Wednesday, October 2, 2024

நாட்காட்டியும் காலக்கணக்கீடும்


மனித இனத்தின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று காலக்கணக்கீடும் நாட்காட்டியும்.  நாட்காட்டிக் காலக் கணக்கீடு வேளாண் சமூகமாக மாறிய மனித இனத்திற்குத் தக்கப் பருவத்தில் பயிர் செய்ய,  அறுவடை செய்து நல்ல பலனை அனுபவிக்க உதவியது என்பது முதன்மைக் காரணமாகக் கூறப்பட்டாலும், கற்கால மனிதர்களும் காலக்கணக்கில் ஆர்வம் கொண்டிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 34,000 ஆண்டுகள்  காலத்தால் முற்பட்ட  பல குகை ஓவியங்களில், எலும்புகளில், கற்களில் செதுக்கப்பட்ட நிலவின் வளர்பிறை தேய்பிறை நிலைகளைக் குறிக்கும் நிலவுவழி  நாள் கணக்கிடல் முறையினைக்  காட்டும்  தொல்லியல் சான்றுகள்  கிடைத்துள்ளன.

நிலம், பொழுது என முதற்பொருள் இருவகைப்படும் என்பது தொல்காப்பிய இலக்கணம். அறிவியல் கோணத்தில் இதை அணுகினால்; புவிக் கோளத்தில் நிலநடுக்கோட்டுப் பகுதி, வெப்ப மண்டலப் பகுதி, வடகோளப் பகுதி, தென்கோளப் பகுதி போன்ற பகுதிகளில் உள்ள ஒரு நிலத்தின் அமைவிடமும்,  பருவங்கள் தோறும் அப்பகுதி எதிர் கொள்ளும் தட்ப வெப்ப நிலை எனவும்  நாம் புரிந்து கொள்ள முடியும். தாங்கள் வாழும் பகுதியின் பொழுதின் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து தங்களுக்கு ஏற்ற வகையில் தங்கள் வாழ்நாளை வகுத்துக்கொள்ள மக்கள் காலக் கணக்கிடுவது இயல்பு. திட்டமிடுதல் அவர்கள் வாழ்வை மேம்படுத்தும்.

காலக்கணக்கீடு என்பது  இயற்கையையொட்டி அமைந்த நாள், மாதம், ஆண்டு என காலப்பொழுதின் பிரிவுகளைக் காட்டும் வகையில் அமைந்திருந்தது. இதற்கு அடிப்படைத் தேவை; வானியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்தல், ஆவணப்படுத்துதல், அவற்றின் அடிப்படையில் கணித்தல் ஆகும். ஏன் எனில் கதிரவன், நிலவு, நாள்மீன்கள்  எனப்படும் விண்மீன்களின் இயக்கங்கள்  காலம் கடப்பதைக் கணிக்க உதவின. அறிவியல் ஆய்வுக் கருவிகள் அற்ற அந்நாட்களில் எளிய மக்கள் தங்கள் கண்களால் காணும் வானியல் காட்சிகள் மூலம் காலம் கடப்பதையும், அவை ஒரு சுழற்சியாகக் குறிப்பிட்ட காலங்களில் மீண்டும் மீண்டும் நடப்பதையும் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொண்டிருந்தனர்.  உலகம் முழுவதும் காலக்கணக்கீடு இவ்வாறே மேற்கொள்ளப்பட்டன என்பதை ஒரே போன்ற அடிப்படையில் அமைந்த உலக நாட்காட்டிகள் காட்டுகின்றன. 

ஆனால் இயற்கையில் கதிரவன், நிலவு, புவி ஆகியவற்றின் நகர்வுகள் சரியான வட்டத்தில் அமையாமல் நீள் வட்டத்தில் அமைவதும், போதாக்குறைக்கு புவி தன் அச்சில் 23.5 பாகை சாய்மானச் சுற்றாகச் சுழல்வதும்,  'அச்சுத்திசைமாறுமியக்க' (precessional motion) நேர்வும் , அதனால் 'பருவகால முந்துநிலை' (precession of equinoxes) என்பதும் காலக்கணிப்பு துல்லியத்தை நோக்கி நகர்வதற்கான சவால்களாகவே இருந்து வந்துள்ளது.  காலக் கணக்கின் அடிப்படை நோக்கமே துல்லியத்தை நோக்கி நகர்வதுதான். ஆகையால் வரலாறு முழுவதும் நாட்காட்டிகள் மாற்றம் பெற்றுக் கொண்டே வந்தன,  துல்லியப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வந்துள்ளது. இன்று உலகப் பொது நாட்காட்டியான கிரிகோரியன் நாட்காட்டியும் அவ்வாறு சீரமைக்கப்பட்ட ஒரு நாட்காட்டியே.  இந்திய வானியலிலும் காலக்கணிப்பிலும் அத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பழந்தமிழகத்தில் கணியன், வள்ளுவன் போன்றவர்கள் வானியல் நோக்கி காலங்கணித்து மக்களுக்கு உதவினார்கள்.  இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் புழக்கத்தில் இருந்த  "சூரிய சித்தாந்தம்" என்ற காலம்  கணிக்கும் முறை கிரேக்க வானியலின் தாக்கத்தில் 'கிபி 285 முதல் கிபி 570' ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பல சீரமைப்பிற்கு உள்ளானது ('இந்திய தேசிய நாட்காட்டி சீரமைப்பு', குழு அறிக்கையிலிருந்து).  வானியல் தகவல்களுடன்,  கணிதவியல் காலக்கணிப்பு முறை நோக்கி நகர்ந்தது.  இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு வானியலுடன்  ஒப்பிட்டு பருவத்துடன் காலக்கணிப்பு ஒத்திசைந்து செல்லும் வகையில் நாட்காட்டி கணக்கில் சீரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.  இன்றும்  "சூரிய சித்தாந்தம்" பலவேறுவடிவங்களில் இந்தியாவின் காலக்கணிப்புகளில் இடம் பெற்றுவருகிறது.

இந்திய நாட்காட்டிகள் எவையும், தமிழ் நாட்காட்டி உட்பட,  அறிவியல்முறையில் அமையவில்லை, பருவகாலம் (24 நாட்கள்) விலகிச் சென்றுவிட்டது என்று வானியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள். மார்ச் 20/21 இல் இளவேனில் நாள் தொடங்கும் பொழுது  'சித்திரை' தொடங்காமல் ஏப்ரல் 14 இல் சித்திரைத் திங்கள் தொடங்குவது  இதற்குச் சான்று.   தோராயமாக  72 ஆண்டுகளுக்கு ஒரு நாள் என காலக்கணிப்பில் விலகுகிறது என்பது வானியல் அடிப்படையில் கூறப்படும் கணக்கு.  அதாவது,  இன்றைய நிலையில் பருவ காலம் 24 நாட்கள் விலகல் என்றால் 24  X 72 =1728, இன்றிலிருந்து 1728 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த காலக் கணக்கை இன்றும்  பின்பற்றி வருகிறார்கள்.    அப்படியானால்  அது  'கிபி 296' (2024-1728=296) ஆண்டையொட்டிய ஏதோ ஒரு காலகட்டத்தில் பின்பற்றத் தொடங்கிய ஒரு காலக்கணிப்பு.   இன்றுவரை பருவகாலத்துடன் இசைந்து செல்லுமாறு அக்காலக்கணிப்பு  சீரமைக்கப்படவில்லை என்று நாம் ஒரு தோராயமாகக்  கூறலாம்.

இந்த மாற்றம் தமிழகக் காலக்கணக்கில் நுழைந்ததற்கு இலக்கியத்தில் சான்று கிடைக்குமா என்று பார்க்குங்கால், சங்கம் மருவிய  (கி.பி.250-600) காலகட்டத்து இலக்கியங்களாக வகைப்படுத்தப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான  ‘ஆசாரக்கோவை’  நூல் பாடலில் உள்ள ஒரு குறிப்பு பொருந்துகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பலவும் பௌத்த, சமண நூலாசிரியர்களால் இயற்றப்பட்ட அறநெறி நூல்கள்.  'ஒழுக்கங்களின் தொகுதி' என்ற பொருள்கொண்ட ஆசாரக்கோவை அவற்றிலிருந்து முற்றும் மாறுபட்ட வைதீகச் சமயப் பின்புலம் கொண்ட ஒரு நூல்.  எவற்றைச் செய்தால் தீமைகள் நேரும் என்பதை விளக்குவது இந்த நூலின் நோக்கம். இது தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, சுக்கஸ்மிர்தி போன்ற  வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பு என தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும்
    புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் – தொலைவில்லா
    அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்
    என்றும் பிழைப்ப திலை. (ஆசாரக்கோவை – 92)

பாடல் கூறுவது; அறிவுள்ளவர் முக்கியத்துவம் வாய்ந்த நற்செயல்களைச் செய்யும்பொழுது என்றும் புலையரிடத்து நாள் கேட்டுச் செய்யார், ஒழுக்கம் குறையாத அந்தணர் ஒருவர் குறித்துத் தரும் நாளில் நற்செயல்களைச் செய்வார். ஏனெனில் அவர் சொல்வது என்றும் பிழையாத் தன்மை கொண்டது. அதுவே நன்மையும் தரும்.  இங்குப் பாடல் அந்தணர் ஒழுக்கம் குன்றாதவர் என்று காட்டும் பொழுது, புலையர் ஒழுக்கமற்றவர் என்பது சொல்லாமல் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து. மேலும், புலையர் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுபவர் வள்ளுவர் என்ற சோதிடங்கூறும் கீழ்வகுப்பார் என்று உரை நூல் விளக்கம் தருகிறது.

ஆசாரக்கோவை நூலின் காலம், இந்தியக் காலக்கணிப்பு "சூரிய சித்தாந்தம்" முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிய அதே காலகட்டம். ஆகவே இந்தக் காலக்கட்டத்தில் தமிழக மக்களின் பண்டைய வானியல் வழிப்படி கூறும் காலக்கணிப்பு முறை அவர்கள் கைநழுவிப் போனது  என்றும் கொள்ளலாம்.


 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 252
10/2/2024      நாட்காட்டியும் காலக்கணக்கீடும் 
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi