புகைக்கொடி, வால்மீன், வால்வெள்ளி, வால்நட்சத்திரம், தூமம், தூமகேது என்ற பெயர்களில் இலக்கியங்களிலும், பொது வழக்கிலும் அறியப்படும் ஒளிரும் வால் கொண்ட சிறுகோள் சூரியனைch சுற்றி வரும் ஒரு விண்பொருள் ஆகும். ஆங்கிலத்தில் கோமேட் (comate) என்று அழைக்கப்படுகிறது.
எரிமீன், சூரிய சந்திர கிரகணங்கள் போலவே வால்மீனின் தோற்றமும் தீக்குறி, கேடு விளைவிக்கும் என்ற அச்சமும் நம்பிக்கையும் மக்களிடம் உண்டு. இதைக் கம்பராமாயண வரிகள் மூலம் அறியலாம்.
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை யெனில் கடுங் கேடெனும்
காமம் இல்லை நரகமும் இல்லையே"
[கம்பராமாயணம் - மந்தரை. 21]
புவிக்குத் தீங்கு விளைவிக்கும் வால்மீன் போன்று, மகளிர் மீது கொள்ளும் காமம் இல்லையெனில் கெடுதியில்லை எனக் கூறுகிறார் கம்பர். இத்தகைய நம்பிக்கை மக்களிடம் இருந்தது என்பதைப் பதிவு செய்வதோடு, வால்மீன் தோன்றினாலும் தீங்கு நிகழாததையும் பதிவு செய்கின்றன கபிலரின் புறப்பாடல் ஒன்றும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரப் பாடல் ஒன்றும்.
மைம்மீன் (கருநிறம் கொண்ட கோள்மீன் சனி) தன் இயல்பு மாறி புகைப்படலத்துடன் காணப்பட்டாலும்; தூமம் தோன்றினாலும்; வெள்ளிக் கோள் தென்திசை நோக்கி நகர்ந்தாலும் நாட்டில் வறட்சியும் வறுமையும் மிகும், அதன் விளைவாகத் தீயக் குற்றச் செயல்கள் நிகழும் என்பது ஆரூடம் அடிப்படையில் கூறப்படும் சில நம்பிக்கைகள். ஆனால், இது 'பொய்யான நம்பிக்கை' என்பதற்குச் சான்றும் கொடுக்கிறது இப் புறப்பாடல்.
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே"
[புறநானூறு - 11; -கபிலர்]
தீநிமித்தங்கள் எது நிகழ்ந்தாலும் செங்கோல் ஆட்சி நடத்திய வள்ளல் வேள்பாரியின் நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் நிகழ்ந்ததில்லை. அவன் நாட்டில் வளம் குன்றியதில்லை, சான்றோர்கள் மிகுதியாக இருப்பர் என்று மேற்காணும் பாடலில் ஆவணப்படுத்தியுள்ளார் பாரியின் உற்ற நண்பரான கபிலர்.
கபிலர் ஒரு சாதாரணப் புலவர் அல்ல. 'பொய்யா நாவிற் கபிலன்' என்றும் 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்' என்றும் போற்றப்பட்டவர் என்பது அவருடைய சொல்லிற்கு இருந்த மதிப்பையும் சிறப்பையும் குறிக்கும். ஆகையால், தீநிமித்தங்கள் எவை நிகழ்ந்தாலும் பாரியின் பறம்பு நாட்டில் வயல்களில் விளைவு மிகுந்திருக்கும் வளம் நிறைந்திருக்கும் என்று அவர் சொன்ன கூற்றை நாம் ஐயுறத் தேவையில்லை.
இது போன்ற
கருத்து சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றொடுஞ்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியே
[சிலப்பதிகாரம்-நாடுகாண் காதை- 10:105-109]
கரியவன்(சனி)புகையினும், புகைக்கொடி(வால்மீன்/தூமகேது; தூமம் = புகை, கேது=கொடி; புகை போன்ற வால் நீட்சி கொண்ட
வால்மீன்) தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் நகர்ந்த நிலை என்ற கோள்களின் முரணிய
நிலையிலும் குடகு மலையில் மழை பொழிவதும், காவிரியில் நீர்
பெருக்கெடுத்து வருவதும் தவறாது எனக் காவிரியின் சிறப்பைப் பாடுகிறார்
இளங்கோவடிகள்.
சூரிய மண்டலத்தில் உள்ள வால்மீன்கள் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய மண்டலம் உருவாகிய பொழுது விடுபட்டுப்போன எச்சங்கள். இவை பெரும்பாலும் பனியாலும் தூசிகளாலும் ஆனவை. சூரியனின் ஈர்ப்புவிசையால் வால்மீன் சூரியப்பாதையில் சுற்றும் பொழுது, சூரியனுக்கு அண்மையில் வருகையில், பனியும் தூசுமான அதன் தலைப்பகுதி சூரியனை நோக்கி இருக்கையில் வெப்பமடைந்து ஒளிரும், அதன் பனியும் தூசும் பின்னோக்கித் தள்ளப்பட்டு சூரியனுக்கு எதிர்த் திசையில் வால் போல நீளும் என்பதால் வால்மீன் என்று காரணப்பெயர் பெற்றுள்ளது. இதன் பண்புகள்; எரிமீன் போல வால்மீன் மிக வேகமாக நொடியில் பல்லாயிரம் மைல்கள் நகராது, மிக மெதுவாக நகரும். புவிக்கு மிக அருகில் வர நேர்ந்தால் புவியின் ஈர்ப்புவிசை காரணமாக விண்கற்கள் போலவே மண்ணில் விழுவதும் உண்டு. ஒவ்வொரு நூற்றாண்டிலும் வானில் பல வால்மீன்கள் தோன்றி மறைகின்றன. நமது சூரிய மண்டலத்தில் சுமார் 4,000 வால்மீன்கள் உள்ளன. ஆனால் பல மில்லியன்கள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
வால்மீன்கள்
காட்சிகள் பல வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹேலியின் வால்மீன் (Halley's Comet) ஒரு
புகழ் பெற்ற வால்மீன். சூரியனை வட்டப்பாதையில் சுற்றுபவை வால்மீன்கள் என்பதும்,
அவை குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் தோன்றும் என்பதையும்
முதன்முதலில் கண்டறிந்து கூறியவர் எட்மண்ட் ஹேலி (Edmond Halley) என்ற வானவியலாளர். 1531, 1607, 1682 ஆகிய ஆண்டுகளில்
காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வால்மீன்கள் யாவும் ஒரே வால்மீன்தான் என்றும்,
76 ஆண்டுகள் கால இடைவெளியில் அது மீண்டும் தோன்றும் என்றும் அவர்
1705இல் கண்டறிந்தார். அந்த வால்மீன்
மீண்டும் 1758 இல் மீண்டும் தோன்றும் என்றும்
கணித்திருந்தார். அதைக்காணும் வாய்ப்பின்றி அவர் மறைந்து விட்டாலும்,
அவர் குறிப்பிட்ட ஆண்டில் வால்மீன் மீண்டும் தோன்றிய பிறகு, அந்த வால்மீனுக்கு 'ஹேலியின் வால்மீன்' என்று அவர்
பெயர் சூட்டப்பட்டது. இந்த வால்மீன் சராசரியாக 75 முதல் 76 ஆண்டுக் கால
இடைவெளியில் மீண்டும் புவிக்கு அருகில் வரும். கடந்த முறை 1986 ஆம் ஆண்டு காட்சி தந்த ஹேலியின்
வால்மீனை நாம் மீண்டும் 2061 ஆண்டு காண இயலும்.