Wednesday, August 28, 2024

வலன் ஏர்பு திரிதரும்

சங்கத் தமிழ் இலக்கியங்களில், மழைமேகங் கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலஞ்சுற்றாக  நகர்வது  முப்பதுக்கும் மேற்பட்ட முறை பல்வேறு புலவர்களால்  குறிப்பிடப்படுவதைக் காணமுடிகிறது.  

குளிர்ந்த கடல் நீரைப் பருகி வலமாகச் சுழன்று நகர்ந்து,  நீலவானத்தில் எழுந்து, மழைதரும் கார்மேகமாக மாறி, இடி மின்னலுடன் பெருமழையாகப்  பொழிவதைக் கீழ்க்காணும் பாடல் வரிகள் விளக்குவதைக் காண முடிகிறது.

      பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு - முல்லைப் பாட்டு  4

      மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு -குறுந்தொகை  237/5

      நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் - பட்டினப் பாலை 67

      வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் - பரிபாடல்  1/50

      சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி - அகநானூறு  43/2

      தாழ் பெயல் பெரு நீர் வலன் ஏர்பு வளைஇ - அகநானூறு 84/3

கோரியோலிஸ் விசை (Coriolis force) என்பது புவியின் சுழற்சியால் ஏற்படும் ஓர் விசை. கோரியோலிஸ் விசை சுழலும் இடத்தின் அச்சுக்கு நேர் செங்குத்தாகச் செயல்படுவது. புவி தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கிறது என்பதை நாமறிவோம். ஆகவே, கோரியோலிஸ் விசை வடக்கு-தெற்கு திசையில் செயல்படுகிறது.  இதன் காரணமாக, நீர் மற்றும் காற்று போன்றவை புவியின் மேற்பரப்பின் மீது நகர்கையில், அவை நேரான பாதையில் நகராமல் ஒரு வளைவான பாதையில் நகர்வது போலத் தோற்றம் தருவதாக அமையும்.

 கோரியோலிஸ் விசையானது புவியின் வட கோளத்தில் காற்றை வலதுபுறமாகத் திசை திருப்பும். ஆனால் புவியின் தென்கோளத்தில் இடதுபுறமாகக் காற்றைத் திசைதிருப்பும், அதாவது திசை விலகச் செய்யும்.  இயற்பியலில் இது 'ஃபெரல் விதி' (Ferrel's Law) என்றும் அழைக்கப்படுகிறது.  காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்போது விலகல் அதிகமாக இருக்கும். இதுவே பெரும்  புயல் மேகங்களின் சுழற்சிக்குக் காரணமாக அமைகிறது. புவிநடுக்கோட்டுப் பகுதியில் கோரியோலிஸ் விசை இருக்காது.  எனவே அங்குச் சூறாவளிகளும் ஏற்படாது. 

கோரியோலிஸ் விசை (f) என்பது,  f = 2Ω sin ϕ என்ற சமன்பாடு மூலம் கணக்கிடப்படுகிறது (இதில் Ω என்பது புவியின்  கோண வேகம் (7.292 × 10−5/sec);  ϕ என்பது புவியின் கிடைக்கோடு). திசை விலகலைக் கணக்கிடுவதில் கோரியோலிஸ் விசை விதிமுறை பயனுள்ளதாக அமையும். இருப்பினும் உண்மையில் விசை என்ற பண்பு எதுவும் இங்கில்லை. புவியின் தரையின் மேலாகக் காற்றில் உள்ள ஒரு பொருளை விட (எடுத்துக்காட்டு மேகம், ஆகாய விமானம்) வேறு வேகத்தில் நகரும் புவியின் தரை மட்டுமே இதற்கான அறிவியல் அடிப்படை விளக்கம்.

காஸ்பார்ட்-குஸ்டாவ் டி கோரியோலிஸ் (Gaspard-Gustave de Coriolis, 1792–1843) என்ற 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு கணிதவியலாளர் கொடுத்த விளக்கம் 20 ஆம் நூற்றாண்டில் வானிலையியல் (meteorology) கணிப்பில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. (Weather Analyser - https://www.youtube.com/watch?v=wuvlekP5W2k காணொளியில் இந்திய வரைபடத்தின் மீது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயல் மேகங்களின் சுழற்சி வலது புறமாக நகர்வதைத் தெளிவாகக் காணலாம்).


 நன்றி: உலகத்தமிழ் — இதழ்: 247

8/28/2024      கோரியோலிஸ் விசை விளைவு

#உலகத்தமிழ், #அறிவியல்-இலக்கியம், #அறிவியல்நோக்கு, #Themozhi