Sunday, January 25, 2026

கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி

கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி


கார்ல் சாகன் (1934-1996), ஒரு புகழ்பெற்ற அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர், அண்டவியல் ஆய்வாளர்.  சிக்கலான அறிவியல் கருத்துக்களை எளிய முறையில் தெளிவிக்கக்கூடிய வகையில் உரையாற்றக் கூடிய வல்லமை பெற்றிருந்த அறிவியல் உரையாளராக அறியப்பட்டதால் மக்களிடம் அவர் உரைகளுக்கு நல்ல செல்வாக்கு  இருந்தது. 


கார்ல் சாகனின் ஆலோசனையின் பேரில், 1990 பிப்ரவரி 14 அன்று விண்கலம் வாயேஜர் -1 புவியின் சுற்றுப்புறத்தை விட்டு சூரிய மண்டலத்தின் விளிம்புகளுக்குப் புறப்படும்போது, புவியை இறுதியாக ஒருமுறை சுற்றிவந்து படம் எடுத்தது.   புவியின் இந்த வெளிர் நீலப் புள்ளி உருவப்படத்தைப் படம்பிடித்தபோது வாயேஜர்-1 விண்கலம் சுமார் 4 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தது, சிதறிய ஒளிக்கதிர்களின் இடையே சூரியனுக்கு மிக அருகில் படம் எடுத்ததன் விளைவாக, இப்படத்தில் பூமி, ஒரு சிறிய ஒளிப் புள்ளியாக, 0.12 பிக்சல் அளவுள்ள வெளிர் நீலப் புள்ளியாகத் தெரிகிறது.



கார்ல் சாகன் எழுதிய "பேல் ப்ளூ டாட்: எ விஷன் ஆஃப் தெ ஹியூமன் ஃப்யூச்சர் இன் ஸ்பேஸ்" (Pale Blue Dot: A Vision of the Human Future in Space by Carl Sagan) என்ற நூல் அதிகம் விற்பனையான நூல்களுள் ஒன்று.  இது விண்வெளி ஆய்வின் தேவையை வலியுறுத்தியது. கார்ல் சாகனின் 'வெளிர் நீலப் புள்ளி: விண்ணை நோக்கிய பார்வையால் உணரும் மனிதர்களின் எதிர்காலம்' என்ற இந்த நூலின் கருத்து மிகவும் பரவலாக வாசிக்கப்படு பாராட்டப்படும் ஒரு கட்டுரை.  அதன் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. 

நாம் விண்வெளிக்குச் சென்று அங்கிருந்து புவியைப் பார்த்தால், அது ஒரு சிறிய புள்ளியாகத் தான் தெரியும்…

“மீண்டும் அந்தப் புள்ளியைப் பாருங்கள். அதோ அங்கே. அதுவே நம் வீடு. அதுவே நாம் இருக்குமிடம்.  அங்குதான் நீங்கள் விரும்பும் அனைவரும், நீங்கள் அறிந்த அனைவரும், நீங்கள் எப்போதாவது  கேள்விப்பட்ட அனைவரும், இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்கையை அங்கேயே வாழ்ந்தார்கள்.

நமக்கு மகிழ்ச்சியும் துயரமும் தரும் அனைத்தும், நம்பிக்கை தருவதற்குத் தோன்றிய ஆயிரக்கணக்கான மதங்கள், கொள்கைகள், பொருளாதாரக் கோட்பாடுகள், வேட்டையாடியும்  சேகரித்தும்  வாழ்ந்த முன்னோர்கள் அனைவரும், ஒவ்வொரு வீரரும் கோழையும், ஒவ்வொரு பண்பாட்டை ஆக்கியவரும் அழித்தவரும், ஒவ்வொரு அரசரும் உழவரும்,  காதலிக்கும் இளவயது இணையர்கள் அனைவரும், ஒவ்வொரு தாயும் தந்தையும், வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு குழந்தையும், கண்டுபிடிப்பாளர்களும் ஆய்வாளர்களும், ஒவ்வொரு வாழ்வியல் நெறி வழிகாட்டியும், ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதியும், ஒவ்வொரு ‘சூப்பர் ஸ்டார்’ பிரபலங்களும், ஒவ்வொரு ‘உயர்வாக மதிக்கப்பட்டத் தலைவர்களும்’,  ஒவ்வொரு புனிதரும் பாவியும் என நம் மனிதயின வரலாற்றில் வாழ்ந்த அனைவரும் அந்தச் சூரிய ஒளிக்கதிரில் மிதக்கும் தூசித் துகள் போலத் தெரியும் அந்தச் சிறு புள்ளியில்தான் வாழ்ந்தார்கள்.

பரந்த பிரபஞ்ச அரங்கில் பூமி என்பது மிகச் சிறிய மேடையே. இந்த ஒரு சிறு புள்ளியின் ஒரு மூலையில் வாழ்பவர்கள்,  தாங்கள் சென்ற இடத்தில் தம்மைப் போலவே இருக்கும் உலகின் மற்றொரு மூலையில் வாழ்பவர்களுக்கு இழைத்த முடிவில்லா கொடூரங்களை எண்ணிப் பாருங்கள். அவர்கள் ஒருவரையொருவர் அடிக்கடி எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்கிறார்கள், எவ்வளவு ஆவலுடன் ஒருவரையொருவர் கொல்லத் தயாராக இருக்கிறார்கள், எவ்வளவு தீவிரமான வெறுப்பை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நினையுங்கள். பெருமையும் வெற்றியும் அடைய வேண்டும் என்று, இந்தப் புள்ளியின் ஒரு சிறு பகுதியினைத் தற்காலிகமாக ஆதிக்கம் செய்யும் ஆசையில், எத்தனை தளபதிகளும் பேரரசர்களும் இரத்த ஆறுகளை  மண்ணில் ஓட்டவிட்டார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.

நம்முடைய தோரணைகள், கற்பனையான நமது முக்கியத்துவம் என்ற உணர்வு, பிரபஞ்சத்தில் நமக்கு ஒரு தனிச் சிறப்பிடம் இருக்கிறது என்று கருதும் அறியாமை  ஆகியவற்றை எல்லாம் இந்த வெளிர்நீலப் புள்ளி சவாலுக்கு உள்ளாக்குகிறது. இந்தப் பரந்த, அனைத்தையும் சூழ்ந்த பெரிய அண்டவெளி இருளில், நம் பூமி ஒரு தனிமையான சிறு துகள் மட்டுமே. இந்தப் பரந்த அண்ட வெளியில்  நம்மிடமிருந்து நம்மையே காப்பாற்ற வேறு எங்கிருந்தாவது உதவி வரும் என்பதற்கு எந்த ஓர் அறிகுறியும் இல்லை.
 
இதுவரை உயிர் வாழத் தகுதியான உலகமாக அறியப்பட்ட ஒரே இடம் பூமி தான். வேறு எங்கும், நாம் எதிர்நோக்கும் குறைந்த அளவு  எதிர்காலத்தில், மனித இடம் குடியேற வேறிடம் ஏதும் கிடையாது.  ஆமாம்.  வேறு கோள்களுக்குச் சென்று வரமுடியும், —ஆனால் குடியேற இன்னமும் வாய்ப்பில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இப்பொழுது வாழ நமக்கு இருக்கும் ஒரே இடம் இந்தப் பூமிதான். 

வானியல் உண்மைகள் மனிதரிடம் பணிவு மனப்பான்மையை, பண்பை உருவாக்கும் அனுபவம் என்று சொல்லப்படுகிறது.  நாம் காணும் நமது சிறிய உலகின் இந்தத் தொலைதூர உருவத்தை விட மனித அகந்தையை அறியாமையை உணர்த்தும்  சிறந்த சான்று வேறொன்றும் இல்லை.

எனக்கு இது, நாம் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பையும், இதுவரை நாம் அறிந்த ஒரே இல்லமான இந்த மங்கலான வெளிர் நீலப் புள்ளியைப் பாதுகாத்து, மதித்து, நேசிக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்துகிறது.”   
— கார்ல் சேகன், பேல் ப்ளூ டாட்: எ விஷன் ஆஃப் தெ ஹியூமன் ஃப்யூச்சர் இன் ஸ்பேஸ்


உதவிய தளங்கள் :
காணொளி: https://youtu.be/tgQ1PtkZvGU
தகவல்: https://www.planetary.org/worlds/pale-blue-dot; 
Carl Sagan (1934-1996), https://science.nasa.gov/people/carl-sagan/


நன்றி:
கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி
 - தேமொழி
இதழ்: தமிழணங்கு-பிப்ரவரி 2026; 
பக்கம்: 19-21


#தமிழணங்கு,  #அறிவியல், #கார்ல் சாகன், #Themozhi

Wednesday, January 14, 2026

சங்க இலக்கியத்தில் பொங்கல்

சங்க இலக்கியத்தில் பொங்கல்



சங்க இலக்கியங்களில்  பொங்கல் குறித்த செய்திகள் உள்ளனவா என்ற தேடலில் கிடைத்த செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.  இத்தேடலுக்கு உறுதுணையாக நின்றது முனைவர். ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கிய தமிழ் இலக்கியத் தொடரடைவு தளம் [http://tamilconcordance.in/index.html].

இலக்கியப் பொங்கல் :
பொங்கல் வெண்மழை (நெடு 19, அகம் 217), பொங்கல் இளமழை (ஐங் 276) என மழை கொட்டி முடித்த பஞ்சு போன்ற வெண்மேகத்தையும்;  
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ் (அகம் 129) என்று  வெடித்து இருக்கும் வெண் பஞ்சையுமே பொங்கல் என்ற சொல்லுடன் தொடர்பு கொண்டதாக சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.  இதிலிருந்து நுரைபோல பொங்கும் வெண்பஞ்சு போன்ற தோற்றம் கொண்டது 'பொங்கல்' என்ற சொல்லின் விளக்கமாகக் கொள்ளலாம், பொங்கி எழுவது பொங்கும் அலை போன்றவற்றையும் பொங்கு, பொங்கி என்ற சொற்கள் குறிப்பிடுகின்றன.

மாமூலனார் எழுதிய பாடல் (அகநானூறு -393) ஒன்று வரகரிசிப் பால் பொங்கல் செய்யும் முறையை விளக்குவதையும் காண முடிகிறது.

393. புழுக்கிய பொங்க அவிழ் புன்கம்
பால் பொங்கல்

    . . . முதைச் சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டுக்
    கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி 5
    கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
    அகன் கண் பாறைச் செவ் வயின் தெறீஇ
    வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
    பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்பச்
    சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் 10
    தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
    உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை
    ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவாக்
    களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி
    இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் 15
    குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்
    மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் . . .
            [ —அகநானூறு -393 பாலை;   மாமூலனார்]

பாடலின் பொருள் விளக்கம்:
புதுக்கொல்லையில் தழைத்து, ஈரிய இலையின் நீண்ட இதழையுடைய வரகின் கவர்த்த கதிருடன் கூடிய தட்டைகளைத் தொகுத்த பொலியில், மாடுகட்டிப் போரடித்து, மாடுகளின் கவர்த்த குளம்பால் துவைக்கப் பட்ட பல கிளைகளினின்று உதிர்ந்த வரகினை, இடம் அகன்ற பாறையில் செவ்விய களத்து மேட்டில்  குவித்து,  அவற்றைத் தூற்றி, வரிகள் பொருந்திய பருத்த தோள்களை உடைய தந்தையும் தமையன்மாரும் சுமந்து கொண்டுவந்து அளிக்க,  நீண்ட செவிகளையுடைய தாயார், பண்ணைக்கீரையின் வெள்ளிய பழத்தின் அரிசியை ஒப்ப, அவற்றைத்  திரிகையால் திரித்து உமியைப் போக்கி, சுளகினால் கொழித்த வெண்மையான அரிசியை, சிறந்த பூண் அமைந்த உலக்கையினால் மாற்றிமாற்றிக் குத்தி உரலில் இட்டுத் தீட்டிய, உரலின் குழி நிறைந்த அரிசியை, அங்குள்ள பெரிய சுனையின் நீரோடு முகந்து, மண்ணாற் செய்த பானையில் கற்களை அடுக்கியமைத்த அடுப்பில் ஏற்றி, கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த பூந்தாது போல, குடவர்  ஆக்கிய விளங்குகின்ற அவிழாகிய பொங்கல் சோற்றை,  மதர்த்த நல்ல பசுவின் பாலுடன் கூட்டிப் பகிர்ந்து தருவர்.  

குறிப்பு: இந்தப் பொங்கலைப் பொங்கல் நாளன்று செய்தார்கள் என்ற குறிப்பு பாடலில் கொடுக்கப்படவில்லை. பொருள் தேடி வேற்றுப் புலம் செல்லும் வழிப்போக்கர்களின் பசி தீர்க்க குடவர் மக்கள் வரகரிசிப் பால் பொங்கல் செய்து பரிமாறுகிறார்கள். ஆக, வரகரிசிப் பால் பொங்கல் செய்முறை விளக்கமாக இது அமைகிறது.  

"பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி"
இனிய தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் 
14/1/2026

#இலக்கியம், #பொங்கல், #Themozhi

Sunday, January 4, 2026

ஆன்மிக வழியைக் கைவிடும் மக்கள்

ஆன்மிக வழியைக் கைவிடும் மக்கள்


உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேலை நாடுகளான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் மக்களிடையே சமயச் சார்பு, இறை நம்பிக்கை ஆகியன குறைந்து வரும் காரணத்தால் தேவாலயங்கள் போகும் வழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது.  அத்துடன், உலக அளவில் இறைமறுப்பு /சமயம் சாராதவர் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது. 

தோராயமாக;  இன்றைய உலகில்  4 பேரில் ஒருவர் கிறித்துவராகவும் (28.8%), ஒருவர் இஸ்லாமியராகவும் (25.6%), ஒருவர் கடவுள்/சமய நம்பிக்கை சாராதவராகவும்(24.2%), மற்றும் ஒருவர் எந்த பிற சமயத்தவராகவோ( இந்து/பௌத்தம்/யூதம்/மற்றும் பிற=21.4%) இருப்பதாக  பியூ ஆய்வு நிறுவனத்தின் (Pew Research Center) அறிக்கை கூறுகிறது.

 


உலகில் உள்ள ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையில் இந்து மதத்தினர் அதிகம் இருப்பதற்கு  ஒரே காரணம் இந்தியாவின் மக்கள்தொகை அதிகம் இருப்பதாலும்,  அவர்களில் 80% மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுவதாலும் மட்டுமே. இந்து சமயத்தை வளர்க்க வேண்டும் என்றால் இந்திய-இந்துக்களின் மக்கள்தொகையை அதிகரித்தால் மட்டும்தான், அவர்களும் இந்து சமயக் கொள்கையைத் தொடர்ந்தால் மட்டும்தான் இயலும். 

உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும், தேவாலயங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.  இதற்கு முக்கியமான காரணம் ஆலயங்களுக்கு  வரும் மக்கள்தொகை குறைவது, அதன் தொடர் விளைவாகப் பெரிய வழிபாட்டு இடங்களைப் பராமரிக்கும் செலவும் கட்டுப்படியாகாமல் போவதும்தான்.  சமயம் இறை நம்பிக்கை ஆகியன குறித்து மக்கள் மனப்பாங்கில் ஏற்படும் மாற்றமும், நகரமயமாக்கல் வளர்ச்சியும் ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் நிலை குறைவதன் மூல காரணங்களாக அமைகின்றன. 

ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி நாடுகளிலும்; அமெரிக்கா, கனடா ஆகிய  வட அமெரிக்க நாடுகளிலும்; ஆஸ்திரேலியாவிலும் மக்கள் வருகையற்ற ஆலயங்கள் முதலில் பராமரிக்க இயலாமையால் மூடப்படுகின்றன. பல ஆண்டுகளாகப்  பயன்பாட்டில் இல்லாத வழிபாட்டு ஆலயங்கள் பின்னர் கட்டிட விற்பனை சந்தையில்  வைக்கப்படுகின்றன (https://www.churchesforsale.com/).  அவற்றை வாங்குபவரின் திட்டப்படி பின்னர் அவை மிகப் பெரிய வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவன கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்கள், சிறு தொழிற்சாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பண்பாட்டு மையங்கள்  என்ற மாற்றங்களைப் பெறுகின்றன. 
பொது வெளியில் சமய விழாக்கள், வழிபாடுகள் நடத்தப்படுவது  குறைவதும்; இயல்பாகவே ஏற்படும் பிற வாழ்வியல் நடைமுறை மாற்றங்களால் வெளிப்படையாக மத அடையாளங்களை அணிவதை,  பொது வெளியில் மதம் குறித்த உரையாடல்களை மக்கள் கைவிடுவதும்   காலப்போக்கில் சமய சச்சரவால் ஏற்படும் கலவரங்களையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் குறைத்து விடும். மக்கள் அனைவரும் தத்தம் கைப்பேசியில் ஆழ்ந்திருக்கும் போது, நேரில் அருகில் உள்ளவர்களிடையே உரையாடலே இருப்பதில்லை. பிறகு,  சர்ச்சைக்குரிய உரையாடல் ஏது? பின்னர் அதனால் ஏற்படக்கூடிய மனக்கசப்பு, சண்டை சச்சரவுதான் ஏது? இதனால் தொலைநுட்ப வளர்ச்சிக்குத்தான் நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். 

இன்றைய புள்ளிவிவரங்களின் படி சீனா (1.3 பில்லியன்), அமெரிக்கா (101 மில்லியன்),  ஜப்பான் (73 மில்லியன்) ஆகிய நாடுகளில் சமயம்-இறை சாரா கொள்கை கொண்டவர் எண்ணிக்கை மிகுதி. இந்த நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதும், அவர்கள் உருவாக்கித் தரும் கண்டுபிடிப்புகளைக் கொண்டு இந்திய ஆன்மிக மக்கள் தங்கள்  மதச் சடங்குகள் வழிபாடுகள்  ஆகியவற்றின் மூலம் மதத்தை வளர்க்கிறார்கள் என்பதுதான் நகை முரண். அண்மையில் அடுக்குமாடிக் குடியிருப்பு புதுமனைப் புகுவிழாவில் வேதியர் மந்திரம் சொல்ல ஒரு தானியங்கு பசு பொம்மை பயன்படுத்தப் பட்டு சடங்குகள் செய்யப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வலம் வந்ததை இங்கு நினைவு கூரலாம் (https://www.youtube.com/shorts/f99bGVFtatM).  இக்கருத்தை அறிஞர் அண்ணாதுரை  சென்ற நூற்றாண்டில் எழுதிய ஆயுத பூஜை கட்டுரையிலேயே சுட்டிக் காட்டி இருப்பார். 

புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிப்பதைவிடக் கண்டுபிடிக்கப்பட்டவற்றை இந்தியர் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர்களாகவே இருக்கும் நிலை மாற வேண்டும் என்றால் இந்திய மக்களிடம் அறிவியல் சிந்தனையும் மனப்பாங்கும் வளர வேண்டும்.  அந்த மானப்பான்மையையும் அரசியலமைப்பு வரையறை கொண்டுதான் இந்தியாவில் வளர்க்க வேண்டிய ஒரு நிலை. அறிவியல் கருத்தரங்குகளில்  ஆன்மிகப் புராணக்கதைகளைப் பேசித்  திரிக்கும் நிலையும் நடைமுறையாக இருக்கிறது. அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற  அறிவியல் அறிஞர் வெ.ராமகிருஷ்ணன் இந்தியா அறிவியல் கருத்தரங்கங்கள் சர்க்கஸ் போல நடைபெறுகின்றன அவற்றில் நான் இனி பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்ததை நாம் கடந்து போக இயலாது. 



 
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் மக்களிடையே சமயச்சார்பு இன்மையும் இறைநம்பிக்கை இன்மையும் அதிகம் இருப்பதை  ஆய்வறிக்கைகள்  காட்டுகின்றன.  பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் மகிழ்ச்சியான நாடுகள் எனத் தொடர்ந்து தரவரிசைப் படுத்துதலில் முன்னிடங்களில் உள்ளன.  இந்நாடுகள்  மதச்சார்பற்றவையாகவும் அதிக அளவில் இறை நம்பிக்கையற்ற மக்கள் வாழும் நாடுகளாகவும் அறியப்படுகின்றன.  இந்நாடுகளில் நிலவும் பொருளாதாரம், மக்களுக்கு ஆதரவான சமூக சூழ்நிலை, தனிமனித உரிமை ஆகியவையும் (Economic prosperity, High social support, Freedom to make life choices) மேம்பட்ட நிலையில் இருப்பவை. பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்நாடுகளின் மக்கள் வாழ்வில் பசி, வறுமை, நோய் குறித்த கவலைகளும் குறைவு.  மனித நேய அடிப்படையில் சமூக ஆதரவுகள் அதிகம் இருப்பதுடன், தனி மனித வாழ்க்கையில் அவர்களின் வாழ்வின் விருப்பத்தைக் கட்டுப்படுத்தும் முன்னேற்றத்தைத் தடுக்கும் சமூகக் கட்டுப்பாடுகளும் குறைவு.  

எங்கு மக்களுக்கு  அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதில் சிக்கல் இல்லையோ, எங்குத் தனிமனித உரிமை மதிக்கப் படுகிறதோ அந்தச் சூழலில் அவர்களுக்குப் பொதுவாழ்வில் மனமகிழ்ச்சி ஏற்படுவதும்;  அதன் காரணமாக அம்மக்கள்  தங்களுக்கு இறைமூலமோ  சமயம் மூலமோ  மீட்சி மற்றும் உதவி தேவை என்ற நிலையில்  இல்லாமல் இருப்பதையும் புரிந்து கொள்ளலாம். துன்பம் ஏற்படக்கூடும் என்ற கலக்கமும், மக்களுக்குத் துன்பம் நேர்கையிலேயே கடவுள் குறித்த எண்ணம் உருவாவதன் உளவியல் அடிப்படைக்குச் சான்றாகவும் இதனைக் கருதலாம். "மதம் மக்களின் போதைப்பொருள்" ("religion is the opium of the people" ) என்ற  கார்ல் மார்க்ஸின் கூற்று இதனை விளக்கக்கூடிய ஓர் உண்மையே. சமய போதையில் ஆழ்ந்து மக்கள் கவலைகளை எதிர்கால அச்சத்தை மறக்க முயல்கிறார்கள்.


சான்றாதாரங்கள்: 
How the Global Religious Landscape Changed From 2010 to 2020
https://www.pewresearch.org/religion/2025/06/09/how-the-global-religious-landscape-changed-from-2010-to-2020/
June 9, 2025

List of religious populations
https://en.wikipedia.org/wiki/List_of_religious_populations

Indian Science Congress is a circus, won't attend it: Nobel laureate V Ramakrishnan
https://www.firstpost.com/india/indian-science-congress-is-a-circus-wont-attend-it-nobel-laureate-v-ramakrishnan-2572268.html#google_vignette
January 6, 2016

These Are the World’s Happiest Countries in 2025
https://www.afar.com/magazine/the-worlds-happiest-country-is-all-about-reading-coffee-and-saunas
By Michelle Baran, March 20, 2025
 
2018 data: Across countries, the happiest ones are the least religious
https://whyevolutionistrue.com/2018/03/22/2018-data-across-countries-the-happiest-ones-are-the-least-religious/
March 22, 2018

Are religious people happier, healthier? Our new global study explores this question
https://www.pewresearch.org/short-reads/2019/01/31/are-religious-people-happier-healthier-our-new-global-study-explores-this-question/

நன்றி:
தமிழ் மரபுத் திணை — 39 [ஜனவரி — 2026]
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2026/01/tamil-marabu-thinai-39-january-2026.pdf  





#இறைமறுப்பு, #அறிவியல், #ஆன்மிகம், #திணை, #Themozhi

Saturday, January 3, 2026

வண்டின் சாறும் ஓரியன் விண்மீன் கூட்டமும்

வண்டின் சாறும் ஓரியன் விண்மீன் கூட்டமும்


ஓரியன் என்பது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் மிகத் தெளிவாகத் தெரியும் ஒரு முக்கிய விண்மீன் கூட்டமாகும். இது வான நடுக்கோட்டிற்கு  அருகில் அமைந்திருப்பதால், உலகின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து இது தெரியும். எனவே உலகின் பலபகுதிகளிலும் இந்த விண்மீன் கூட்டம் குறித்த கதைகள் பல உள்ளன.  எல்லாமே இந்த விண்மீன் கூட்டத்தை ஒரு போர் வீரனாகவோ, வேடனாகவோ, தெய்வமாகவோ  உருவகப்படுத்துவன.  இரண்டாம் நூற்றாண்டின் வானியலாளர் டாலமியின் குறிப்புகள் முதற்கொண்டு, அமெரிக்க மாயன் மக்கள், கிரேக்கப் புராணங்கள், சுமேரியர்களின் தொன்மங்கள் எனக் காணக்கிடைக்கும் பண்டைய  பதிவுகளிலும் ஓரியன் விண்மீன் கூட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமேரியர்கள் ஓரியனை,  கில்காமேஷ் ஒரு காளை (டாரஸ்/ரிஷபம்) உடன் சண்டையிடுவதாகக் கற்பனை செய்ததும் பதிவாகி உள்ளது. வானியலில் கிரேக்கர்கள் முதன்மை நிலையில் இருந்ததால் கிரேக்கப் புராண வேட்டைக்காரனான 'ஓரியன்' பெயரால் இது பெயரிடப்பட்டது. இந்தியாவில் இதைச் சிவனின் நடனமாகக்  காண்கிறார்கள்.  கருவானில் வெண்புள்ளிகளாகத் தெரியும் விண்மீன் புள்ளிகளை அவரவர் கற்பனைப்படி இணைத்து வடிவம் கொடுப்பதும் அவற்றுக்குக் கதைகள் சொல்லி விளக்கம் கூறுவதும் மக்களின் கற்பனை வளத்திற்குச் சான்று, கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு.  






இரவு வானத்தில் ஒளிரும் ஓரியனின் ஒளிமிக்க ஏழு விண்மீன்களில்   நான்கு நட்சத்திரங்கள் - பீட்டல்ஜியூஸ், பெல்லாட்ரிக்ஸ், ரிகல் மற்றும் சைப் (Betelgeuse, Bellatrix, Rigel and Saiph) ஆகியன தோராயமாக  ஒரு பெரிய, செவ்வக வடிவத்தை உருவாக்குகின்றன, அதன் மையத்தில் ஓரியனின் இடைவார் (Orion's Belt) பகுதியில் மூன்று நட்சத்திரங்கள் - அல்னிடக், அல்நிலம் மற்றும் மின்டகா (Alnitak, Alnilam, and Mintaka) உள்ளன. வீரனின் தலையில் மெய்சா (Meissa) எனப்படும் கூடுதல் எட்டாவது விண்மீன் ஒன்றும் உள்ளது.  

இவற்றில் பீட்டல்ஜியூஸ் விண்மீன் ஆல்பா ஓரியோனிஸ் என்றும் அழைக்கப்படும், இந்தியர்களால் ஆருத்ரா என்றும் தமிழில் 'திருவாதிரை' என்றும் அழைக்கப்படும் இந்தப் பெரிய சிவப்பு விண்மீன் ஓரியன் கூட்டத்தில்  இரண்டாவது ஒளிமிக்க விண்மீன். இது புவியிலிருந்து 640 ஒளியாண்டுகளுக்கு அப்பால்  (1 ஒளியாண்டு = 10 லட்சம் கோடி கிமீ) உள்ளது. பீட்டல்ஜியூஸ் என்பது அரேபியா சொல்லான yad al-jauzā' (the Hand of al-Jauzā’ / hand of Orion) ஓரியனின் கையின் தோள் பகுதியில் உள்ளது என்ற பொருளில் கூறப்பட்டது.  இடைக்காலத்தில் y என்பதை எடுத்து எழுதும் பொழுது b என மாற்றியதில் Betelgeuse ஆனது.  இந்த விண்மீன்  பின்னணி கொண்ட திரைப்படம் ஒன்று 1988 இல் உருவாக்கப் பட்டபொழுது எளிய விளம்பர உத்தியாக; Betelgeuse என்பதன் உச்சரிப்பு Beetlejuice, பீட்டல்ஜியூஸ் என்று ஒளிப்பதைக் கருத்தில் கொண்டு மாற்றியதில் வீரனின் கை என்பது 'வண்டின் சாறு' என்று பொருள் தரும் வகையில் எதிர்பாராமல் அமைந்துவிட்டது.  




உலகில் பல பண்பாட்டினர்  ஓரியன் விண்மீன் கூட்டத்தைப் போரிடும் வீரனாகக் கற்பனை செய்திருக்க இந்தியர்கள்  சிவனின் நடனமாகக் கற்பனை செய்துள்ளனர்.  வேதத்தில்  சிவன் குறித்த குறிப்பு  இல்லை என்பதையும், சிவனின் புராணக் கதைகள் பிற்காலத்தில் உருவானவை என்பதையும், அத்துடன் சிவனின் நாட்டியக் கோலம் கொண்ட  உருவங்களும் காலத்தால் பிற்பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.   பல்லவ அரசரான முதலாம் மகேந்திரரின் (7 ஆம் நூற்றாண்டு) சீயமங்கலம் அவனிபாஜனம் குடைவரையிலேயே இன்று நாம் பரவலாக அறியும் சிவனின் இடக்கால் தூக்கி ஆடும் நடனக் கோலம் முதன்முதலாகச் சிற்பமாகக் காணப்படுகிறது.  

எனவே,  இந்தக் கற்பனை சற்றொப்ப ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆரியப்பட்டர் வராகமிகிரர் காலத்திற்குப் பின்னர் எனவும் கொள்ளலாம், இதில் கிரேக்க வானியலின் தாக்கம் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.   இந்த ஓரியன் விண்மீன் கூட்டத்திற்குக் கீழே/தெற்கே 'லெபஸ்' விண்மீன் கூட்டம் (Lepus constellation) உள்ளது. லெபஸ் என்பதற்கு இலத்தீன் மொழியில் 'முயல்' என்பது பொருள். இதுவே சிவனின் காலில் மிதிபடும் முயலகன் என்ற அரக்கன்.  முயலகன் அசுரன்  குறித்தும் தொன்மக் கதைகள் புனையப்பட்டன. இருப்பினும் முயலகனாக உருவகித்ததின்  பின்னணி  கிரக்க வானியலின் தாக்கத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. 

சிவன் கையில் தழல் (நெருப்பு) இருப்பது, அவரது அழிக்கும் சக்தி மற்றும் படைக்கும் ஆற்றல் இரண்டையும் குறிக்கிறது என்று கூறப்படுகிறது.  வானின் விண்மீன் கூட்டத்தை சிவனின் நடனமாகக் காண விரும்பியவர்கள் சற்றே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து, தழல் வலக்கையில் இருப்பதாகக் காட்டி இருந்தால் அதைச் செந்நிறத்தில் ஒளிரும் திருவாதிரை விண்மீன் எனக் கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது.  ரிஷபம் விண்மீன் கூட்டமும் அருகிலேயே இருக்கும் நிலையில் சிவனுக்கு காளையை ஊர்தியாக்கியதையும் மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.  

இந்திய வானியலில் ஒவ்வொரு முழுநிலவு நாளுடனும்  இணைந்து வரும் விண்மீன்கள்  நாளில் விழாக்கள் கொண்டாடப்படுவது பண்டைய நாளிலிருந்து வழமை, குளிர்கால மார்கழித் திங்களின் முழு நிலவுநாளில் திருவாதிரை விண்மீன் இணைந்துவரும் நாள் சிறப்பாகக்  கொண்டாடப் படுவது வழக்கம் (அடுத்த முழுநிலவு நாளில் வருவது தைப்பூச விழா நாள், சித்திரைத் திங்கள்  சித்திரை நாள் என்பதும்  அவ்வாறே) 
---

#Betelgeuse, #Orion, #Lepus, #ஓரியன், #திருவாதிரை, #பீட்டல்ஜியூஸ், #வானியல்