சமண சமயம் செழித்திருந்த பண்டைய தமிழகத்தில் சமணர்களின் பங்களிப்பினால்
தமிழில் கலைகளும் இலக்கிய ஆக்கங்களும் வளம் பெற்றிருந்தன. இது இன்றைய தமிழகத்தில் பெரும்பாலோர் அறிந்திராத ஒரு செய்தி.
காலப்போக்கில் பிற சமயங்களின் தாக்கத்தினால் பெருமை மங்கிய
இச்சமயத்தின் தமிழ்ப் பங்களிப்புகள் இயல்பாக மறக்கப்பட்டும், சூழ்ச்சியாக மறைக்கப்பட்டும் வந்ததால் தமிழர் பலர் தாங்கள் காணும் பல சிற்பங்களையும் படைப்புகளையும் வைதீக சமயத்தின் கண்ணாடி
வழியே பார்த்து தவறாகப் பொருள் கற்பிக்கத் துவங்கினர். இரு பெண்கள் இருபக்கமும் உள்ள கணக்குவேலம்பட்டி தீர்த்தங்கரர் சிற்பத்தை
முருகன் வள்ளி தெய்வானையுடன் இருப்பதாகத் தவறாகக் கருதி சிலையின் உருவங்களைச் சைவ
சமய வழியில் அலங்கரித்து “மொட்டையாண்டவர் கோயில்”
என்னும் பெயரில் முருகன் – வள்ளி – தெய்வானை என்று வழிபட்டு வருகின்றனர்.
தீர்த்தங்கரர் தலை மீது காட்டப்பட்டுள்ள முக்குடை சமண அறிகுறியையோ
அதன் பொருளையோ அறியாதவர்களாக இன்றைய தமிழ்மக்கள் இருப்பதற்கு இது ஒரு சான்று.
சென்ற நூற்றாண்டுகளிலும் இவ்வாறான பிழையாகப் பொருள் கொள்ளும் முறை
இருந்ததற்கு மற்றொரு சான்று மாமல்லபுரத்து புடைப்புச் சிற்பம். இச்சிற்பம் 'அர்ச்சுனன் தபசு' என்று
ஒரு சிலராலும், 'பகீரதன் தபசு' என்று
வேறு சிலராலும் விளக்கப்படுகிறது. இக்கதைகளுக்கும்
சிற்பத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதைக் கண்ட மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் ஆழ்ந்து ஆராய்ந்து அச்சிற்பம் குறிப்பிடுவது சமண
இலக்கியமான 'அஜிதநாதர் புராண'த்தில்
கூறப்படுகிற சகர சாகரர்களின் கதையை விவரிக்கிறது என்பதைக் கண்டறிந்து 'மகாபலிபுரத்து ஜைன சிற்பம்' என்ற ஒரு நூலாக
எழுதினார். ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்று பாராட்டப்
பட்டுள்ள மயிலை சீனி. வேங்கடசாமி பன்முகத் திறமை கொண்ட
ஆய்வறிஞர். தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்று
ஆய்வாளர்களால் அவரது நடுநிலை வழுவாத ஆய்வு நெறியும், சமயச்
சார்பு காட்டாத ஆழ்ந்த ஆய்வுத் திறமையும் பாராட்டப் பட்டுள்ளதைத் தமிழுலகம்
அறியும். இந்த நூலை அவர் எழுதிய பின்னர் மேலும்
சில ஆண்டுகள் கழித்தே 1950 ஆம் ஆண்டு அச்சேறியது.
இருப்பினும் மாமல்லபுரத்துச் சிற்பம் சமணக் கதையைக்
கூறும் ஒரு சிற்பம் என்பது மக்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை என்பதுதான்
உண்மை.
புகழ்பெற்ற இப்பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி
மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்குப் பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய
பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மீட்டர் நீளமும் 13 மீட்டர் உயரமும் உள்ள
செங்குத்தான பாறையில் சற்றொப்ப 1400 ஆண்டுகளுக்கு முன்னர் 7 ஆம் நூற்றாண்டில்
உருவாக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் இது. முதல் நிலை
விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும்
இடைப்பட்ட நிலையையும், மூன்றாவது மண்ணுலகையும், அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது.
அர்ச்சுனன் தபசு செய்து சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற கதை ஒன்று மகாபாரதத்தின்
வனபர்வத்தில் கூறப்பட்டுள்ளது, அக்கதையின்
அடிப்படையில் அர்ச்சுனன் தபசு என்று இச்சிலை அடையாளம் கூறப்படுகிறது.
'விக்டர் கோலோபிவ்' என்ற பிரெஞ்சு
கலை வரலாற்றாசிரியர் (French and Russian Art historian and archaeologist,
Victor Goloubew - 1878-1945) இச்சிற்பத்தை நேரில் கண்டு
ஆய்வு செய்து இச்சிற்பம் விளக்குவது அர்ச்சுனன் தபசு அல்ல, மாறாக
இது இராமாயணம் பால காண்டத்தில் கூறப்படுகிற பகீரதன் தபசு என்னும் கதையை
விவரிக்கிறது என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதன் பிறகு இது பகீரதன் தபசு
என்றும் அழைக்கப்படத் துவங்கியது என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. தனது முன்னோருக்கு
இறுதிக்கிரியைகள் செய்ய விரும்பிய பகீரதன், ஆகாயத்திலிருந்து
கங்கையைக் கொண்டுவர விரும்பினான் என்றும், ஆனால் கங்கை
வேகமாகப் பூமியில் விழுந்தால் உலக அழிவு ஏற்படும் என அஞ்சிய அவன் அதனைத்
தடுப்பதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும், சிவன்
கங்கையைத் தன் தலையில் ஏந்தி மெதுவாகப் பூமியில் விழச் செய்தார் என்பதுதான்
பகீரதன் தபசு என்ற புராணக்கதை.
மயிலை சீனி. வேங்கடசாமி வைக்கும் மறுப்புகள்:
அர்ச்சுனன் தபசு —
• ஒற்றைக் காலில் நின்று கைகளை உயர்த்திக்
கும்பிட்ட வண்ணம் தவம் செய்யும் உருவம் அர்ச்சுனன் மற்றும் எதிரே நின்று அருள்
வழங்குவது சிவன் என்றால், மற்ற சிற்பங்களில் இருப்பவர்
யார் என்ற கேள்விக்கு இக்கதையில் விடையில்லை
என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.
• இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற நாககுமாரர்கள்,
தெய்வகணங்கள், யானைகள், கங்கை
ஆறு, கோயில், தலையற்ற மூன்று உருவங்கள்,
மற்றும் பல மனித உருவங்கள் இவை எல்லாம் ஏன் இந்தச் சிற்பத்தில் இடம்
பெறுகின்றன என்ற விளக்கமும் இல்லை.
• அத்துடன் வரம் தரச் சென்ற சிவன் வேடனாகவும், உமை வேடுவச்சியாகவும்
சென்றதாக புராணம் கூறும், ஆனால் சிற்பம் அவ்வாறு அமையவில்லை,
உமை காட்சியில் காட்டப்படவில்லை, சிவனும்
வேடன் உருவில் இல்லை.
• இந்தியச் சிற்பக்கலை அமைப்பு கதையில் விவரிக்கும் முக்கிய பாத்திரங்களைப் பெரிதாகவும்
மற்றவர்களைச் சிறிய வடிவத்திலும் காட்டும் முறையில் இருக்கும். இச்சிற்பம் அவ்வாறு அமையவில்லை.
பகீரதன் தபசு —
• சிற்பத்தை மேலிருந்து கீழாகப் பிரிக்கும்
இடைவெளி கங்கை ஆறு வழிந்து ஓடுவதைக் காட்டுகிறது என்றால் அதில் நாக அரசனும்
அரசியும் காட்டப்படுவதன் காரணம்
என்ன?
• தபசு செய்வது பகீரதன் என்றால் எதிரில் நிற்கும் உருவம் கங்காதரர் சிற்ப அமைதியுடன் ஏன்
அமையவில்லை? சிவனாகக் கூறப்படுபவரின் தலையில் கிரீட மகுடமும் கையில் கதையும் இருக்கிறது. சிவனின் ஜடாமகுடமும் அவருக்குரிய சூலம் மற்றும் மழு ஆயுதங்களும்
சிற்பத்தில் காட்டப்படவில்லை. அதனால் அது சிவனின் உருவம் அல்ல.
• ஆகாயத்திலிருந்து மண்ணுக்குப் பாயும் கங்கையின்
வேகத்தைக் கட்டுப்படுத்த சிவன் அதைத் தன் ஜடையில் தாங்கிக்
கொள்வதாகப் புராணம் கூறும். ஆனால் சிலையில் உள்ளவர்
தலையில் கங்கை பாய்வதாகக் காட்டப்படவில்லை. இது
பல்லவர் காலத்துக் கங்காதரர் சிலைகளில் காட்டப்படும்
கங்காதரர் உருவ அமைதியிலும் இல்லை.
• கதைக்குப் புறம்பான யானை, நாகர்கள், தேவர்கள், தலையற்ற
உடல்கள், தலைவணங்கி உட்கார்ந்திருக்கும் முனிவரின் உருவம்,
கோயில் இவை சிற்பத்தில் இடம் பெறும்
காரணம் என்ன? ஆகவே இது பகீரதன் தபசு கதையைக் குறிக்கவில்லை....
என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. அப்படியானால்
இந்தச் சிற்பக்காட்சி எந்தக் கதையைக் குறிக்கிறது? என்ற
கேள்விகளுக்கு விடை தேடிய மயிலை சீனி. வேங்கடசாமி
அவர்களுக்குச் சமண நூல்களில்தான் இதற்கான கதை கிடைத்தது.
மயிலை சீனி. வேங்கடசாமி சிற்பக் காட்சி காட்டும் சகர சாகரர் கதை தமிழில் 'ஸ்ரீ புராண'த்திலும், 'ஜீவசம்போதனை'
என்னும் நூலிலும் சுருக்கமாகக்காணப்படுகிறது என்கிறார். 'திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்' என்னும் நூலில்
விரிவாகக் கூறப்பட்டிருப்பதாகவும், இந்த நூலை 'ஹெலன் எம். ஜான்சன்' (Helen M. Johnson) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் என்றும் கூறுகிறார்.
(இணையத்தில்
இக்கதையைப் படிக்க விரும்புவோருக்காக இணையதளத்தின் சுட்டி; Book
2- chapter 4 & 5: https://www.wisdomlib.org/jainism/book/trishashti-shalaka-purusha-caritra/d/doc212638.html).
சமணம் கூறும் சகர, சாகரர் கதைச் சுருக்கம்:
இனி 'திரிசஷ்டி சலாகா புருஷர் சரித்திரம்' என்னும் சமண நூலில் அஜிதநாத சுவாமி சரித்திரத்திலே கூறப்படுகிற சகர சாகரர்களின் கதைச்
சுருக்கம் —
பரத கண்டத்தை அரசாண்ட ஜீத-சத்துரு என்னும் அரசனின் இரு மகன்களில் மூத்தவரான 'அஜிதன்'
என்பவர் அஜீதநாதர் என்னும் தீர்த்தங்கரராக மாறி சமண சமயத்தைப் பரப்புவதை மேற்கொண்டு வீடு பேற்றை அடைகிறார்.
இளையவர் 'சகரன்' தந்தைக்குப்
பிறகு அரச பொறுப்பேற்கிறார். இவர் கண்டப்பிரபாத
மலைக்குத் தன் பரிவாரங்களுடன் சென்று நாட்யமாலகன்
(இந்திரன்) என்னும் தெய்வத்தைக் குறித்து நோன்பு மேற்கொள்கிறார். நாட்யமாலகன்
அவர் முன் தோன்றி சகரனுக்கு வேண்டிய உதவிகளை வேண்டும் பொழுது
செய்வதாக வரம் அளித்து பெருஞ்செல்வத்தையும்
வழங்கினார். வரத்தை ஏற்றுக் கொண்ட சகரன் அவரைச்
சிறப்பித்துவிட்டு, தனது பரிவாரங்களுடன் கங்கையை அடைந்து அங்கு நவநிதி என்னும் ஒன்பதுவிதமான செல்வங்களைப்
பெறுவதற்காக மீண்டும் கடுமையான நோன்பு இருந்தார். மூன்று நாள் நோன்பிற்குப் பிறகு
ஒன்பது வகையான (1. நைசர்ப்பம், 2. பாண்டுகம், 3. பிங்கலம், 4. மகாபத்மம், 5. காலம், 6. மகாகாலம், 7. மானவம், 8. சங்கம், 9. சர்வரத்னம், என்ற)
நவநிதிகள் அவருக்குக் கிடைத்தன. அவற்றுடன்
ஒன்பது நிதிகளுக்கும் தலைவராக இருந்த ஒன்பது தேவகுமாரர்களும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய 1000 கணங்களும்
சகரனிடம் அவரது கட்டளைப்படி
ஏவல் செய்ய தாங்கள் காத்திருப்பதாக உறுதியும் அளித்தனர்.
வரங்களையும் நவநிதிச் செல்வங்களையும் பெற்ற சகரன் மகிழ்ச்சியுடன் செங்கோல்
பிறழாத ஆட்சி செய்து வந்தார். அவருக்கு 60,000 பிள்ளைகள்
பிறந்தனர். சகரனின் அப்பிள்ளைகள் சாகரர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில்
மூத்தவர் பெயர் 'ஜானு.' வளர்ந்த
பிறகு சாகர குமாரர்கள் நாடுகளைச் சுற்றிப் பார்க்க விரும்பினர். சகரனும்
அவர்களுக்கு ஜீவரத்தினங்களைக் கொடுத்து வழியனுப்பினார். பல இடங்களைச் சுற்றிப் பார்த்து இறுதியில் அஷ்டாபதமலை
என்னும் கயிலாய மலையை அடைகிறார்கள் சாகரர்கள்.
கயிலை அவர்களது முன்னோரான ரிஷப தீர்த்தங்கரர் வீடுபேறடைந்த இடம்.
ரிஷப தீர்த்தங்கரரின் மகனான பரத சக்கரவர்த்தி தன் தந்தைக்கு
விலைமதிப்பற்ற திருக்கோயிலை கயிலையில் அமைத்திருந்தார்.
அக்கோயிலுக்கு முன்னர் ரிஷபதீர்த்தங்கரரின்
உபதேசங்களைச் செவிசாய்த்துக்கேட்பது போன்று பரதச் சக்கரவர்த்தி தன்னுடைய
உருவத்தையும் அங்கு அமைத்திருந்தார்.
இக்கோயிலுக்கு வந்து வணங்கிய சாகர குமாரர்கள் அக்கோயிலின்
செல்வங்கள் எதிர்காலத்தில் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க அதற்கு ஓர் அகழி வெட்டி
நீர் நிரப்பிப் பாதுகாக்கத் திட்டமிட்டனர். தங்களிடம் உள்ள ஆற்றல் மிக்க
தண்ட ரத்தினம் கொண்டு நிலத்தை அகழ்ந்த பொழுது அது ஆழமாக நாகலோகம் வரையில் அகழ்ந்து விட்டது. இதனால் பாதாளத்தில் வாழ்ந்த நாகர்களுக்கு
அச்சம் ஏற்பட்டது. ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசன்
அவ்வகழியின் வழியாக மேலே வந்து அவர்களைக் கடிந்து கொண்டான். ஜானு இது எதிர்பாராத
தவறு என்றும், இனி தாங்கள் கவனமாக இருப்போம்
என்று சமாதானம் கூற, நாகராசன் மீண்டும் ஒருமுறை
எச்சரித்து விட்டு நாகலோகம் சென்றுவிடுகிறான்.
பிறகு சாகர குமாரர்கள் தம்மிடமிருந்த தண்டரத்தினத்தின் உதவியினால் கங்கையின் நீரைத் திருப்பி விட்டு அகழியில் நீர் பாய்ச்சினார்கள். கங்கை
நீர் பாதாளம் வரை பாய்ந்து நாகலோகத்தை வெள்ளக் காடாக்கியது. வெகுண்டெழுந்து
மேலே வந்த நாகராசன் அவர்களை விழித்துப் பார்க்க, அப்பார்வையினால் சாகர குமாரர்கள்
அறுபதினாயிரம் பேரும் அப்படியே எரிந்து
சாம்பலாயினர். பிள்ளைகள் இறந்த செய்தி அறிந்து துயருற்ற நிலையில் இருந்த அரசன் சகரனிடம், கங்கை பெருகி
வெள்ளம் எல்லாவற்றையும் அழிப்பதாகக் கூறி, காப்பாற்றச்
சொல்லி குடிமக்கள் கூக்குரலிட்டனர். அரசர் தனது
பேரனான பகீரதனிடம் தண்டரத்தினம் உதவியுடன் கங்கையைக் கடலுக்குத் திருப்பி விடும்படி கட்டளையிட்டார்.
பகீரதனும் அவ்வாறே கங்கையைக் கடலுக்குத் திசைதிருப்பி விட்டான்.
சிற்பக் காட்சியின் விளக்கம்:
இக்கதையைத்தான் மாமல்லபுரத்து புடைப்புச் சிற்பம் விவரிப்பதாக மயிலை சீனி.
வேங்கடசாமி தனது மகாபலிபுரத்து ஜைன சிற்பம் நூலில் கதையுடன் சிற்பத்தை ஒப்பிட்டு
விளக்கமளிக்கிறர்.
• ஒடுங்கிய வயிறும் வளர்ந்த தாடியும் கொண்ட
சகர சக்கரவர்த்தி தனது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி
ஒற்றைக்காலில் நின்று கண்டப்பிரபாத மலையில் தபசு செய்வதைச் சிற்பம் குறிக்கிறது. அவருக்கு எதிரில் நான்கு கைகளோடு இந்திரனுக்குரிய தண்டாயுதம்
கையில் ஏந்திய நாட்யமாலகன் (இந்திரன்) உடைய உருவம்
காணப்படுகிறது. வைதீக சமயம் காட்டும் இந்திரன் போலன்றி,
சமண சிற்ப சாஸ்திரப்படி, சமணம் கூறும்
இந்திரனுக்கு நான்கு கைகள் காட்டப்படுவது வழக்கம். அவர்களைச்
சுற்றி அருகில் நிற்பதாகக் காட்டப்படும் 8 குள்ள உருவங்கள் யாவும் பூத உருவங்கள். ஆகவே கதைப்படி இது பொருந்துகிறது.
• காலை மடக்கிக் கொண்டு கிரீடமகுடம்
அணிந்த ஆண்-பெண் இணையராகக் காட்டப்படும் உருவங்கள் மனிதர்கள் அல்லர், அவர்கள் வானில் பறக்கும் தேவர்கள்
என்று காட்ட காலை மடக்கிய நிலையில் பறப்பதாகக் காட்டப்பட்டுள்ளனர். 8
தேவர்கள் தங்கள் துணையுடனும், 8 கணங்களுடன்
காட்டப்படுவது சகர சக்கரவர்த்திக்கு அளிக்கப்பட்ட
நவநிதிகளில் எட்டு பேரைக் குறிக்கிறது. எட்டு
நிதிக்கும் எட்டுத் தலைவராக எட்டு தேவர்களும்
(நைசர்ப்பன், பாண்டுகன், பிங்கலன்,
மகாபத்மன், காலன், மகாகாலன்,
மானவன், சங்கன்), அவர்களுக்குக்
காவலாக எட்டாயிரம் பூதங்களும் இருந்ததை இந்தச் சிற்பப்பகுதி
குறிக்கிறது. அதாவது, எட்டாயிரம்
பூதங்களுக்குப் பதில் 8 நிதிக்கு 8 பூதங்களை
மட்டும் குறியீடாகச் சிற்பத்தில் சுருக்கமாகக் காட்டியிருக்கிறார்கள். சகர
சக்கரவர்த்தியின் அருகில் மண்ணில் நிற்பது போலக் காட்டப்படுபவர்கள், மனிதர்கள். அவர்கள் அரசருடன் கண்டப்பிரபாத மலைக்குச் சென்ற அவரது
பரிவாரங்கள். சூழ்ந்துள்ள சிங்கம், புலி, மான், குரங்கு போன்ற
விலங்குகள் மலையின் காடுகளில் வாழும் விலங்குகள்.
• ஒன்பதாவது இரத்தினமாகிய சர்வ ரத்தினம் என்னும்
நிதியைக் குறிக்கிறது சிற்பத்தின் மற்றொரு மேல் பகுதி. இந்த சர்வ ரத்தினம் என்னும்
நிதியானது ஜீவரத்தினம் ஏழையும் அஜீவரத்தினம் ஏழையும் அளிக்கவல்லது. ஏழு
ஜீவரத்தினங்கள், ஏழு அஜீவரத்தினங்கள் எனவாகப் பதினான்கு
இரத்தினங்களையும் இப்பகுதி பற்பல உருவங்களாக விளக்கிக் காட்டுகிறது. இது இசை முதலியவற்றையும் கின்னர உருவங்கள்
முதலியவற்றால் விளக்கப்பட்டுள்ளது.
• நடுவில் காட்டப்படுவது கங்கையாறு என்று தவறாகக் கூறப்படுகிறது. அது ஆறு அல்ல,
சகர குமாரர்கள், ரிஷபர் கோயிலைச்சுற்றிலும்
தோண்டிய அகழியின் ஒரு பகுதியை இச்சிற்பம் காட்டுகிறது. இந்த அகழியில்
காட்டப்படுவது நாகராசனும் அவனுடன் வந்த
அவன் மனைவியும், மந்திரி முதலியவர்களும் ஆவர். அகழி
தோண்டியதால் நாகலோகம் பாதிக்கப்பட்ட
பொழுது நாகராசன் மேலே வந்து எச்சரித்த காட்சியை இப்பகுதி விளக்குகிறது.
• இச்சிற்பத்தில் கீழ்ப் பகுதியில் காணப்படும்
யானைகள், பாதாளம் வெள்ளக் காடாகிய பொழுது மீண்டும்
சினத்துடன் மேலே வந்து சாகர குமாரர்களை அழித்த
நாகராசன் ஜுவலனப்பிரபனையும் அவனுடன் வந்த நாகப் பரிவாரங்களையும் குறிப்பதாகும்.
சினந்து நோக்குவது போல காட்டப்படும் பெரிய யானைதான் ஜுவலனப்பிரபன்.
நாகலோகத்தில் நீர் நிரம்பியபொழுது "அங்குசத்தால் குத்துண்ட
மதயானை வெஞ்சினம் கொண்டது போல "கடுஞ்சினம் கொண்டு சாகரரைச் சினந்து
நோக்கினான் என்று இக்கதை எழுதிய காவியப்புலவர் கற்பனை செய்து சிலேடையாக எழுதியதை
இலக்கியநூல் விவரிக்கிறது. நாகம் என்னும் சொல்லுக்கு யானை என்றும்,
பாம்பு என்று இருபொருள் உண்டு. ஆகவே அகழியில் பாம்பு உருவத்தில்
வந்து எச்சரித்த ஜுவலனப்பிரபனில் இருந்து இது அவனை வேறுபடுத்திக் காட்டுகிறது.
இது இலக்கியச் சிலேடையை அவ்வாறே சிற்பத்தில் சித்தரிக்கும் பகுதி.
• கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தலையற்ற மூன்று
மனித உருவங்களும் நாகராசனின் கோபப் பார்வையினால் இறந்துபோன சகர குமாரர்களைக்
குறிக்கிறது. அறுபதினாயிரம் சகர குமாரர்களின்
குறியீடாக மூன்று தலையற்ற உருவங்கள்
காட்டப்பட்டுள்ளனர். தலையற்ற நிலை அவர்கள் மரணத்தைக்
காட்டுகிறது. வடமொழியில் ஒருமை, இருமை,
பன்மை என்ற இலக்கணம் முறையே ஒன்று,
இரண்டு பல என்பதைக் குறிக்கும். ஆகவே
வடமொழி முறையைப் பின்பற்றி, சகர குமாரர்கள் பலர்
என்பதைக்குறிக்க மூன்று உருவங்கள் காட்டப்பட்டுள்ளன.
• இந்திரனுக்கு வலப்புறம் நிற்கும் மனிதர்களில்
ஒருவர் இடது தோளில் குடம் போல ஒன்றை வைத்துக் கொண்டு வலது கையால் ஆற்றில் எதையோ
வீசுவது போல் காட்டப்படுவது திருமஞ்சனம் செய்வதற்காகக் குடத்தில் நீர் எடுத்துச்
செல்பவராக தவறாகக் கூறப்படுகிறது. அவர் போடுவது
இறந்தவரின் எலும்புகளைக் குறிக்கிறது. இது பகீரதன் கங்கையைக் கடலுக்குத்
திருப்பிவிட்ட பின்னர் இறந்த சாகர குமாரர்களின் எலும்புகள்
கங்கையில் அடித்துச் செல்லப்பட்டதைக் குறிக்கிறது. அதுமுதல் இறந்தவர் எலும்பைக்
கங்கையில் போடுகிற வழக்கம் ஏற்பட்டதென்றும் அஜிதநாகதீர்த்தங்கரர் புராணம்
கூறுகிறது. ஆகவே, இந்தச் சிற்பம், இறந்தவர்
எலும்பைக் கங்கையில் போடுகிறதைக் காட்டும் பகுதி. அவர்
அருகில் நிற்பவர் வைத்திருப்பது, அகழி தோண்டப்
பயன்பட்ட தண்ட ரத்தினம்.
• கோயில் ஒன்றும், அதன்
முன் ஒருவர் அமர்ந்து செவி சாய்த்துக் கேட்பது போன்று அமைந்த சிற்பங்கள்
கயிலாய மலையில் பரதச் சக்கரவர்த்தி அமைத்த ரிஷபதேவர் கோயிலையும்,
அக்கோயிலுக்கு எதிரில் பரதச் சக்கரவர்த்தி தமது உருவத்தை, ரிஷபர் செய்யும் உபதேசத்தைச் செவிசாய்த்துக் கேட்பது போல அமைத்திருந்த
பரதச் சக்கர வர்த்தியின் உருவத்தையும் குறிக்கின்றன. கோயிலுக்கு முன்
அமர்ந்திருப்பவர் எல்லோரும் நினைப்பது போல ரிஷி அல்ல, அவர்
பரதச் சக்கர வர்த்தி. கோயிலுக்குள் இருக்கும் ரிஷப தீர்த்தங்கரர் திருமால் உருவமாகக் காணப்படுகிறது. ஜைன
தீர்த்தங்கரராகிய ரிஷபதேவரின் உருவம் இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் உருவம்
இருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கலாம் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.
முதல் காரணம்: ரிஷப தீர்த்தங்கரரும் விஷ்ணுவும் ஒருவரே என்றும்; விஷ்ணு ரிஷப தீர்த்தங்கரராக அவதாரம் செய்து ஜைன மதத்தைப் பரவச் செய்தார்
என்று பாகவத புராணம் கூறுகிறது. அது சிற்பத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
இரண்டாவது காரணம்: 17-ஆவது நூற்றாண்டு விஜயநகர அரசு
ஆட்சிக் காலத்தில் மாமல்லையில் வைணவர் ஆதிக்கம் பலமாக இருந்த பொழுது, அக்காலத்தில்
மாமல்லபுரத்துச் சிற்பங்களில் சில மாற்றப்பட்டன என்பதற்குச் சில
சான்றுகள் உள்ளன. அப்பொழுது ரிஷப தீர்த்தங்கரர் உருவம் விஷ்ணு உருவமாக மாற்றப்பட்டிருக்கக் கூடும்.
இதுவரை காட்டப்பட்ட சிற்பங்கள் தவிர்த்து பூனை தபசு, குரங்குகள், புலி போன்ற ஏனைய சில சிற்பங்கள் சிற்பக் கலை அழக்கிற்காகச் செதுக்கப் பட்டிருக்கலாம்
என்கிறார் மயிலை சீனி.
வேங்கடசாமி.
காலமாற்றம்:
விண்ணவர், மனிதர்,
விலங்குகள், பறவைகள் எனப் பல வகையானவற்றையும் விவரிக்கும் இச் சிற்பம் ஏதோ ஒரு புராணக் கதை
நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது என்பதில் எவருக்கும் கருத்து
வேறுபாடு கிடையாது. எனினும் இது எந்தப் புராணம் குறிப்பிடும், எந்த நிகழ்வைக் குறிக்கின்றது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து
வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவு. அஜிதநாதர்
புராணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதைக்கும், இந்தச்
சிற்பத்தில் காணப்படுகிற உருவங்களுக்கும் பெரிதும் பொருத்தம் காட்டும் மயிலை சீனி.
வேங்கடசாமி, சிற்பம் செதுக்கப்பட்ட 7ஆம்
நூற்றாண்டில், சமண சமயம் செல்வாக்குடன் இருந்த காலத்தில்,
இது யாவருக்கும் தெரிந்த கதையாக இருந்திருக்க வேண்டும் என்று
கருதுகிறார்.
எத்தகைய செல்வம் பெற்றிருந்தாலும், கடவுளிடம் என்ன வரங்கள் பெற்றிருந்தாலும், நவநிதிகளுமே பெற்றிருந்தாலும், அரசராகவே இருந்தாலும்,
பேராற்றலும் வலிமையும் கொண்டவராக இருந்தாலும் ஊழ்வினைக்கு உட்பட்டு
ஆக வேண்டும் என்பதை உணர்த்துவதே இச் சிற்பம் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்பதும்
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் துணிபு. திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்' விவரிக்கும்
கதைக்கும் இச்சிற்பத்திற்கும் வேறுபாடு இல்லை. தமிழில்
உள்ள ஸ்ரீபுராணம் மற்றும் ஜீவசம்போதனை என்னும் நூல்கள்,
சில மாறுதல்களோடு இக்கதையைக் கூறுகின்றன என்கிறார் மயிலை சீனி.
வேங்கடசாமி.
ஆகவே, சமணக் கதையை அறியாதவர் இதனை 'அர்ச்சுனன்
தபசு' என்றும், 'பகீரதன் தபசு' என்றுமே சொல்லுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கு
அரசின் தொல்லியல் துறை சரியான விளக்கப் பலகைகளை மாமல்லபுரச் சிற்பத்தின் அருகே
நிறுவி உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஏனெனில், தென் இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சி சங்கத்தில் (Archaeological
Socety) 1947-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம்
தேதி தொல்லியல் துறையினர் முன்னர்
தன் ஆய்வை உரையாக வழங்கியதாக மயிலை சீனி.
வேங்கடசாமி கூறியுள்ளார். சிற்பம்
காட்டுவது அஜிதநாதசுவாமி என்னும் இரண்டாவது ஜைன தீர்த்தங்கரர் புராணத்தில்
கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதை என்றும் (அதாவது, இது
இராமாயணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதையல்ல என்றும்) இந்தச் சிற்பக்
காட்சி குறித்து நூல் சான்று காட்டி விளக்கமும் கொடுத்துள்ளார். அவர்களும் மயிலை
சீனி. வேங்கடசாமி அவர்களின் ஆய்வை ஏற்றுக் கொண்டதாக நூலின் வழி அறிய முடிகிறது.
'திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்' குறித்து:
மாமல்லையின் சிற்பம்
தவிர்த்து 'திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்' கவனத்தைக் கவரும் வேறு செய்தியையும் கொண்டுள்ளது. 'திரிஸஷ்டி சலாகா புருஷ சரித்திரம்' என்ற
நூல் குஜராத்தில் வாழ்ந்த 'ஆச்சாரியா ஹேமச்சந்திரா'
(Acharya Hemachandra; 1088 – 1173) என்பவரால் எழுதப்பட்டது.
மாமல்லை சிற்பத்தின் காலம் ஏழாம் நூற்றாண்டு, அதாவது
இதற்கும் முற்பட்ட காலம் என்பதால் இது சமண சமயத்தில் தொன்று
தொட்டுப் பல காலமாக வழங்கிய கதையாக இருக்க வேண்டும் என்பதும் தெரிகிறது.
12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'திரிஸஷ்டி
சலாகா புருஷ சரித்திரம்' என்ற நூல் 63 சமணப் பெரியார்களின் வாழ்வை விவரிக்கும் நூல்.
ஆச்சாரியா ஹேமச்சந்திரா மன்னர், குமார பாலாவின் நண்பர். அவருடைய
சொல்லுக்கு அரசரிடம் நல்ல செல்வாக்கும் இருந்தது. ஜைன
சமயம் இவர் காலத்தில் குஜராத்தின் அரச சமயமாகப் பரவலாக்கப்பட்டது.
உணவிற்காகவும் சமயத்திற்காகவும் விலங்குகளைக்
கொல்வதும் இவர் காலத்தில் ஒழிக்கப்பட்டது. அக்கலாம்
முதல் கடந்த 900 ஆண்டுகளாக குஜராத் மக்களில் பெரும்பாலோர் சைவ உணவு
உண்போராகவே வாழ்ந்து வருகின்றனர். சல்லேகனம் (உண்ணா
நோன்புடன் வடக்கிருத்தல்) செய்து இறந்தவர் ஆச்சாரியா
ஹேமச்சந்திரா.
ஆச்சாரியா ஹேமச்சந்திரா 63 சமணப் பெரியார்களின் வாழ்வை சமஸ்கிருதத்தில் விவரித்து எழுதிய அதே 12 ஆம் நூற்றாண்டில்தான், தமிழகத்தில் இரண்டாம் குலோத்துங்கன் (பொ. ஆ.: 1133–1150) ஆட்சிக் காலத்தில் சேக்கிழாரால் பெரிய புராணம் இயற்றப்பட்டது. பெரியபுராணத்தில் இடம்பெறும் நாயன்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் 63 சைவ அடியார்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் எழுதிய திருத்தொண்டத் தொகை நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். திருத்தொண்டத் தொகை நூலில் சுந்தரமூர்த்தியார் குறிப்பிட்ட அறுபது சிவனடியார்களுடன் திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்து 63 சைவப் பெரியார்கள் என்ற எண்ணிக்கையில் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அல்லது பெரியபுராணம் அமைந்தது. இத்தகைய செயல் சமண சமயத்திற்குப் போட்டியாக சைவ சமயம் மேற்கொண்ட ஒரு முயற்சி என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
மாமல்லபுரத்து தரையிறங்கும்
கங்கை சிற்பம் குறித்த விளக்கங்கள்:
மாமல்ல புரத்தின் தரையிறங்கும்
கங்கை (Descent of the Ganges) சிற்பத்தின் முதன்மைப் பொருண்மை
‘தவம்’ குறிப்பது அல்ல, பாறைகளுக்கு இடையே காட்டப்படும்
பிளவே முதன்மை நோக்கம் என்பதை ஆய்வாளர்கள் பலரும் கருதுகிறார்கள்.
— பெரும் பாறைகள் இமயமலையைக் குறிக்கிறது
என்பதிலும்,
— பாறையின் பிளவு கங்கை பாய்வதைக் குறிக்கிறது என்பதிலும்,
— இமயமலையின் காட்டில் விலங்குகளும், பறவைகளும்,
மரங்களும் காட்டப்படுகிறது என்பதிலும்,
— விண்ணவர்களும், மண்ணுலக மனிதர்களும்
உயிரினங்களும் பிளவை மையமாகக் கொண்டு நகர்வதையும் கருத்தில் கொண்டால் இப்பாறைச்
சிற்பத்தை, அதாவது சமண சமய சகர, சாகரர்
கதை உட்பட, இந்தச் சிற்பம் விளக்குவது கங்கை கீழிறங்கும்
காட்சி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை.
ஆனால், அர்ச்சுனன் கதையுடன் இணைக்கையில் இந்த ஆற்றை சரஸ்வதி என்று குறிக்கும்
கருத்து ஒன்று இருப்பதையும் அறிய முடிகிறது (Saurabh Saxena). சொல்லப்படும் புராணக் கதை என்னவென்பதில் சர்ச்சை இருந்தால் உறுதியாக
முடிவெடுக்கக் கூடிய ‘The story of the descent of river Ganges’
என்ற வகையில் கங்கை கீழிறங்குவதைக் குறிப்பதே பொருத்தமாக இருக்கும். ஆகவே ‘தவம் செய்யும் காட்சி முதன்மை அல்ல’ என்பது உறுதியாகும் பொழுது
அர்ச்சுனன் செய்யும் தவம் என்ற மகாபாரதக் கதை வழக்கு இங்குப் பொருத்தமற்றதாகிவிடுகிறது.
பிரிட்டிஷ் நூலகத்தின் அரிய படங்களின் தொகுப்பில் மாமல்லபுரத்தின்
சிற்பங்களைக் காட்டும் ஓவியங்களும், ஒளிப்படங்களும் சுமார் 60க்கும் மேல்
எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் 8 படங்களில் இப்புடைப்புச்
சிற்பம் காட்டப்படுவதைக் காணலாம். 1850ஆம் ஆண்டுக்கு
முற்பட்ட படங்கள் யாவும் வண்ண ஓவியங்கள். 1850ம் ஆண்டிற்குப்
பிறகு ஒளிப்படங்கள் எடுக்கும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு ஒரு சில
ஒளிப்படங்களும் சேமிப்பில் இடம் பெறுகின்றன. இருப்பினும், புடைப்புச் சிற்பத்தைக்
காட்டும் ஒரே ஒரு ஒளிப்படம் மட்டுமே உள்ளது. இது நிக்கோலஸ் குழுவினர் 1880 இல் (Photograph by Nicholas and Co. taken in ca. 1880) எடுத்த படம். இருப்பனவற்றில் காலத்தால் முற்பட்ட ஓவியம் தாமஸ் டேனியல் (Thomas Daniel:1749-1840)
என்பவர் வரைந்த கோட்டோவியமும் வண்ண ஓவியமும் ஆகும். இவை 18 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக 1792 – 1799 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டவை.
இந்த 1700களின் தாமஸ் டேனியல் ஓவியங்களின் குறிப்பில் “It
was at one time thought to depict the myth of the origin of the river Ganges
and its descent on earth flowing through the tangled hair of Shiva, but is now
more widely thought to represent the story of the penance of Arjuna, one of the
heroes of the Mahabharata, a penance undertaken to win the magic axe of the god
Shiva..” என்ற குறிப்பு இருக்கிறது. ஆகவே முன்னர் பகீரதன் என்று
கருதப்பட்ட சிற்பம் 19 ஆம் நூற்றாண்டுகளில் அர்ச்சுனன் தபசு
என்று மாறத் தொடங்கியுள்ளதை இக்குறிப்பு ஆவணப்படுத்தியுள்ளதாக நாம் எடுத்துக்
கொள்ளலாம்.
இதற்கு விஜயநகர ஆட்சியின் தாக்கமும் காரணமாக அமைந்திருக்க வாய்ப்புண்டு. 17-ஆவது
நூற்றாண்டு விஜயநகர அரசு ஆட்சிக் காலத்தில் மாமல்லையில் வைணவர் ஆதிக்கம் பலமாக
இருந்த பொழுது, அக்காலத்தில் மாமல்லபுரத்துச் சிற்பங்களில்
சில மாற்றப்பட்டன என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன என்று மயிலையார் குறிப்பிடும்
கருத்தை இங்குப் பொருத்திப் பார்க்கலாம். அக்காலத்தில் மாமல்லபுரமே மகாபலிபுரம்
என்று திரிபடைந்து மகாபலிச் சக்கரவர்த்தி உருவாக்கிய நகர் என்று நம்பிய கதையும்
வழக்கத்தில் இருந்திருக்கிறது. இக்கைதைக்குறிப்பும் படத்தின் குறிப்பில் இடம்
பெறுகிறது (“Mahabalipore, is considered…[to be] the remains of a city of
vast magnificence, and of the highest antiquity; and supposed to have been
founded by the great Bali, whose name it bears.”).
சிலையில் தவக் காட்சியில் காட்டப்படுபவர் அர்ச்சுனனா அல்லது பகீரதனா, சிற்பத்தின்
காலம் நரசிம்ம பல்லவனா அல்லது ராஜசிம்ம பல்லவனா என்ற வெவ்வேறு கோணங்களில்
ஆய்வாளர்கள் கருதினாலும், முன்னர் குறிப்பிட்டது போல
மயிலையார் சுட்டிய சமணப் புராணக் கதை என்ற கோணத்தில் எவரும் சிற்பத்தை அணுகியதாகத்
தெரியவில்லை. இயற்கையாகவே அமைந்துள்ள இருபெரும் பாறைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி
கொண்ட தோற்றமே அதில் கங்கை பாய்வதாக கூறப்படும் கதையை விவரிக்க சரியான பாறைகளாக
சிற்பத்திற்காகத் தேர்வு செய்ய வைத்திருக்கிறது. ஆகவே சிற்பம் கங்கை மற்றும் பகீரதன்
கதையுடன் தொடர்பு கொண்டது என்பதை உறுதியாகக் கூறலாம். ஆனால் தவம் செய்பவரும் அருள்
வழங்குபவரும் சமண வைதீக கதைகளில் வேறுபடுவார்கள். சமணப் புராணத்தில் சாகர
குமாரர்களால் கங்கை அகழிக்குத் திருப்பிவிடப்படுகிறது, பின்னரே
பாட்டன் அரசன் சகரனின் ஆணைப்படி கங்கை பகீரதனால் கங்கை கடலுக்குத்
திருப்பிவிடப்பட்டு மக்கள் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள் என்பதை
இங்கு நினைவில் கொள்ளலாம்.
பாறைகளின் இடைவெளி கங்கை பாய்வதைக் குறிக்கும் என்பதை மேலும் உறுதிப்படுத்த
மாமல்லபுரத்திலேயே மற்றொரு சான்று உள்ளது. அது புகழ் பெற்ற இச்சிற்பத்திற்குத்
தெற்கே சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு புடைப்புச் சிற்பம். இது
கலங்கரை விளக்கத்திற்குப் பின்புறம் உள்ளது. இச்சிற்பம் குறித்து உள்ளூர் மக்களும்
சுற்றுலாப் பயணிகளும் அதிக அக்கறை காட்டுவதில்லை என்பதை இச்சிற்பம் குறித்துக்
கிடைக்கும் செய்திகள் மற்றும் படங்களின் எண்ணிக்கையை வைத்து எளிதாக
முடிவெடுக்கலாம். ஆனால் ஆய்வாளர்கள் இச்சிற்பங்களை ஆர்வத்துடன் ஒப்பிட்டு
ஆராய்ந்துள்ளார்கள். இந்தியத் தொல்லியல் துறையின் நூலிலும் இச்சிற்பம் பற்றிய
குறிப்பு உள்ளது (Pallava Architecture-Part II: Intermediate or Mamalla
period. Longhurst, A. H. 1998. Archaeological survey of India). இரண்டாம்
சிற்பமும் முதல் சிற்பத்தின் காட்சியைத்தான் காட்டுகிறது என்பது ஆய்வாளர்களின்
கருத்து.
இரட்டை சிற்பங்களை ஒப்பிடுகையில், இரண்டாவது சிற்பம் முதல் சிற்பத்தின் அளவில் பாதி அளவிலேயே
அமைந்துள்ளது. கணக்கெடுக்கும் முறைக்கேற்ப முதல் சிற்பத்தின் சிற்பங்களின்
எண்ணிக்கை வேறுபட்டாலும், 150க்கும் குறையாத உருவங்களின்
எண்ணிக்கை கொடுக்கப்படுகிறது. இரண்டாம் சிற்பத்தில் 88 உருவங்கள் கணக்கிடப்பட்டுள்ளது (IndianColumbus).
முதல் சிற்பத்தில் சிற்பத்தின் வலதுபுறத்தின் கீழ்ப்பகுதி (பார்வையாளருக்கு
இடப் பக்கம் என்று கொள்க) நிறைவு செய்யப்படாமல் இருந்தாலும் செதுக்கப்பட்ட
சிற்பங்களின் உருவம் முழுமையாக சீர்மையாக செதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இரண்டாம்
சிற்பம் முழுமை பெறாத சிற்பம் என்றே பலராலும் குறிப்பிடப்படுகிறது (Incomplete
Penance Panel). இரண்டாம் சிற்பத்தில் உருவங்களின் உறுப்புகளின்
அளவிலும் சீர்மை காணப்பெறவில்லை, அவை தெளிவாகவும் செதுக்கப்
பெறவில்லை. ஆனால் இவ்வாறுதான் செதுக்கத் திட்டமிடப்பட்டதா என்றும் இதுகுறித்த
கருத்து வேற்றுமை உண்டு. இது முழுமை பெறாத
சிற்பம் என்றால் ஏன் கைவிடப்பட்டது என்பதிலும் மாறுபட்ட கருத்துகள் உண்டு.
அத்துடன், ஏன் சற்று தொலைவிலேயே மற்றொரு சிற்பம் பாதி
செதுக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுள்ளது போல அமைந்துள்ளது? இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவைதானா? இரண்டாம்
சிற்பத்தின் நோக்கம் சிற்பிகளில் முதலில் பழகுவதற்காக இருக்கலாமோ? என்ன காரணம் என்பது போன்ற ஆய்வு நோக்கில் கருத்துகளை ஆய்வாளர்கள்
முன்வைக்கிறார்கள். இரண்டு சிற்பங்களுக்கும் இடையில் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமை
பாறைகளுக்கு இடையே உள்ள பிளவு. அப்பிளவைக் கருத்தில் கொண்டே அதே கதை அங்கும்
தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் சிற்பத்தில் சம அளவு பாறைகளுக்கு நடுப்பகுதியில்
பிளவு அமைந்துள்ளது அது ஆறு என்று காட்டும் வகையில் நாகர்கள் காட்டப்படுகிறார்கள்.
இரண்டாவது சிற்பத்தில் பிளவு ஓர் ஓரத்தில் அமைந்துள்ளது, அங்கு
நீர் பாய்வதாகக் காட்டும் முயற்சி எடுக்கப்படவில்லை. அத்துடன் இரு
பாறைகளுக்கும் இடையில் முழுமை பெறாத சிற்பத்தில் கீழ்நோக்கிப் பாயும் ஆறு போன்ற
நிலையைக் காட்டும் வகையில் உருவங்கள் இல்லை. பிளவின் இடைவெளியும் முதல்
சிற்பத்தில் இருப்பது போல செங்குத்தாக இல்லாது சற்றே சாய்வாக உள்ளது.
விண்ணவர்களும் மற்ற உயிரினங்களும் மையப் பகுதியை அல்லது பிளவை நோக்கியே
இருசிற்பங்களிலும் நகர்கின்றன. கோயிலும் அதன் முன் முனிவரும் இருக்கும் பகுதி
இரண்டாம் சிற்பத்தில் காட்டப் பெறவில்லை. அத்துடன் இரண்டாம் சிற்பத்தில் தவம்
செய்பவரும் அருள் புரிபவரும் இடம் வலமாக இடம் மாறி நிற்கிறார்கள். இரண்டாம்
சிற்பத்தின் அருள் தருபவர் கையில் வேல் அல்லது சூலம் போன்ற நீண்ட பிடியுள்ள ஆயுதம்
காணப் பெறவில்லை. அத்துடன் இக்காட்சி மற்ற சிற்பங்களிலிருந்து பிரிவுபடுத்திக்
காட்டும் வகையில் பாறை முகப்பு வெட்டிச் செதுக்கப்பட்டும் காட்டப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் சிற்பத்தில் பறவைகளின் எண்ணிக்கை மிகுதி, மொத்தம் 24 பறவை உருவங்கள் இரண்டாம் சிற்பத்தில்
இடம் பெறுகின்றன.
கங்கை ஆறு:
தவத்தை மெச்சி இறைவன்
வரம் அளிப்பது என்பது இந்தியப் புராணங்களில் பலவற்றில் பொதுவாக இடம் பெறும்
காட்சி. இச்சிற்பம் அர்ச்சுனன் செய்த தவத்தைக் காட்டுவது போல இல்லை என்று இந்தியத்
தொல்லியல் துறை வெளியிட்ட ‘பல்லவ கட்டிடக்கலை’ நூலில் டாக்டர் ஓகெல் (Vogel) 1910 இல் குறிப்பிட்டதாக 40 ஆம் பக்கத்தில்
பதிவாகியுள்ளது. அத்துடன் பல்லவ கட்டிடக்கலை நூலில் அடுத்து வரும் சில செய்திகளும்
இடம் பெறுகின்றன. சிற்பத்தின் மேல்புறத்தில் 23 சதுர அடி
கொண்ட நீர்த்தொட்டி கட்டுமானம் ஒன்று இருந்ததன் சுவடு உள்ளது. சிற்பத்தின்
இடதுபுறம் உள்ள யானை உருவங்களுக்குப் பின்புறப் பகுதியிலிருந்து சிற்பத்தின்
உச்சிக்குச் செல்லும் படிகளின் வழியே இந்நீர்த் தொட்டியில் நீர் கொண்டு சென்று
நிரப்பப்பட்டிருக்க வேண்டும். விழா போன்ற சிறப்பான நாட்களில் தொட்டியில் நீர்
நிரப்பப் பட்டு அது பாறைகளுக்கு நடுவே உள்ள பிளவு வழியாக ஆறு பாய்வது போல வழிந்தோட
விடப்பட்டிருக்க வேண்டும்.
1879 இல் வெளியான செங்கல்பட்டு மாவட்டத்தின் கையேடு (Manual
of the Chengalpat District) நூலில், மெட்ராஸ்
கவர்னர் ஆக இருந்த ‘லார்ட் நேப்பியர்’ (Lord Francis Napier)
மாமல்லபுரத்திற்கு வந்தபொழுது இந்தச் சிற்பத்தின் முன்னர் இருக்கும் தரைப்
பகுதியில் ஏழு அல்லது எட்டு அடிக்குத் தோண்டிச் செப்பனிட உத்தரவிட்டதாகவும்,
அதன் பிறகே சிற்பத்தின் அடிப்பகுதியில் இருக்கும் குட்டி யானைகள்,
போலித் தவம் செய்யும் பூனை, இந்திய பழைய பத்து
ரூபாய் பணத்தில் காட்டப்பட்ட முகம் துடைக்கும் மான் போன்ற புகழ் பெற்ற சிற்பங்கள்
வெளிப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.
சிற்பத்திற்கு முன்னர் இருந்த 30 அடி அகலம் 85 அடி அகலம் கொண்ட
செயற்கைக் குளத்தில் வண்டலும், குப்பைகளும், கட்டுமானப் பொருட்களும் நிரம்பி செயற்கைக் குளம் தூர்ந்து
போயிருந்திருக்கிறது. அதை அகழ்ந்த பொழுது இன்று சிற்பத்தின் நடுப்பகுதி பிளவில்
முதன்மையாகக் காட்சியளிக்கும் நாகராஜனின் தலைப்பகுதி, மற்றும்
யானைச் சிற்பத்தின் உடைந்து போன தந்தம் போன்றவை கிடைத்துள்ளன. அவை மீண்டும்
இச்சிற்பத்தில் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டு சிற்பம் செப்பனிடப்பட்டுள்ளது. இதே
காலகட்டத்தில், நிக்கோலஸ் 1880 இல்
எடுத்த ஒளிப்படத்திலும் தலையற்ற நாகராஜன் சிற்பம்தான் உள்ளது.
பொதுப்பணித்துறை சிற்பத்திற்கு மேல் நீர் வழியும் பாதையையும் பக்கவாட்டில்
செல்லுமாறு செப்பனிட்டு உள்ளார்கள். மழை பெய்தால் மேலும் நீர் வழிந்து சிற்பத்தின்
பிளவில் வழிந்தோடி அவற்றைச் சிதைக்காமல் இருக்கவும், கீழுள்ள செயற்கை
குளத்தில் மீண்டும் வண்டல் படிந்து தூர்ந்து போகாமல் இருக்கவும் இவ்வாறு சிற்பம்
சீர் செய்யப்பட்டதாக தொல்லியல் துறை வெளியிட்ட ‘பல்லவ கட்டிடக்கலை நூலில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு முன்னர் 1792லும் 1825லும் வரையப்பட்ட
ஓவியங்களைப் பார்த்தால் நீர் விழுந்து நாகராஜன் சிற்பம் சேதமடைந்தாக இருக்க
வாய்ப்பில்லை என்பது தெரியவரும். குறிப்பாக ஜான் காண்ட்ஸ் (John Gantz
-1825) 1825 இல் புடைப்புச் சிற்பத்தை வெவ்வேறு கோணங்களில் வரைந்த
மூன்று ஓவியங்கள் கிடைக்கின்றன. அவற்றில் தெளிவாக பாறைகளின் இடையில் இருக்கும்
பிளவில் நிறைய செடிகளும், சிறு மரங்களும் புதராக
மண்டியிருப்பதைக் காணமுடிகிறது. இந்த மரங்களின் வேர்களின் வளர்ச்சியாலும், அவற்றை நீக்கிப் பராமரிக்காமல் விட்டதாலும் நாகராஜன்
சிற்பம் சிதைந்துவிட்டது என்று புரிந்து கொள்ள
முடியும். அவ்வாறே, தூர்வாரப்படாமல் விட்டதால் செயற்கைக்
குளத்திலும் கல்லும் மண்ணும் குப்பையும் நிரம்பி சிற்பத்தின் சிதைந்து விழுந்த
பாகங்களும் கீழ்ப்பாகமும் மூடப்பட்டு விட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள
முடியும்.
மேலும் நாகராஜன் சிற்பம் சிதைவடைய அதை அமைத்த விதமும், அமைக்கப்பட்ட
நோக்கமும் காரணமாக இருக்க வேண்டும். இரு பாறைகளுக்கு இடையே பிளவு போன்ற பகுதியைப்
பாயும் ஆறாக காட்ட முடிவெடுத்த பின்னர் பிளவு செங்கற்களாலும் கற்களாலும்
நிரப்பப்பட்டு காரை சாந்து பூசப்பட்டு அதன் முன்னர் நாகராஜன், நாகராணி சிலைகள் தனியே உருவாக்கப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ளதாகவும்
தொல்லியல் துறை வெளியிட்ட ‘பல்லவ கட்டிடக்கலை நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைக் கீழ்வரு மாறு பல்லவ கட்டிடக்கலை நூல் குறிப்பிடுகிறது.
” The cleft running down the centre of the rock is natural and in order
to provide it with a more or less smooth surface so that the water might flow
freely down the front, the Pallavas closed up the deep recess at the back with
brick and rubble masonry in mortar, and then inserted the two free standing
figures of the male and female Nāgas . These two
images are carved in the round and were fixed after the main work was finished
and are not hewn out of the natural rock like the rest of the bas – reliefs adorning
this wonderful scene . (Pallava Architecture, Part II, by Longhurst, A.H, Page
41)
அதாவது பெரிய பாறைகளுக்கு இடையேயான பிளவு இயற்கையானது. அந்த ஆழமான பிளவில்
ஆற்று நீர் பாய்வதைக் காட்டும் வகையில் சிற்பம் அமைக்கும் பொருட்டு பாறைகளின்
இடைவெளி நிரப்பப்பட்டு காரையும் சாந்தும் பூசப்பட்டு மூடப்பட்டுள்ளது. இந்தக்
கட்டுமானத்திற்கு முன்னர் தனியான பாறைகளில் செதுக்கப்பட்ட நாகராஜன், நாகராணி
சிலைகள் பொருத்தப்பட்டுள்ளன. இச்சிலைகள் பெரும்பாறைகளின் இயற்கையான தொடர்ச்சி
அல்ல.
இவ்வாறு சிற்பம் உருவாக்கப்பட்ட முறையே, நாகர்கள் தனிப்பாறையில்
செதுக்கப்பட்டு இணைக்கப் பெற்றதே நாகராஜன் சிலை இடுப்புக்கு மேல் சரிபாதியாக
உடைந்த நிலைக்குக் காரணமாக இருக்க வேண்டும். காலின் மெக்கன்சி (Colin
Mackenzie, 1754 – 1821) தொகுப்பில் இடம் பெறும் பெயர் அறியப்படாத
மற்றொரு ஓவியர் 1800 இல் வரைந்த கோட்டோவியம் (பிரிட்டிஷ்
நூலகச் சேமிப்பில் பட எண் : 2624) ஒன்றும் இடுப்பிற்கு மேல்
பாதி உடைந்த நாகராஜன் சிலையையும், அதற்கு மேல் புதர் மண்டிக்
கிடப்பதையும் காட்டுகிறது. அது மட்டுமின்றி, அந்தப் பிளவில்
நாகராஜன் சிலை பொருத்தப்பட்டுள்ளதாகவும் பின்வருமாறு அப்படத்தில் இடம் பெற்றுள்ள
குறிப்பு குறிப்பிடுகிறது.
“The cleft in the rock covered with nagas (serpent deities) over which
water used to flow could also represent the myth of the descent of the
celestial river Ganga to the earth”
சகர சாகரர் கதை குறிப்பிடுவது போல அகழியில் பாய்ந்த கங்கை வெள்ளத்தால்
நாகலோகத்திலிருந்து நாகர்கள் மேலெழும்பி வருவது காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. ஆக
இதிலிருந்து இரு பாறைகளும் இமயமலை, அங்கு இடையில் பாய்வது கங்கை என்றே முடிவெடுக்கலாம்.
இதன் மூலம் இரண்டாவதாக தெற்கில் உள்ள சிற்பம் கைவிடப்பட்டிருந்தால் அது ஏன்
என்றும் ஒருவாறு யூகிக்கலாம். இரண்டாம் சிற்பப் பறைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி
செங்குத்தான நிலையில் இல்லாமல் சாய்வாக இருப்பதால் அங்கு விரும்பியபடி நாகர்கள்
சிலைகளை அமைக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடும், அதனால்
சிலையின் உருவங்களை மேற்கொண்டு தெளிவுற வடிக்கும் முயற்சி தேவையில்லை என்று
சிற்பம் கைவிடப்பட்டிருக்கலாம்.
பிளவில் நாகர்கள் சிலை தனியாக செய்து பொருத்தப்பட்டது, மேலே
நீர்த்தொட்டியில் நீர் நிரப்பி நீர் வழிந்தோடுவதாகக் காட்ட முயன்றது 7 ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பப் பொறியியல் முயற்சியின் விளைவு. இன்று
மேலும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் பல்லவ காலச் சிற்பிகள் திட்டமிட்டு அமைத்த
நீர் பாயும் முறையை சிற்பத்தில் மீண்டும் காட்சிப்படுத்த தொல்லியல்துறையும் அரசும்
முயலாம்.
இந்திய அரசியலமைப்பு (Constitution of India) நூலின் 130 ஆம்
பக்கத்தில் மாமல்லபுரத்தின் சிறப்பு வாய்ந்த பல்லவர் கால பகீரதன்-கங்கை புடைப்புச்
சிற்பத்தின் ஓவியம் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் உதவி -
விக்கிபீடியா:
(1) Wiki: Mamallapuram, Arjuna's Penance (9902390324).jpg
https://ja.wikipedia.org/wiki/ファイル:Mamallapuram,_Arjuna%27s_Penance_(9902390324).jpg
(2) Wiki: File:Arjunas penance Panorama.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9f/Arjunas_penance_Panorama.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Large_Unfinished_Rock_Sculpture_Similar_To_Arjuna%E2%80%99s_Penance.jpg
---
சிற்பவிளக்கம்:
மகாபலிபுரத்து ஜைன சிற்பம். மயிலை சீனி. வேங்கடசாமி,
1950.
https://ta.wikisource.org/s/a1a5
Further Readings:
[1] Trishashti Shalaka Purusha Caritra, Helen M. Johnson, 1931.
Jainism. A Sanskrit epic poem written by Acharya Hemachandra in the
twelfth century. The work relates the history and legends of important
figures in the Jain faith. These 63 persons include: the twenty four
tirthankaras , the twelve chakravartin, the nine balabhadras, the nine
narayanas and the nine pratinarayanas. This is the English translation of the
Jain Ramayana of Hemacandra, composed between 1160 and 1172 in the Calukya
court in Gujarat.
https://archive.org/details/in.ernet.dli.2015.189073/mode/2up
https://www.wisdomlib.org/jainism/book/trishashti-shalaka-purusha-caritra
[2] Salakapurusa — According to the Jain cosmology, the śalākapurua — "illustrious or worthy persons" are 63
illustrious beings who appear during each half-time cycle.
https://en.wikipedia.org/wiki/Salakapurusa
[3] King Sagara: Hindu tradition & Jain Tradition - https://en.wikipedia.org/wiki/King_Sagara
References:
(1) Pallava Architecture-Part II: Intermediate or Mamalla period. Longhurst, A. H. 1998-Reprint. Archaeological survey of India (New Delhi), Pages 40-45
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM9k0Iy.TVA_BOK_0009006/mode/1up
(2) The Imperial Gazetteer Of India Vol-ix Madras Presidency To Multai, by Hunter W. W.1886. Vol-IX, 2nd Edition, Pages 143-150
https://archive.org/details/in.ernet.dli.2015.207379/mode/2up
(3) Playful Ambiguity and Political Authority in the Large Relief at Māmallapuram, Padma Kaimal. Ars Orientalis, Vol. 24 (1994), pp. 1-27 (27 pages).
Published by: Freer Gallery of Art, The Smithsonian Institution and Department of the History of Art, University of Michigan
https://www.jstor.org/stable/4629457
(4) The Unfinished Penance Relief Panel of Mamallapuram, IndianColumbus
https://indiancolumbus.blogspot.com/2021/06/Mamallapuram-ReliefPanel.html
(5) Mamallapuram – Incomplete Penance Panel, Saurabh Saxena
https://puratattva.in/2021/08/10/mamallapuram-incomplete-penance-panel-6956
(6) மகாபலிபுரத்து ஜைன சிற்பம். மயிலை சீனி. வேங்கடசாமி, 1950.
https://ta.wikisource.org/s/a1a5
---
Picture References:
The descent of the Ganges at Mamallapuram © The British Library:
1. John Gantz -1825:
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019wdz000004209u00000000.html
2. John Gantz -1825:
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019wdz000004206u00000000.html
3. John Gantz -1825:
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019wdz000004205u00000000.html
4. Thomas Daniell - 1799:
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019xzz000004325u00002000.html
5. Thomas Daniell - 1798:
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019wdz000001721u00000000.html
6. Anonymous - 1816 Dron Achari:
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019wdz000001068u00018000.html
7. Anonymous - 1800 Mackenzie Collection:
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019wdz000002624u00000000.html
8. Photograph by Nicholas and Co. taken in ca. 1880:
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/a/019pho0000472s1u00022000.html
---
Location References on Google Map:
https://tinyurl.com/MamallaiRockRelief1
https://tinyurl.com/MamallaiRockRelief2
_________________________


