இன்றைய நாட்களில் வானியல் ஆர்வலர்கள் விண்மீன்கள், கோள்கள் ஆகியவற்றின் இருப்பிடம் குறித்து அறிந்து கொள்ள அவர்கள் இருப்பிடத்திற்கு ஏற்ற வான் வரைபடம் (Sky Map) ஒன்றை எளிதாக இணையத்தில் பெறலாம். கோள்களையும் விண்மீன்களையும் குறிக்கும் 'வெண்கல வான் வரைபடம்' ஒன்று 3600 ஆண்டுகளுக்கு முன்னரே, வெண்கலக் கால நாகரிகத்தில் வாழ்ந்த மக்களின் பயன்பாட்டில் இருந்தது என்பது தொல்லியல் தரும் வியப்பிற்குரிய செய்தி.
நெப்ரா ஸ்கை டிஸ்க் (நெப்ரா வான வட்டு/Nebra sky disk ), ஜெர்மனி (அன்றைய கிழக்கு ஜெர்மனி) பகுதியில் நெப்ரா என்ற சிற்றூரின் ஒரு சிறு குன்றின் மேல் கண்டெடுக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டில் தொல்லியல் பொருள்களைக் கள்ளச் சந்தையில் விற்கும் நோக்கில் உலோகத் தேடுபொறி கொண்டு தேடுபவர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்பட்டது. அருங்காட்சி, காவல் துறைகளைச் சேர்ந்தவர்கள் இதை மீட்டு எடுத்தாலும், இது ஒரு போலி என்றே பலரால் கருதப்பட்டது. இருப்பினும் இந்த வெண்கல வட்டின் காலத்தைக் கணிக்கும் உலோகச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இந்த வான் வட்டு சுமார் கி.மு.1600 காலவாக்கில் உருவாக்கப் பட்டது என்பதும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட செம்பு, தகரம், தங்கம் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் உறுதியானது. இதன் வரலாற்றுப் பெறுமதி கருதி ஜெர்மனியின் ஹலே நகர அருங்காட்சியகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
ஓர் அடி விட்டமும், 2½ கிலோ எடையும் கொண்ட நெப்ரா வெண்கல வான் வட்டு கரும்பச்சை நிறக் களிம்பேறி, சில பகுதிகள் சிதைந்து போன வான் வரைபடம். இதில் வட்டமான சூரியன் அல்லது முழு நிலா, ஒரு பிறை நிலா, ப்ளீயட்ஸ் (Pleiades constellation) என்ற கார்த்திகை 7 விண்மீன் கூட்டம், மேலும் பல விண்மீன்கள் என 32 விண்மீன்கள், ஒரு படகு போன்றதொரு வளைவு (இது வட்டின் வடதிசை காட்டும் பகுதி), இதன் பக்கவாட்டில் எதிர் எதிராக விளிம்புகளில் (கிழக்கு, மேற்குப் பகுதிகள்) இரு தங்கத்தில் செய்யப்பட்ட வளைவுகள் (இவற்றில் கிழக்கு வளைவு கிடைக்கவில்லை), விளிம்புகளில் 39 துளைகள் கொண்டுள்ளது. இதில் உள்ள பல விண்மீன்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
ஏழு விண்மீன்கள் கொண்ட ப்ளீயட்ஸ் விண்மீன் கூட்டம் மிகத் தெளிவாகத் தெரியும் என்பதால் உலகின் பல பண்பாடுகளிலும் பல தொன்மங்களிலும் இவை குறித்த கதைகள் உண்டு. ‘ஏழு சகோதரிகள்’ என்று அழைக்கப்படும் இக்கூட்டம் கிரேக்கத் தொன்மத்தில் அட்லாஸ் கடவுளரின் மகள்கள். இந்திய சிந்துவெளி நாகரீக முத்திரை ஒன்றிலும் ஏழு பெண்கள் குறிப்பு உள்ளது, இன்றுவரை பல இடங்களில் ஏழு கன்னிமார் என்று சப்த கன்னியர்/மாதர் வழிபாடும் தொடர்கிறது. இவர்களில் 6 பெண்கள் ஆறுமுகனை வளர்த்து ஒருங்கிணைத்த கார்த்திகை பெண்கள், அவர்கள் சாபம் பெற்று விண்மீன் ஆனதாகக் கதையும் உண்டு.
இந்த விண்மீன் கூட்டத்தைத் தங்கள் காலத்தைக் கணிக்க நெப்ரா பகுதியில் வாழ்ந்த பண்டைய மக்கள் பயன்படுத்தியது தெரிகிறது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ப்ளீயட்ஸ் விண்மீன் கூட்டம் பிறை நிலவுடன் இணையும் காலத்தில் (conjunction with a crescent moon) காலக் கணக்கைப் பருவ காலத்துடன் இணைந்து செல்லுமாறு சீரமைக்க, அதிக நாட்களை இணைக்கும் (இன்றைய லீப் ஆண்டுக் கணக்கு போன்று) முறை பயன்பட்டதுள்ளது. அத்துடன், வேளாண்மைக்கு அறுவடை மற்றும் விதைக்கும் நாட்களைத் தெரிந்து கொள்ளவும் பயன்பட்டிருக்கிறது. இந்த விண்மீன் கூட்டம் தோன்றும் (அக்டோபர் 17 - மார்ச் 10) இலையுதிர் காலத் தொடக்கம் அறுவடைக் காலம் எனவும், மறையும் காலமான இளவேனில் காலம் விதைக்கும் காலமாகவும் அமையும்.
இங்கிலாந்தின் பண்டைய வானவியல் ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) கல் கட்டமைப்பு இருக்கும் அதே கிடைக்கோட்டின் (51°N) இருப்பிடத்திலேயே நெப்ரா பகுதி அமைந்துள்ளது. ஸ்டோன்ஹெஞ்ச் அமைப்பை ஒட்டியே இதிலும் சூரியனின் வடதிசை தென்திசை செலவுகளில் கதிர்திருப்ப நாட்களைக் கணிக்கும் வகையில் வட்டின் விளிம்பில் உள்ள கிழக்கு மேற்கு வளைவுகள் உதவியுள்ளன என்பதைக் கணித முறைப்படி கண்டறிந்துள்ளனர்.
உலகிலேயே
மிகப் பழமை வாய்ந்த வான் வரைபடமான இந்த நெப்ரா வான வட்டு, 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய
தொல்பொருள் கண்டுபிடிப்பாகவும், உலகின் முக்கியமான
வரலாற்று ஆவணங்களில் ஒன்றாகவும் யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.