Saturday, October 29, 2022

செய்க பொருளை


ஈராயிரம் ஆண்டிற்கு முன்னரே நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,  மக்கள் தேவைக்கு ஏற்ப வணிகம் செய்வது என்பது கடல் கடந்தும் உலகம் முழுவதும் பரவிவிட்டது.  வணிகம் மூலம் தங்கள் பொருளாதாரத்தையும் அதன் மூலம் தங்கள் நாட்டையும் வளர்த்துக் கொண்ட நாடுகளுக்கு பண்டைய தமிழ்நாடு, ரோம் அரசு; பிந்தைய இங்கிலாந்து, ஜெர்மனி;  இன்றைய அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகியவை என வரலாறு முழுவதும் சான்றுகள் பல உண்டு. ஒரு நாடு வலிமை பெற, வல்லரசாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி முக்கியம். அதற்கு நாட்டு மக்களின் செல்வ நிலையும் உயர வேண்டும். இந்த விதி நாடுகளுக்கு மட்டுமல்ல தனிமனிதர், குடும்பம், குடிகளின் வளர்ச்சிகளுக்கும் கூட பொருந்தும்.

வரப்புயர நெல் உயரும் என்பது போலவே, தனிமனிதரின் செல்வ நிலை அவர் குடும்பத்தை உயர்த்தும்.  செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்ற கொள்கை வழி அவர் தான் ஈட்டிய பொருளைத் தக்க முறையில் செலவிடுவதே அவரது குடியை உயர்த்தும், அது தொடர்ச்சியாக அவர் வாழும் ஊர், நாடு என்று தொடர்ந்து அனைவரையும் உயர்த்தும்.

அக்காலம் முதல் இக்காலம் வரை ஒருவர் அதிகப் பொருளை ஈட்ட உதவுவது வணிகமே. சேர்த்த பொருளைக் கொடைகளாகக் கொடுத்து தம் சுற்றம், தம் மக்கள் என தமிழர்கள் வாழ்வு நிலையை உயர்த்தியவர் என அண்மைக்கால எடுத்துக்காட்டாக அழகப்பச் செட்டியார் அவர்களைக் கூறலாம்.

செல்வந்தர் ஒருவர் சேர்க்கும் செல்வத்தை அவர் மக்களைச் சுரண்டி சேர்த்தார். அறநெறி தவறிய வழியில் சேர்த்தார் என்று ஆராயாமல், உண்மை அறியாமல் கூறுவது அறியாமையாகும். இத்தகைய மனப்போக்கும் மக்களிடையே உள்ளது. செல்வம் சேர்ப்பவர் தன் தொழிற்திறமையால் சேர்ப்பதும் உண்டு. பிறரை ஏமாற்றாமல், சுரண்டாமல் உழைத்தால், ஒருவர் தேர்வு செய்யும் அவரது பணிமுறைக்கு ஏற்ப, அல்லது தொழில் முறைக்கு ஏற்ப அவரிடம் பொருள் குவியலாம். ஒரு சிலருக்குச் செல்வம் சேர்வது நல்வாய்ப்பாலும் கூட அமையலாம்.

அமெரிக்காவில் 90 ஆண்டுகளுக்கு முதன்மை நிலை ஊர்தி விற்பனை நிறுவனம் என்று அசைக்க முடியாத முன்னணி நிலையிலிருந்த ஜிஎம் நிறுவனம் இன்று அயல்நாட்டு டொயோட்டா நிறுவனத்தால் தங்கள் மண்ணிலேயே பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதை எந்த வகையில் சேர்ப்பது. அது டொயோட்டாவின் ஏமாற்று வேலையா, சுரண்டலா, நல்வாய்ப்பா, வணிகத்திறமையா?

மனிதர் வாழ்நாள் குறைவு. எனவே செல்வம் சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அலையாமல் வாழ்க்கையின் நிலையாமை, கூடிவாழும் குறிக்கோளின் அடிப்படை ஆகியனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். தன்னல நோக்கம் எல்லை மீறக்கூடாது. பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைக்க வேண்டும்.

'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற பட்டினத்தார் கூற்றும் அலெக்சாண்டர் வெறுமையான இரு கைகளும் வெளித்தெரியும்படி சவப்பெட்டியில் கிடத்தக் கேட்டுக் கொண்டதும் யாரும் எதையும் இறந்த பின்னர் கொண்டு போகப் போவதில்லை என்பதைச் சுட்டித்தான்.  வாழ்வின் நிலையாமையை மறப்பவருக்கு வாழ்க்கை குறித்து அறிவுறுத்துவதற்காகவும், வாழ்க்கை நிலையாமையை நினைவூட்டுவதற்காகவும் இந்த அறிவுரைகளைச் சான்றோர் சொல்லிச் சென்றுள்ளார்கள். சொல்லப்பட்ட அறிவுரைகளின் நோக்கத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சேர்க்கும் அறிவும் திறமையும் மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது. தாம் சேர்த்தவற்றைப் பயன்தரக் கூடிய வகையில் முறையாகச் செலவழிக்கும் அறிவும் திறமையும் இருப்பதும் தேவை.

      செய்க பொருனைச் செறுநர் செருக்கறுக்கும்
      எஃகதனிற் கூரிய தில்

      காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
      அன்னநீ ரார்க்கே உள

என்று வாழும் முறையை வள்ளுவம் அறிவுறுத்துவதில் இவை எல்லாம் அடங்கும். தீ, நீர், மின்சாரம், இயற்கை, கைபேசி, இணையப் பயன்பாடு போன்றதே செல்வமும். சரியான முறையில் பயன்கொள்ளத் தவறுவது சீர்குலைவிற்கு வழிவகுக்கும்.

      எங்களுக்கும் காலம் வரும்
      காலம் வந்தால் வாழ்வு வரும்
      வாழ்வு வந்தால் அனைவரையும்
      வாழ வைப்போமே ...

என்பதுவே சரியான வழி அந்தக் கால கார்னேகி முதல் இந்தக் கால பில் கேட்ஸ், வாரன் பஃப்பெட் வரை அமெரிக்கத் தொழிலதிபர்கள் சிலரும் தங்கள் திறமையால் தானும் உயர்ந்து, பலரும் வாழ விரும்பி மானுட வளர்ச்சி நோக்கில் மக்களின் கல்வி, உடல்நலம் ஆகியவற்றுக்குக் கொடைகள் அளித்து மக்களின் வாழ்நிலையையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்துவது பாராட்டத் தக்க வழிமுறையே.

பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்களும் அல்லர் கஞ்சர்களும் அல்லர். செல்வத்தைப் பயனுள்ள வகையில் செலவழிப்பது அறிவுடைமையில்
அடங்கும்.

      ஊருணி நீர்நிறைந்தற்றே உலசவாம்
      பேரறி வாளன் திரு

      பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
      நயனுடை யான்கண் படின்

      அற்றார் அழிபசி தீர்த்தல் அல்தொருவன்
      பெற்றான் பொருள்வைப் புழி

இவை போல மனப்பாடப் பகுதி செய்யுள் படித்து மதிப்பெண் பெறுவதுடன் நின்றுவிடுகிறார்கள் நம் மக்கள்.

கோவிலில் போய் தங்கம் தங்கமாகக் கொட்டி வைத்து, அச்செல்வம் நாய் பெற்ற தெங்கம் பழம் போலப் பயனற்ற வகையில் அழிக்கப்படுவதே அறிவுடைமை அற்ற செயல். கிலோ கிலோவாகக் கோயிலின் தங்க நகைகளைக் கோவில் நிர்வாகத்தார் பதுக்கி வைக்க அதைக் காவல்துறை கைப்பற்றி வெளியிடும் புகைப்படங்களும் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன.

எனவே; சேர்த்த செல்வத்தை முறையாகச் செலவழிக்கத் தெரியாதே குற்றம்.
அறநெறி மீறாத வகையில் செல்வம் சேர்க்கத் தெரிந்திருப்பது குற்றமே அல்ல.

நன்றி:
தமிழணங்கு [அக்டோபர்-2022] 
https://archive.org/details/thamizhanangu-october-2022/page/n43/mode/2up

அக்டோபர் 29, 2022

#திருக்குறள், #தமிழணங்கு,  #சிறுநல்வாழ்க்கை, #Themozhi