இருக்கும் ஒருவர் ஒரு சரோஸ் சுழற்சி காலகட்டத்தில் அப்பகுதியில் 19 அல்லது 20 சந்திரகிரகணங்களைக்
காண முடியும்.
1/8/2025 கதிர் நிலவு மறைப்புகளும் சரோஸ் சுழற்சியும்
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi