Wednesday, April 16, 2025

பாண்டியன் கோட்டைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்



தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரைக் கணக்காயனார் மகனார் ஆன நக்கீரனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல்.  பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்து நாடாளும், அரண்மனையும்  பெருங்கோட்டையும் எவ்வாறு கட்டப்பட்டது என்று விளக்கும் பாடல் வரிகள் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை நூலில் இடம்பெறுகிறது.  இப்பாடலில் 'நிழலற்ற நாளில்' அக்கோட்டையின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதாகக் குறிப்பு உள்ளது.

          "... ... ... ...மாதிரம்
          விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
          இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு
          ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து"
              (நெடுநல்வாடை, 72-75)

"இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு ஒருதிறம் சாரா அரைநாள் " என்ற சொற்றொடர் நிழலற்றநாளை அறியும் முறையைக் குறிக்கிறது.

இப்பாடலுக்கு விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர்;

     "திசைகளிலே விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற
     இடத்தை உடைய ஞாயிறு மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து
     இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் 'சாயா
     நிழலால்' தாரை போக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்
     கொள்ளுந் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச்
     சாரப் போகாத சித்திரைத் திங்களின் நடுவிற்
     பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தா நாழிகையிலே
     அங்குரார்ப்பணம் பண்ணி"

என்று விளக்கம் தருகிறார்.

சித்திரை மாதத்து இடைப்பத்து நாட்களில் (அதாவது சித்திரை 11 முதல் - சித்திரை 20 நாட்களுக்குள்) அப்பகுதியில் எது நிழலற்ற நாளோ அந்த ஒருநாளின் நண்பகலில்  *பதினைந்தாவது  நாழிகையில் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது (இன்றைய கணக்கில் ஒரு நாழிகை = 24 நிமிடம், 15 நாழிகை என்பது 360 நிமிடங்கள்  அல்லது 6 மணி நேரம்; அதிகாலை சூரிய உதயம் 6 மணி முதற்கொண்டு 6 மணி நேரத்திற்குப் பின்னர் என்றால் அது நண்பகல் 12 மணி). 

நெடுநல்வாடையில் குறிப்பிடப்படும் அந்த நிழலற்ற நாள் எந்த மாதத்தின் நாள்? பாடல் குறிப்பிடுவது ஆண்டில் இருமுறை நிகழக்கூடிய நிழலற்ற நாளைக் கொண்ட சித்திரையிலா அல்லது ஆவணியிலா, அது எந்த மாதத்தின் நிழலற்ற நாள் என்று நக்கீரரால் குறிப்பிடப் படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  அது சித்திரை மாதத்து நிழலற்ற நாள் என்று இங்குக் குறிப்பிடுபவர் உரைகாரர் நச்சினார்க்கினியர்.

நிழலற்ற நாள்  என்ற வானியல்  நிகழ்வு ஆண்டில் இருமுறை நிகழ்கிறது. புவிநடுக்கோட்டிற்கு (Equator) வடக்கில் உள்ள கடக ரேகைக்கும் (tropic of cancer:  23.5°),  புவிநடுக்கோட்டிற்குத் தெற்கில் உள்ள மகர ரேகைக்கும் (tropic of Capricorn:  23.5°) இடையே உள்ள வெப்ப மண்டலப் பகுதியில் (tropical region) உள்ள இடங்கள் ஆண்டிற்கு  இருமுறை   நிழலற்ற நாட்களை எதிர்கொள்ளும். அந்நாட்களில் சூரியனை மிகச் சரியாக அதன் வான் உச்சியில் கொண்டிருக்கும் பகுதிகளில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக நிலத்தில் விழுவதால், அந்நாட்களில் அப்பகுதிகளின் நண்பகலில் நிழல் விழாது.

கடக,  மகர ரேகைகளுக்கு அப்பால் உள்ள வட துருவ, தென் துருவப் பகுதிகளில் சூரியன் வான் உச்சியை அடையாது என்பதால் அப்பகுதிகளில்  நிழலற்ற நாட்கள் ஏற்பட வாய்ப்பில்லை.   

1. சூரியனின் வடதிசைச் செலவில் சித்திரையில் ஒருமுறை நிழலற்ற நாளும்,

2. சூரியனின் தென்திசைச் செலவில் ஆவணியில் ஒருமுறையும் நிழலற்ற நாள்  நிகழ்கிறது.

ஆகவே; தமிழ்நாட்டின் பகுதிகளில் ஏப்ரல் மாதம் ஒருமுறையும் ஆகஸ்ட் மாதம் ஒருமுறையும் நிழலற்ற நாள் ஏற்படும் (A எழுத்தில் தொடங்கும் இரு ஆங்கில மாதங்களிலும் -  என்ற குறிப்பை  நினைவில் வைத்துக் கொள்ள எளிது).  "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும்" நல்லுலகத்தில் அடுத்து வரவிருக்கும் நிழலற்ற நாட்கள் எவையெவை என ஒவ்வொரு பகுதிக்கும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 படங்கள் தகவல் உதவி: Zero Shadow Days [For Tamil Nadu] https://alokm.com/zsd.html


 

நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 280
4/16/2025      பாண்டியன் கோட்டைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்

#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi