Wednesday, December 4, 2024

காலவுரிமை எய்திய ஞாயிறு


'கதிரவன் துணைப்புணர் ஓரையைச் சேர்ந்தான், அதனால் வெங்கதிர் பரப்பினான், பரப்பவே இளவேனில் முதுவேனிலாயிற்று' என்று 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் தாம் எழுதிய பெரியபுராணத்தின், சம்பந்தர் புராணம் 384 ஆம்  பாடலில் எழுதியிருப்பார். 

     மகிழ்ந்த தன்தலை வாழுமந் நாளிடை வானில்
     திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர் ஓரையுட் சேர்ந்து
     நிகழ்ந்த தன்மையில் நிலவுமேழ் கடல்நீர்மை குன்ற
     வெகுண்டு வெங்கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்.

மிதுனம் இரட்டை ஆதலின், 'துணைப்புணர் ஓரை' என மிதுன ஓரையைக் குறிப்பிட்டுள்ளார்.  இந்நாட்களில் நாம் இராசி என்று கூறுவதைத் தமிழ் இலக்கியங்கள் 'ஓரை' என்றே குறிப்பிட்டன. பெரியபுரணத்திலும் ஆறு முறை ஓரை என்ற குறிப்பு வருகிறது.  

“காரும் மாலையும் முல்லை குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்” (அகத்திணையியல், நூ. 6) என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதும் 14ஆம் நூற்றாண்டின் நச்சினார்க்கினியரும் ஓரை என்றே குறிப்பிடுவார். "காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்" என்று விளக்குகிறது நச்சினார்க்கினியம்.

இவ்விளக்க உரையின்படி சிம்ம ஓரையில் கதிரவன் நுழைகையில் ஆவணி  மாதமும், தமிழரின் ஆண்டுக் கணக்கும் தொடங்குகிறது. சூரியன் நகர்வைக் கொண்டே தமிழர்களாகிய நாம் காலத்தை வரையறுக்கிறோம்  என்பது 'காலவுரிமை எய்திய ஞாயிறு' என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுவதன் மூலம் தெளிவாகிறது.

சேக்கிழார் பாடலும், நச்சினார்க்கினியர் உரையும் ஒரு முக்கியமான குறிப்பை, தமிழர்களின் காலக் கணக்கிடும் முறையை முன் வைக்கின்றன.  பண்டைய தமிழர் வழக்கமும், இன்றைய கேரள வழக்கமும் காலக்கணக்கை கதிரவன் ஓர் ஓரையில் நுழையும் நாளை அடிப்படையாகக் கொண்டு தொடங்குவது.   கதிரவன் மிதுனத்தில் நுழைகையில் முதுவேனில் காலம் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார் சேக்கிழார். இன்றைய நாளில் ஜூன் 15 அன்று கதிரவன் மிதுன ஓரையில் நுழைகையில் ஆனி மாதம் தொடங்குகிறது. நச்சினார்க்கினியர் தரும் விளக்கத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் 17 அன்று கதிரவன் சிங்க ஓரையில் நுழைகையில்  ஆவணி மாதமும் தமிழரின் ஆண்டுக் கணக்கும் தொடங்குகிறது. 

இவ்வாறு இன்று நாம் பின்பற்றும் வானியல் கணக்கும் பிழையானது. சூரியவீதியில் (ecliptic path) விண்மீன் மண்டலங்களில் சூரியன் நகரும் நிலை  'புவியின் அச்சுத்திசை மாறுமியக்கம்' (Precessional motion of the Earth) என்பதைக் கணக்கில்  கொள்ளாத காரணத்தால் இன்று வானில் நிகழும் உண்மையான நிலையைக் காட்டுவதில்லை. (நகர்வது புவி; சூரியன் அல்ல. புவியில் உள்ளவர் பார்வையில் வானில் சூரியனின் நிலை).  வராகமிகிரர் (6ஆம் நூற்றாண்டு) காலத்து 'சூரியசித்தாந்தம்' என்ற வானியல் கணக்கைக் கொண்டு இன்றும் பஞ்சாங்கம் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

உண்மையில் ஜோதிட ராசிக் கட்டங்களில் குறிப்பிடுவது போல சூரியன் விண்மீன் மண்டலங்களில் நகர்வதில்லை. விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான இடைவெளியும் ஒரே அளவு கிடையாது. மேலும், சூரியவீதியில் இருக்கும் விண்மீன் மண்டலங்களும் 12 அல்ல; அதன் எண்ணிக்கை 13.  ஓஃபியுச்சஸ் (Ophiuchus) என்றொரு விண்மீன் கூட்டம் விருச்சிகம், தனுசு இவற்றுக்கு இடையே உண்டு, அதைச் சுமார் 18 நாட்களில் சூரியன் கடக்கும். சரியாக 30 அல்லது 31 நாட்களில் சூரியன் அடுத்த ராசிக்கு நகர்வதும் இல்லை. சூரியன் விருச்சிகத்தைக்  கடக்கக் குறைந்த அளவாக 7  நாட்களும், கன்னி இராசியைக் கடக்க அதிக அளவாக 44 நாட்களும் எடுத்துக் கொள்ளும். 

எனவே ஜோதிடக் கட்டத்தில் காட்டப்படும் ஒரு ராசிக்குச் சரியாக 30° என்ற கணக்கு தோராயமானது. கணக்கிடும் வசதிக்காக, தசமம் தவிர்த்து முழு எண்களாகக்  கணக்கிட 12எண் அடிப்படையில் கட்டம் அமைக்கப்பட்டு 27 நாள்மீன்கள் எனக் கணக்கிடப்படுகிறது (28 விண்மீன் கணக்கு என்பது கைவிடப்பட்டுள்ளது என்பது மற்றொரு தகவல்). வானியல்  கணக்கும் ஜோதிடக் கணக்கும் வெவ்வேறு அடிப்படையில் இயங்குவது. கைவிடப்பட்ட ராசியிலும், நாள்மீனிலும் பிறந்தவர் எதிர்காலம் என்ன என்பது ஜோதிடத்துறை வல்லுநர்களைக் கேட்க வேண்டிய கேள்வி. 

சூரியவீதியில் இளவேனில் பகல்-இரவு சமநாள் (மார்ச் 21) 0° தொடக்கம் எனவும், கோடை கதிர்திருப்ப நாள் (ஜூன் 21) 90° எனவும், கார்காலப்  பகல்-இரவு சமநாள் (செப்டெம்பர்  21) 180° எனவும், குளிர்காலக் கதிர் திருப்ப நாள் 270° எனவும் வானியலில் கணக்கிடப்படுவது வழக்கம்.

கீழுள்ள பட்டியலில், 1930 ஆம் ஆண்டு'பன்னாட்டு வானியல் ஒன்றியம்' (International Astronomical Union) வரையறுத்த விண்மீன் மண்டல எல்லை வரையறை அடிப்படையில், சூரியவீதியில் நகரும் சூரியன் ஒவ்வொரு ஓரை அல்லது விண்மீன் மண்டலத்தில் நுழையும் நாள்களும், கடக்க எடுத்துக் கொள்ளும் நாள்களும்  . . . 


எண்        ஓரை                நுழையும் நாள் (கடக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்)      
1.        மகரம் (299.66°) — ஜனவரி 20 (27 நாள்கள்)
2.        கும்பம் (327.83°) — பிப்ரவரி 16 (25 நாள்கள்) 
3.        மீனம் (351.52°)  — மார்ச் 12 (38 நாள்கள்) 
4.        மேஷம் (29.03°) — ஏப்ரல் 19 (25 நாள்கள்) 
5.        ரிஷபம் (53.41°) — மே 14 (39 நாள்கள்) 
6.        மிதுனம்  (90.37°) — ஜூன் 22 (29 நாள்கள்) 
7.        கடகம் (118.20°) — ஜூலை 21 (21 நாள்கள்)
8.        சிம்மம் (138.13°) — ஆகஸ்ட் 11 (37 நாள்கள்) 
9.       கன்னி (174.10°) — செப்டெம்பர் 17 (44 நாள்கள்) 
10.     துலாம் (217.75°) — அக்டோபர் 31 (23 நாள்கள்)
11.     விருச்சிகம் (241.08°) — நவம்பர் 23 (7 நாள்கள்)
*?      ஓஃபியுச்சஸ்(247.98°) — நவம்பர் 30 (18 நாள்கள்)
12.     தனுசு (266.54°) — டிசம்பர் 18 (33 நாள்கள்)

நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 261
12/4/2024      காலவுரிமை எய்திய ஞாயிறு

#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi