அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
[புறநானூறு: 99 - ஔவையார்]
தேவர்களைப் போற்றி வழிபட்டும், அவர்களுக்கு வேள்வியுணவைக் கொடுத்து உண்பித்தும் பெறுவதற்கு அரிய கரும்பினை இந்நாட்டுக்குக் கொண்டுவந்தவன் மரபினன் என்று அதியமான் நெடுமான் அஞ்சியைப் புகழ்கிறார் ஔவையார். அவரே மற்றொரு புறப்பாடலில், அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் அதியமான் பொகுட்டெழினி என்பவன் அயல்நாட்டிலிருந்து பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றல் என்றும் பாடுகிறார்.
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே
[புறநானூறு: 392 - ஔவையார்]
தமிழர் திருநாள் பொங்கல் அன்று நாம் விரும்பி உண்ணும் சுவையான கரும்பு நம்நாட்டு மண்ணின் பயிர்களில் ஒன்று எண்ணி இருப்பினும், ஔவையார் கரும்பு அயல்நாட்டிலிருந்து அதியமானின் முன்னோர்களால் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டப் பயிர் என்று குறிப்பிடுகிறார். கரும்புப் பயிரின் வரலாறும் பரவலும் ஔவையார் கூறும் கருத்து உண்மை என்றே காட்டுகிறது.
கரும்பின் தாவரவியல் பெயர் 'சாச்சரும்' (Saccharum spp.); அறிவியல் முறையில் கரும்பின் மீது நடத்தப்பட்ட மூலக்கூறு ஆய்வுகள் கரும்புப் பயிரின் தோற்றம் தென்கிழக்கு ஆசியா மற்றும் நியூகினியா பகுதி என்று காட்டுகிறது. கரும்பு பயிரிடும் முறை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியுள்ளது. தோட்டப்பயிராக கி.மு. 8,000 முதல் வளர்க்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசியா பகுதியிலிருந்து கரும்பு பயிரிடும் முறை உலகம் முழுவதும் பரவியுள்ளது. காட்டுப்புல் என்ற நிலையிலிருந்து, இன்றைய உலகின் முதன்மையான வணிகப் பயிராக மாறியுள்ள கரும்பின் உற்பத்தி, ஆண்டுக்கு 190 மில்லியன் மெட்ரிக் டன் அளவை எட்டியுள்ளது. உலகின் கரும்பின் உற்பத்தியில் 70% கரும்பின் தண்டில் எடுக்கப்படும் சர்க்கரை (sucrose) தேவைக்காகவும், மற்றவை உயிரி எரிபொருள் (biofuel) போன்ற மற்றத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் கரும்பு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகள்.
வணிகப் பயிராகக் கரும்புப் பயிரிடும் முறை கி.மு.1000இல் இந்தியாவில் தோன்றியுள்ளது. கரும்புச் சாற்றைச் சர்க்கரையாக மாற்றும் தொழில்நுட்பம் இந்தியாவில்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கரும்பு ஆலை பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களிலும் உண்டு. இக்கண்டுபிடிப்பே கரும்பைப் பயிரிடும் முறை விரைவாக வளர்ச்சி அடையக் காரணமாக அமைந்தது. சர்க்கரை உற்பத்தி முறை கிடங்கில் அதைச் சேமிக்கவும், தொலைதூர வணிகத்திற்கும் வழி வகுத்தது. இந்தியாவிலிருந்து சீனா உட்பட உலகின் பிற நாடுகளுக்கும் சர்க்கரை தயாரிக்கும் தொழில் நுட்பம் பரவியது. இந்தியாவிலிருந்து கி.பி 500களில் பாரசீகம், அரேபியா போன்ற நாடுகளுக்கு; பிறகு அங்கிருந்து கி.பி 700களில் ஆப்பிரிக்காவிற்கும், கி.பி 800களில் ஐரோப்பியாவிற்கும்; ஐரோப்பாவிலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியக் காலனிய நாடுகளால் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பிரேசில், அமெரிக்கா நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது (Kandhalu Sagadevan Dinesh Babu, et al., 2022, A short review on sugarcane: its domestication, molecular manipulations and future perspectives).
வணிகப் பயிராக உற்பத்தி விரிவடைந்த காரணத்தால், மனித உழைப்பு அதிகம் தேவைப்பட்ட நிலையில், உழைப்பாளர்களை அடிமைகளாக்கும் துயர நிகழ்வுகளும் கரும்பின் வணிக வளர்ச்சியின் பகுதியாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்கள் அயல்நாடுகளின் கரும்புத் தோட்டத்தில் படும் அல்லலைக் கேள்விப்பட்டு "துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரையாயோ?" என்று பாரதியார் தன் நெஞ்சக் குமுறலை "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
2/26/2025 அரும்பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு
#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi