தீபாவளி யாருடைய பண்டிகை? என்று இந்தியாவில் உள்ள சமயங்களிடையே எழும் சச்சரவு, மன்னன் சாலமன் அரசவையில், "இது என் குழந்தை" என்று முறையிட்ட இரு தாய்களின் கதையையே நினைவுபடுத்தும். தீபாவளி என்பது வாழ்ந்து மறைந்த சமண தீர்த்தங்கரர் மகாவீரரின் மறைவு நாளையொட்டி அவர் அளித்த அறிவொளியைப் பரப்பும் நாளாக சமணர்கள் தொன்று தொட்டுக் கொண்டாடுகின்றனர் என்ற 'வரலாற்று அடிப்படை' உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இதற்கு மாறாக, வைதீகச் சமயங்களின் தொன்மங்கள் கூறுபவை பெரும்பாலும் இயற்கைக்கு முரணான, நம்ப இயலாத கதைகள் போன்றவற்றின் அடிப்படையில் தீபாவளி நாளின் சிறப்பைக் கட்டமைக்கின்றன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தொன்மக் கதை என்ற அளவிற்குப் பல்வேறு தீபாவளிக் கதைகள் வைதீகப் பின்புலத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
இந்தியாவின் சமணம் மற்றும் வைதீகச் சமயங்கள் தவிர்த்து பௌத்தம், சீக்கியம், பழங்குடியினர் எனப் பல பிரிவினரும் தீபாவளி குறித்துத் தங்களுக்கு உள்ள தொடர்பு ஒன்றைக் காட்டிக் கொண்டாடி வரும் இந்தியப் பண்டிகைதான் தீபாவளி. பன்னாட்டு அரங்கில், "தீபாவளி என்பது தீமையை அழித்து நன்மை வெற்றி கொண்ட நாளை இந்தியர்கள் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்" என்ற ஒரு புரிதலே உள்ளது. அவர்களுக்கு இந்தியப் பண்பாடு குறித்தும், பல்வேறு சமயங்கள் குறித்தும் விரிவான அறிமுகமோ அவற்றுக்கான தேவையோ இல்லை. இந்தியாவில் எவர் கொண்டாடினாலும் தீபாவளி என்று விளக்கேற்றி வழிபடும் நாளின் அடிப்படையில் இருப்பது மறைந்த மூதாதையரை வழிபடுவது என்ற கருத்தே பொதுவாக உள்ளதாகவும் அறிய முடிகிறது.
தமிழரின் புத்தாண்டு எது என்பதற்கு இணையாக ஒவ்வொரு ஆண்டும் உயிர்த்தெழும் விவாதம், யாருடைய பண்டிகை தீபாவளி? என்ற விவாதச் சரவெடிகள். திருக்குறளை அனைவரும் தங்களுடையது என்று உரிமை கோருவதற்கு இணையானது என்றும் கூட இந்த விவாதங்களைச் சொல்லாம். தீபாவளி யார் பண்டிகை என்ற விவாதம் ஒரு பக்கமும், தீபாவளி வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வது மறுபக்கமும் என ஒவ்வொரு ஆண்டும் சமூக வலைத்தளங்களில் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டுவது வழக்கமாகிவிட்டது. இவ்விவாதங்களில் செப்பேடுகள், கல்வெட்டுகள் எனத் தொல்லியல் தரவுகளும், இலக்கியக் குறிப்புகளும் மேற்கோள்களாகக் கொடுக்கப்படும்.
மேலும், தீபாவளி
என்பதன் பெயருக்கு ஏற்ப சரவிளக்குகள் கொண்டு விளக்கேற்றுவது, கார்த்திகை என்ற மற்றொரு பண்டிகை நாளாகவும் அதற்கு அடுத்த மாதமே
கொண்டாடப்படுவது வழக்கம். எனவே இந்த
இருவேறு பண்டிகைகளும் வெவ்வேறு பெயரில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையா? அல்லது தனித்தனியான இருவேறு பண்டிகைகளை
ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் முயற்சியாக இந்த விளக்குகளின் அணிவகுப்பு விழா
முயல்கிறதா என்ற ஐயங்களும் தானே எழும்புகின்றன.
சரவிளக்குகளும், கார்கால மாதமும், முன்னோர் வழிபாடு ஆகிய மூன்றையும்
அடிப்படையாகக் கொண்டது
இருப்பது இந்த விளக்கேற்றும் பண்டிகை.
இதில் அயல் நாட்டவர் கருதும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்ற நாள் என்ற புரிதல்
ஒட்டாமல் விலகிவிடுகிறது. மறைந்தவர், கொடியவன் என்பன போன்றவை புராணக் கற்பிதங்கள் ஆகும்.
விளக்கைக் குறிக்கும் 'தீப' என்ற சமஸ்கிருதச் சொல்லின் அடிப்படையே இப் பண்டிகைக்கும் தமிழருக்கும் தொடர்பு இல்லை என்பதைக் காட்டும். விளக்கு, விளக்கேற்றுதல், சரவிளக்குகள் என்ற சொற்களின் [dipa(दीप), dipaka(दीपक), dipavali(दीपावलि) lamp, lightingup, row of lights] அடிப்படையும் தீபாவளி என்ற சொல்லின் தோற்றம் சமஸ்கிருத அடிப்படை கொண்டவை. ஆகவே தொன்று தொட்டுவரும் வழக்கத்தை உள்ளடக்கிய ஒளி தரும் விளக்குகள் அமைக்கும் விழா என்ற விரிவான பார்வையைப் பின்னுக்குத் தள்ளி "தீபாவளி" என்ற சொல்லின் தோற்றம் எப்பொழுது என்ற குறிப்பினை நோக்கி ஆராய்வது மேலும் தெளிவைக் கொடுக்கலாம்.
தீபாவளி என்ற சொல்
எப்பொழுது தோன்றியது?
தமிழர்களால், தமிழகத்தில் கொண்டாடப்படும், தமிழகத்தின் தீபாவளி குறித்துக் கிடைக்கும் தகவல்கள் பிற்காலத்தவை. கி.பி 1542ஆம் ஆண்டின் திருமலை திருப்பதி கல்வெட்டைத் தீபாவளிக்கான பழைமையான ஆதாரமாக, கல்வெட்டு அறிஞரான குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிடுவார். தீபாவளி நாயக்கர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பண்டிகை என்பதை இது போன்ற பிற்காலத் தரவுகளின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.
எழுநூறாண்டு பழைமையான ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஒன்று தீபாவளித் திருநாள் பற்றி குறிப்பிடுவதாக ஒரு கருத்தை நீர்வை. தி. மயூரகிரி சர்மா முன்வைக்கிறார். அதற்குச் சான்றாக, "சரசோதிமாலை" என்ற நூலில் உள்ள தமிழ்ப் பாடல் ஒன்றையும் காட்டுகிறார். இலங்கையின் தம்பை மாநகரத்தில் (தம்பதெனியா) அரசு புரிந்திருந்த நான்காம் பராக்கிரமவாகு அரசர் கேட்டுக்கொண்டபடி பிரமகுல திலகராகிய தேனுவரைப்பெருமாள் என்று வழங்கும் போசராச பண்டிதர் இயற்றிய நூல்தான் சரசோதிமாலை என்ற குறிப்பு இந் நூலில் உள்ளது.
இந்த நூலின் காலம் கி.பி. 1310 என்றும், இந்த நூல் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது என்ற குறிப்பும் அதே நூலில் உள்ளன. இப் பண்டிதர் சரசோதி என்பவரின் மைந்தன் ஆவார். அதனால் இந் நூல் இப்பெயர் பெற்றது என்ற வழக்கும், கோள்களின் தாக்கம் மனித வாழ்வில் விளைவிக்கும் மாறுதல்களைக் கூறும் சோதிட நூல் என்பதால் இப்பெயர் பெற்றது என்ற வழக்கும் நூலிலேயே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த நூலை 'நூலகம்' தளத்தில் (https://noolaham.net/project/55/5404/5404.pdf) படிக்கலாம். நூல் கொடுக்கும் காலகட்டம் குறித்து மேலும் ஆய்வது வரலாற்று ஆய்வாக மாறிவிடும் என்று நூல் முன்னுரையில் குறிப்பிடப்படுவதால், நூல் கொடுக்கும் தகவல் அடிப்படையில் 14 ஆம் நூற்றாண்டில், அதாவது இன்றைக்கு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீபாவளி/தீபாவலி என்ற சொல் வைதீகம் சார்ந்த ஒரு நூலில் தமிழில் பதிவாகி இருப்பதாகக் கொள்ளலாம்.
சரசோதிமாலை நூலின் ஏழாவது படலமான 'தெய்வ விரதப் படலம்' (பக்கம் 44, பாடல் 17). குறிப்பு: இந்நூலின் பக்கங்கள் சில பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
"தீபாவலி"
இரவிநற்றுலைசேர்மாதமிராக்கதிர்குறையும்
பக்கம்
வருபதினான்கு
வந்தவைகறைப்பொழுதுதன்னி
லுரியநற்பிதிர்களின்பமுறு
தீபாவலியாமெண்ணெய்
மருவிவெந்நீரின்மூழ்கிமகிழ்ந்துநற்றருமஞ்செய்யே.
தீபாவலி/தீபாவளி
குறித்து தகவல் ஒன்றைச் சொல்கிறது.
இப்பாடலைச் சொல் பிரித்துப் படித்தால்;
இரவி
நற்துலை சேர் மாதம் இராக்கதிர் குறையும் பக்கம்
வரும்
பதினான்கு வந்த வைகறைப் பொழுது தன்னில்
உரிய
நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய்
மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே.
கதிரவன் துலா
மாதத்தில் இருக்கும் பொழுது, அதாவது ஐப்பசி மாதத்தில்
இரவில் ஒளி குறைந்து
வரும் காலமான தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம் என்ற குறைமதி காலத்தில்)
வருகின்ற பதினான்காம்
நாளில் ( சதுர்தசி நாளில்) வைகறை நேரத்தில்
மூதாதையர் மகிழும்
வண்ணம் தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் மூழ்கிக் குளித்து
மகிழ்ச்சியுடன் அறச் செயல்கள் செய்வாயாக என்று பாடல் கூறுகிறது.
இதைத் தொடர்ந்து
வரும் பாடல் இப்பண்டிகையைத் தொடர்ந்து அடுத்த மாதமான கார்த்திகையில்
கொண்டாடப்படும் கார்த்திகை விழாவைக்
குறிப்பிடுகிறது. ஆக இது ஐப்பசி அமாவாசை (புதுநிலவு அல்லது மறைமதி) நாளில்
கொண்டாடப்படும் விளக்கேற்றும் நாளைக் குறிக்கிறது. கி.பி. 1310 காலத்தின் நூல் இவ்வாறாகக் குறிப்பிடுவதால் அக்காலத்தில்
கொண்டாடாப் பட்டதற்கான எழுத்து வடிவில் உள்ள சான்று என்று இதைக் கொள்ளலாம்.
இருப்பினும், இவ்வாறு குறிப்பிடப்படும் தேய்பிறை 14 ஆம் நாளில்தான் கார்த்திகை மாதத்தில் சமண தீர்த்தங்கரர் மகாவீரர் இறந்தார் என்று குறிப்பிட்டு, அதனை
கத்திய-கிண்ஹே
சௌதஸிபச்சுஸே ஸாதிணாமனக்கத்தே.
பவாஏ
ணயரியே ஏக்கோ விரேஸரோ ஸித்தோ ..
என்று 4 ஆம் நூற்றாண்டின் ஆச்சார்யா யதிவ்ருஷபா (Acharya Yativrshabha) என்ற சமணரால் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட 'திரிலோக் பிரஜாபதி' (Trilok Prajapati) என்ற நூலும்;
க்ரஷ்ண-கார்திக-பக்ஷஸ்ய
சர்துதஷ்யம் நிஷாத்யயே.
ஸ்வதியோகே
த்ரதியேஅத்த-ஷுக்லத்யான-பரயணஹ் ..
என்று 9 நூற்றாண்டின் ஆச்சார்யா குணபத்ரர் ( Acharya Gunabhadra) என்பவரால் எழுதப்பட்ட உத்தர புராணம் (Uttarapurana) என்ற சமண நூலும் சொல்கின்றன.
மௌரிய அரசர்
சந்திரகுப்தரின் குருவாக விளங்கியவர்
பத்திரபாகு (கி.மு.317-கி.மு.297) என்ற
சமண முனிவர். இவர் தமிழ்நாட்டில்
சைன சமயம் அறிமுகமாக முக்கிய காரணமாக
இருந்தவராக அறியப்படுகிறார். கர்நாடகத்தின் சிரவண பெலகோலாவில் குரு
பத்திரபாகுவின் வழிகாட்டுதலின் கீழ் மௌரிய
அரசர் சந்திரகுப்தர் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இறுதியில் சைன சமயக் கொள்கைப்படி
வடக்கிருந்து உயிர்நீத்தார். சமண முனிவர் குரு பத்திரபாகுவினால் எழுதப்பட்ட கல்ப
சூத்திரம் என்ற நூல் மகாவீரர் மறைந்த நாளை
முதலில் பதிவு செய்துள்ளது.
மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த கிமு 527ஆம் ஆண்டிலிருந்தே சமணர்களிடம் தீபாவளிப் பண்டிகை ஒரு அறிவொளி நாளாக விளக்கேற்றும் முறை வழக்கத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 'தீபாவளி' என்பது முதன் முதலில் எழுத்து வடிவில் கிடைப்பது சமண நூலான ஹரிவம்ச புராணத்தில்தான். சற்றொப்ப 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிபி 783-இல் சமஸ்கிருத மொழியில் சமண சமய திகம்பர ஆச்சாரியர் ஜினசேனர் (Acharya Jinasena) இயற்றிய நூல் 'ஹரிவம்ச புராணம்'(Harivamsa Purana) ஆகும்.
ததஸ்துஹ் லோகஹ் ப்ரதிவர்ஷம்-ஆதரத்
ப்ரஸித்த-தீபலிகய-ஆத்ர பரதே .
ஸமுத்யதஹ் பூஜயிதும் ஜினேஷ்வரம்
ஜினேந்த்ர-நிர்வாண விபுதி-பக்திபக்
என்ற வரிகளில் மகாவீரர் மறைந்த நாளில் பவபுரியில் 'திபாலிகாயா' (dipalikaya) என விளக்குகள் ஏற்றப்பட்டதாக ஆச்சாரியர் ஜினசேனர் தான் எழுதிய ஹரிவம்ச புராணம் நூலில் குறிப்பிடுகிறார்.
இந்த நூலில்தான்
சமணர்கள் தீபாவளி கொண்டாடியதாக 'தீவாளி'
அல்லது 'தீபாவளி' என்ற சொல் முதன் முதலாக இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி என்ற குறிப்பு முதல் இலக்கியத் தடயமாகச் சமண சமயத்திற்கு எட்டாம்
நூற்றாண்டிலேயே கிடைக்கிறது. வைதீக தமிழ் நூல் தீபாவலி என்று எழுத்தில் கொடுக்கும்
சான்றுக்கும் 500 ஆண்டுகளுக்கும் முன்னர் சமண சமஸ்கிருத நூல் தீபாவளி என்று
குறிப்பிட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
பிறகு 10 ஆம் நூற்றாண்டில், ஜினேந்திரர் (மகாவீரர்) நாளின் தீப உற்சவத்திற்காக எண்ணெய் கொடையாகக் கொடுக்கப்பட்டதை சௌந்தட்டி (Saundatti/ கன்னட மொழியில் சவதட்டி) கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது கர்நாடகாவிலுள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள பகுதி. கல்வெட்டு குறிக்கும் காலத்தில் பெல்காம் பகுதி குஜராத்தின் இராஷ்டிரகூட அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள் சமண சயத்தின் புரவலர்களாகவும் இருந்தனர். இவர்களின் கிருஷ்ணா, பிருத்விராமன், இலட்சுமி தேவன், கோவிந்தா போன்ற பெயர்கள் யாவும் சமணர்களைக் குறிக்கும். நேமிநாதரின் நெருங்கிய உறவினர் கிருஷ்ணர் என்பது சமண ஹரிவம்ச புராணம் கூறும் செய்தி.
இச்சான்றுகள் பாரசீக பயணியும் வரலாற்று அறிஞருமான அல்-பிருனி (Al Biruni) எழுதிய 11ஆம் நூற்றாண்டு இந்திய வரலாற்று நூல் தரும் தீபாவளி குறிப்பிற்கும் முற்பட்டது. தனது 1017-1030 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்து இந்தியப் பயணத்தில் தான் கண்டதாக, 'தாரிக் அல்-இந்த்' (Tarikh Al-Hind / History of India) என்ற இந்திய வரலாற்று நூலில் அல்-பிருனி குறிப்பிட்ட இந்திய 'தீபாலி' (“Dibali”) என்ற பண்டிகை கேரளத்தின் மாபலி மன்னருடன் தொடர்பு கொண்டது. மாபலி மன்னர் பாதாள உலகிலிருந்து பூவுலகம் வருவதற்கு இலக்குமி உதவும் நாளைக் கொண்டாடிடும் முகமாக தீபாலி கொண்டாடப்படுவதாக அவர் பதிவு செய்துள்ளார்.
கார்த்திகை
தேய்பிறையின் இறுதிநாள், அமாவாசை
அதிகாலையில் மறைந்த மகாவீரர் நினைவு
போற்றும் சரவிளக்கேற்றும் விழா
ஐப்பசியிலும் இன்று கொண்டாடப்படுவதன் காரணம் வெவ்வேறு வகையில் காலத்தைக் கணக்கிடும் வழக்கம் இருந்து
வந்ததால் ஏற்பட்ட மாற்றமாகவும் வேறுபாடாகவும் இருக்கக்கூடும். வட இந்தியக் காலக்கணக்கில் வைகாசி மாதம்
தொடங்கும் பொழுதுதான் தமிழகத்தில்
சித்திரை தொடங்கும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இரண்டு கணக்கிற்கும் ஒரு
மாத இடைவெளி உள்ளது. இன்றைய அளவில்
எழுத்து வடிவில் கிடைக்கும் தீபாவளி என்ற சொல்லின் முதல் தோற்றத்தை
ஆச்சாரியர் ஜினசேனர் எழுதிய ஹரிவம்ச புராணத்தில் காணமுடிகிறது. இருப்பினும், தீபாவளி
என்ற சொல்லுடன் கூடிய சான்று இதற்கும் முற்பட்ட இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டு
போன்ற தொல்லியல் தடயங்களாகக் கிடைக்கையில் தீபாவளி என்பதன் தோற்றம் மேலும் தெளிவு
பெறலாம்.
சான்றாதாரங்கள்:
Lord Mahavira's
Nirvana: Diwali
https://www.cs.colostate.edu/~malaiya/diwali.html
JAINA : Federation
of Jain Associations in North America
https://www.jaina.org/page/10_19_2017_Newslette
Sonduttee Stone with
inscription [Saundatti]
The Sanskrit and
Kanarese inscription slab of Krishna Rastrakuta, Shaka 797 (c.
875), and Vikramaditya, Shaka 1017 (c.
1095 A.D)
https://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/s/largeimage62711.html
Ain- I- Akbari. Vol- Iii, Page 352.
https://archive.org/details/in.ernet.dli.2015.274807/page/n361/mode/2up
போசராச பண்டிதர்
இயற்றிய 'சரசோதிமாலை'
https://noolaham.net/project/55/5404/5404.pdf
எழுநூறாண்டு பழைய
ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள். நீர்வை. தி.மயூரகிரி சர்மா, அக்டோபர்
23, 2022. (https://www.tamilhindu.com/2022/10/எழுநூறாண்டு-பழைய-ஈழத்துத/)
---