'மெய்ப்பொருள் காண்பதறிவு' என உண்மை எதுவென்று ஆராய்ந்து அறிய விரும்புவது வள்ளுவர் வழி என்பதை நாம் அறிவோம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (அறிவுடைமை: குறள் - 423)
என எச்செய்தியை எவர் சொன்னாலும் அது உண்மையா என ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை என்று வள்ளுவர் விளக்கும் குறள் 'அறிவுடைமை' அதிகாரத்தின் கீழ் இடம் பெறுகிறது. அது இன்றைய சமூக ஊடக புரட்டுச் செய்திகளைப் பரப்புபவரிடம் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லும் குறளாக அதிகம் பயன்படும் நிலைக்கும் வந்திருக்கிறது. மெய்ப்பொருள் ... உண்மை; அந்த உண்மை என்ன என அறிவதே அறிவுடைமை. அதற்குத் தேவை ஆய்வு மனப்பான்மை, ஆய்வுக்கான வழிமுறைகளை அறிந்திருக்கும் நிலைமை. சொல்வனவற்றின் நம்பகத்தன்மை குறித்து ஐயத்துடன் நோக்கும் மனப்பான்மை.
சமயவழியில் பயணிப்போர் தொன்மக் கதைகளைக் கேட்டுப்பழகி அவற்றை நம்பியதன் காரணமாக ஆராயும் மனப்பான்மையைப் பலநூற்றாண்டுகளாகக் கைவிட்டு விட்டனர். அத்தகைய பயிற்சிமுறையின் விளைவு இன்று மக்களிடம் சொன்னதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வது, நம்புவது என்ற ஒரு மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கம் முன்னுள்ள ஒரு ஆடு சென்றால், அது சென்ற வழியில் சிந்திக்காமல் மற்ற ஆடுகளும் செல்லும் ஒரு ஆட்டுமந்தையின் இயல்பில் மக்களைக் கொண்டு வந்து விட்டுள்ளது.
இக்குறள் பிறர் கூறுவதில் உள்ள உண்மைகளைக் கண்டறிய வலியுறுத்துவது போலவே 'மெய்யுணர்தல்' அதிகாரத்தின் மற்றொரு குறள் எந்தப் பொருள் எத்தன்மையதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மையான குணத்தினை உணர்ந்து கொள்வதே அறிவுடைமை என்று மீண்டும் அறிவுறுத்துகிறது.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (மெய்யுணர்தல்: குறள் - 355)
உண்மை அறிதலே அறிவுடைமை என்பது இதனால் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இதற்கு மாறாக, மாற்றுக் கோணத்தில்,
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர் (இகல்: குறள் - 857)
என்ற குறள், ஆராய்ந்து உண்மை காணவிரும்பாதோரைக் குறித்துச் சொல்கையில்; மேன்மை தரும் உண்மைப் பொருளை அறிய விரும்பாது இருப்போர் மாறுபட்ட சிறுமதி கொண்ட அறிவற்றவர் என்கிறது.
ஆராய்வதை வள்ளுவர் பல வகையான சொற்களில் கூறுகிறார். 'ஆய்' 'ஆயும்' 'ஆய்ந்து' 'ஓர்ந்து' 'தேர்ந்து' என்ற சொற்கள் 'ஆராய்ந்து' செய்தல் என்ற பொருளில் திருக்குறளில் இடம் பெறுகின்றன. தேராது, ஓராது, நாடாது - போன்ற சொற்களும் 'ஆராயாமல்' செய்தல் என்ற பொருளில் குறட்பாக்களில் பயின்று வருகின்றன.
ஆராய்பவர் கொள்கை அல்லது கோட்பாடு என்னவாக இருக்க வேண்டும் வள்ளுவர் கூறுவதை மற்றொரு குறளின் வழி அறியலாம்.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (வினைத்திட்பம்: குறள் - 662)
ஆய்ந்தவர்-ஆராய்ந்தவர்; கோள்-கோட்பாடு. எனவே இக்குறளின் கருத்துப்படி, பொதுவாகத் தொலைநோக்குடன் சிந்தித்தலும், இடையூறு ஏற்படுகையில் தளராது இருப்பதும் ஆய்வாளர் நெறி என்று இக்குறள் மூலம் அறியலாம். செயல்வழி நடைமுறையில் செயலை முடிக்கும் வகையில் ஆய்ந்தவர் கொள்கையானது செயல் ஆற்றும்போது இடையூறு வரும் என முன்னே அறிந்து அந்த இடையூற்றை நீக்குதலும், இடையிலே ஊறு நேரின் அதற்குத் தளராதிருத்தலும் ஆகிய இந்த இரண்டுமாகும். ஆகவே, இதுவே ஆராய்ந்து அறிய விரும்புவோரிடம் நிலவ வேண்டிய வினைத்திட்பக் கொள்கை
இக்குறளின் கருத்து எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை,
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (தெரிந்து வினையாடல்: குறள் - 517)
என்ற குறள் விளக்குகிறது. ஒரு செயலை எந்தெந்த வழிமுறைகளால் எவரால் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் என்பதைக் கண்டறிந்து (ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து) அதை அவரிடம் ஒப்படைக்கவேண்டும். இது நடைமுறை வாழ்க்கையில் நாம் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மற்றொரு சூழ்நிலை.
இன்றைய நவீனக் காலத்தில் ஆய்வுக்குரிய நெறிகள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. தனது ஆய்வுக் கேள்விக்கான உண்மையை அறிய ஆய்வாளர்கள் தரவுகளைத் திரட்டும்பொழுது அத்தரவுகளின் உண்மைத்தன்மை அறிவது இன்றியமையாதது என்பது ஆய்வுமுறையின் அடிப்படை. ஆய்வின் கேள்வியொன்று செய்தி 'அகச்சான்றுகள்' மற்றும் 'புறச்சான்றுகள்' கொண்டு சரிபார்க்கப்பட்டு அதன் உண்மைத்தன்மை மதிப்பிடப்படும்.
எடுத்துக் காட்டாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் யவனருடன் கடல்வழி வணிகம் செய்ததாகக் கூறப்படுவது உண்மையா என்று நாம் அறிய விரும்புவோம் என்று கொள்வோம். இந்த ஆய்வுக் கேள்விக்கான தரவை சங்க இலக்கியத்தில் தேட முற்படுவோம் . எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் குறிப்பிடும்,
"சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ" (அகநானூறு: 149, 8-11)
என்ற பாடல் வரிகள் தமிழர் யவனர்களுடன் வணிகம் செய்தார் என்ற சங்க இலக்கியப் பாடல் தரும் சான்றாகும். இச்சான்று அகச்சான்று வகையில் அடங்கும். இலக்கியம் தமிழரின் கடல் வணிகத்தைக் கூறுகிறது என்று நாம் சான்றுடன் குறிப்பிடலாம்.
இத்துடன், ரோமாபுரிப் பேரரசின் வரலாற்றுக் குறிப்பொன்றில், தமிழக முத்துக்களை ரோமப்பேரரசின் பெண்கள் அதிகம் வாங்கி அலங்கரித்துக் கொள்வதால் அவர்களின் அரசின் பொன் அதிக அளவில் தமிழகத்திற்கு வருகிறது. இதைத் தடை செய்யவேண்டும் என்று பிளினி ( Pliny the Elder, in 77 CE, called India “the sink of the world's gold!”) என்பவர் குறிப்பிடுவது வெளியிலிருந்து நமக்குக் கிடைக்கும் புறச்சான்று. இதனால் தமிழரும் யவனரும் வணிகத்தில் ஈடுபட்டனர் என்று இருவேறு தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது. இங்கு இருவேறு கோணத்தில் கிடைத்த தரவுகள் ஒப்பிடப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் யவனர்களுடன் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது தமிழ்ப் புலவர்களின் கற்பனை அல்ல என்பது தெளிவாகிறது.
'டிரையாங்குலேஷன் ஆஃப் டேட்டா' (triangulation of data) என்ற தரவுகள் உறுதிப்படுத்தும் மற்றொரு முறையில் மூன்றாவதாகவும், மற்றொரு சான்று வேறொரு கோணத்தில் அதே செய்தியை உறுதிப்படுத்த வேண்டும் (Triangulation refers to the use of multiple methods or data sources in qualitative research to develop a comprehensive understanding of phenomena - Patton, 1999). இதனை மும்முனைத் தரவு ஆய்வு முறை எனலாம்.
தமிழரின் பண்டைய கடல்வழி வணிகத்திற்கான மூன்றாம் கோணத்தில் கிடைக்கப்பெற்ற தரவு குறித்துத் தேடுவோமானால், இந்திய-ஐரோப்பியக் கடல்வழிப் பாதையில், இடையில் உள்ள ஓமன் நாட்டில் கிடைத்த "ணந்தை கீரன்" என்று 'தமிழி' எழுத்தில் கிடைத்த மட்பாண்ட ஓடு அதே காலகட்டத்தில் கிடைக்கும் ஒரு தொல்லியல் சான்று (Carrer & Gheller, 2015). இது தமிழரின் கடல்வழி வணிகத்தை மூன்றாவது கோணத்திலும் உறுதி செய்துவிடுகிறது.
இது போன்று தகவலின் உண்மைத்தன்மையை வேறுபட்ட பல மூலங்களில் கிடைக்கும் தரவுகளை ஒப்பிட்டு நம்பகத்தன்மையை மதிப்பிடும் முறைகள் இன்றைய காலத்தின் ஆய்வுநெறிக்கான புத்துருவாக்கம் என நாம் கருதுவோமானால், திருவள்ளுவர் 'ஒற்றாடல்' அதிகாரத்தில் எழுதியுள்ள குறட்பாக்கள் சொல்லும் கருத்துக்களை நாம் மீள்பார்வை செய்ய வேண்டும்.
தரவுகளின் உண்மை அறிய வள்ளுவர் காட்டும் வழிமுறைகளை இனி காண்போம். ஒரு அரசர் ஒற்றர் மூலம் அறியும் உளவுச் செய்தியை எவ்வாறு ஆராய வேண்டும் என்று அறிவுறுத்த விரும்பும் வள்ளுவர்,
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் (ஒற்றாடல்: குறள் - 588)
என்கிறார். ஒரு உளவாளி சேகரித்துச் சொன்ன செய்திகளை மற்றொரு உளவாளி மூலம் முன்னர் கிடைத்த ஒற்றுச் செய்தியினை ஒப்பிட்டு நோக்கி உண்மை அறிய வேண்டும் என்பது குறள் சொல்லும் கருத்து. ஒரு ஒற்றர் சொல்லும் உளவுச் செய்தியை அப்படியே நம்பக்கூடாது, மற்றொரு ஒற்றர் கொண்டு வரும் செய்தியும் அதே தகவலைத் தந்தாலே அரசர் அதனை உறுதியாக நம்பி முடிவெடுக்கலாம்.
இவ்வாறு தரவுகளை ஒப்பிடச் சொல்லும் வள்ளுவர் அடுத்த குறளிலேயே மூன்றுகோணங்களில் அலசி ஆராயவும் (triangulation of data) சொல்கிறார்.
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும் (ஒற்றாடல்: குறள் - 589)
ஒருவரை மற்றொருவர் அறியாத வகையில் மூன்று வெவ்வேறு ஒற்றர்களை ஒற்றறிய அனுப்பி, அந்த மூவரும் அறிந்து வந்து சொல்லும் கருத்தில் ஒற்றுமை இருப்பின் அதை உறுதியான உண்மை என அறியலாம் என்பது இந்தக் குறள் சொல்லும் கருத்து.
தரவுகளை ஆராய்வது போன்றே, ஆய்வு செய்யும் ஒருவர் தான் ஆய்வு செய்யும் புலத்தில் இதற்கு முன்னர் ஆய்வு செய்தோர் என்னென்ன கண்டுபிடித்து அறிந்து, அதைக் கொண்டு எந்தெந்த முடிவுகளை எடுத்தார்கள் என்பது குறித்த 'ஆய்வுப் பின்புலம்' (Literature Review) அறிந்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆய்வுக் கட்டுரை எழுதுபவர் அப்பொருள் குறித்து இதுவரை என்னென்ன கருத்துகள் உள்ளன என்று நூல்கள் பல படித்து, அக்கருத்துக்களை மீள்பார்வை செய்து, தனது தேடல் கேள்வி குறித்துத் தான் கண்டறிந்ததைக் கூறுவது ஆய்வின் நடைமுறை. இந்நாட்களில் முறையான ஆய்வுக் கட்டுரை எழுதும் கட்டமைப்பில் இது இன்றியமையாததாகவும் அமையும். இம்முறையை வள்ளுவர் குறிப்பிடுவதையும் காணலாம்.
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல் (வினைசெயல்வகை: குறள் - 677)
செய்ய வேண்டிய செயலைச் செய்கின்றவன் செய்முறையாவது, அச்செயலின் நுட்பங்களை முன் அறிந்தவன் கூறியவற்றைக் கருத்தில் கொள்வது ஆகும் என்பது இக்குறள் கூறும் கருத்து.
திருவள்ளுவர் ஆராய்ந்து அறிய வேண்டிய தேவை குறித்தும், எந்தெந்த சூழலில் கவனமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், எத்தகைய ஆய்வு நெறியைக் கடைபிடிக்க வேண்டும் என்று பற்பல குறள்களில் விரிவாக விளக்குவதிலிருந்து வள்ளுவர் ஓர் சிறந்த ஆய்வாளராக இருந்திருக்கிறார் என்று அறிய முடிகிறது. அவ்வாறு உலக இயல்புகளைக் கவனமாக ஆராய்ந்த அவரது முடிவுகளே திருக்குறள்களாக மலர்ந்து உலகில் அனைவரும் பின்பற்ற வழிகாட்டியாக அமைந்துள்ளது.
ஆய்விற்குத் துணை செய்தவை:
1. எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், அகநானூறு பாடல் (149. பாலை).
2. Healy, John F. (1991). Pliny the Elder. Natural History: A Selection. (77 CE) (XXXII, chaps. 21, 23), p. 281. Penguin Books. ISBN 0-14-044413-0.
3. Realistic Evaluation, Michael Quinn Patton (1999), American Journal of Evaluation, Volume: 20 issue: 2, page(s): 385-388, Issue published: June 1, 1999
4. Francesco Carrer, Viola Gheller (2015), Invisible Cultures: Historical and Archaeological Perspectives, p.233. Cambridge Scholars Publishing.
5. தமிழ் இலக்கியத் தொடரடைவு (Concordance for Tamil Literature). ஆக்கம் முனைவர்.ப.பாண்டியராஜா, http://tamilconcordance.in/table-KURAL.html
6. குறள் திறன் - http://kuralthiran.com/Home.aspx
நன்றி:
ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா சிறப்பு மலர்
டிசம்பர் 4, 2019
https://mupporul.blogspot.com/2019/11/blog-post_15.html
#திருக்குறள், #ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா சிறப்பு மலர், #Themozhi
